ADDED : அக் 13, 2024 04:03 AM

'சென்னை வானொலி மற்றும் துார்தர்ஷன் தமிழ் ஆகிய இரண்டுமே, மத்திய அரசுக்கு எதிராக செயல்படுகிறது' என, மத்திய அரசுக்கு புகார் அளிக்கப்பட்டு உள்ளதாம். குறிப்பாக, சீனியர் எச்.ராஜா இது குறித்து பிரதமருக்கே தெரிவித்து விட்டாராம். 'பா.ஜ.,வின் எதிர்க்கட்சிகளுக்கு ஆதரவாக செயல்படும் ஆட்கள் துார்தர்ஷன் தமிழில் அதிகரித்து உள்ளது தான் இதற்கு காரணம்' எனவும் ராஜா தெரிவித்து உள்ளாராம்.
சமீபத்தில், நடந்து முடிந்த ஹரியானா தேர்தல் குறித்து நடந்த விவாதங்களில், துார்தர்ஷன் தமிழ் ஒருதலைப்பட்சமாக செயல்பட்டதாம். 'பா.ஜ.,விற்கு எதிராக விவாதத்தில் பங்கேற்றவர் பேச, பா.ஜ., சார்பாக யாருமே பேச அனுமதிக்கப்படவில்லை' என, குற்றம் சாட்டப்படுகிறது.
'தமிழகத்தை சேர்ந்த முருகன், செய்தி ஒலிபரப்பு துறையின் இணை அமைச்சராக இருந்தும், எப்படி துார்தர்ஷன் தமிழ் இப்படி செயல்படுகிறது?' என, துறையின் சீனியர் அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் கேள்வி எழுப்பி உள்ளதாக கூறப்படுகிறது.
தனியார் தொலைக்காட்சிக்கு சமமாக துார்தர்ஷன் தமிழ் செயல்பட வேண்டும்; இதற்கான பொறுப்பு முருகனுக்கு கொடுக்கப்பட்டுள்ளதாம். அத்துடன், 'மோடி அரசின் சாதனைகளை, மக்களுக்கு அதிக அளவில் கொண்டு செல்ல, துார்தர்ஷன் தமிழ் பணியாற்ற வேண்டும்' எனவும் சொல்லப்பட்டு உள்ளதாம்.
அனைத்து துார்தர்ஷன் சேனல்களையும் நிர்வகிக்கும், பிரசார் பாரதியின் தலைவர், நவ்நீத் குமார் சேகல், விரைவில் சென்னை வானொலி மற்றும் துார்தர்ஷன் தமிழ் சேனல் ஆகியவற்றை கண்காணிக்க சென்னை வர இருக்கிறாராம்.