UPDATED : ஆக 17, 2025 08:12 AM
ADDED : ஆக 17, 2025 12:49 AM

சென்னை: சமீபத்தில் தி.மு.க.,வில் இணைந்த முன்னாள் எம்.பி., மைத்ரேயன் குறித்து, தி.மு.க., -- எம்.பி.,க்களிடையே பலவித கருத்துக்கள் நிலவுகின்றன. 'இவரால் கட்சிக்கு எந்த பலனும் ஏற்படப் போவதில்லை; அப்படியிருக்க எதற்கு இவர் தி.மு.க.,வில் சேர்க்கப்பட்டார்?' என, பலரும் கருதுகின்றனராம்.
'முன்னாள், அ.தி.மு.க., அமைச்சர் அன்வர் ராஜா இணைந்ததிலாவது குறைந்த பட்சம் சிறுபான்மையினர் ஓட்டுகள் கிடைக்கும். ஆனால், மைத்ரேயனால் கட்சிக்கு என்ன கிடைக்கும்?' என்ற கேள்விகள் எழுந்துள்ளன.
பா.ஜ., - அ.தி.மு.க., என அடிக்கடி கட்சி மாறியவர், மைத்ரேயன். முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வத்தின் தர்ம யுத்தத்தில் பங்கெடுத்தவர் இவர். டில்லியில், தன் அரசு பங்களாவில், அவரை தங்க வைத்ததுடன், பழனிசாமிக்கு எதிராக மற்ற, அ.தி.மு.க.,வினரை பன்னீர்செல்வம் பக்கம் இழுக்க முயற்சி செய்தவர்.
பன்னீர்செல்வத்திற்கு, பா.ஜ., தலைமை ஆதரவளித்த சமயத்தில், 'எப்படியாவது பெரும்பாலான அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்களை உங்களுடன் அழைத்து வாருங்கள்; உங்களை முதல்வராக்குகிறோம்' என, பா.ஜ., தலைமை கூறியது. அப்போது, 'நிச்சயம் செய்து முடிக்கிறோம்' என, பன்னீர்செல்வத்தோடு, பா.ஜ.,விற்கு உறுதி அளித்தவர் மைத்ரேயன்.
ராஜ்யசபா எம்.பி.,யாக, 14 ஆண்டுகள் பணியாற்றிய மைத்ரேயன், 'மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா குறித்து, பா.ஜ.,வைச் சேர்ந்த மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் அருண் ஜெட்லியிடம் என்ன கூறினார்? மைத்ரேயன் குறித்து, ஜெயலலிதாவின் கருத்து என்ன? இது குறித்து ஜெட்லியிடம், ஜெ., என்ன கூறினார்' என்பது குறித்த தகவல்களை அ.தி.மு.க., விரைவில் வெளியிட உள்ளதாம்.
ஜெயலலிதா ராஜ்யசபா எம்.பி.,யாக இருந்தபோது, மாருதி கார் ஒன்றை டில்லியில் பயன்படுத்தி வந்தார். அந்த கார், மைத்ரேயன் எம்.பி.,யாக இருந்தபோது, அவரது அரசு பங்களாவில் வைக்கப்பட்டிருந்தது. இப்போது 'ஜெ., பயன்படுத்திய கார் எங்கே இருக்கிறது?' என அ.தி.மு.க., எம்.பி.,க்களுக்கு தெரியவில்லையாம்.
'மைத்ரேயன் ஒரு டெட் வுட் எனப்படும் யாருக்கும் பயனற்றவர்' என கிண்டலடிக்கின்றனர் பா.ஜ., தலைவர்கள். அ.தி.மு.க.,வினரோ, 'மைத்ரேயன் தி.மு.க.,விற்கு போனதால் எங்களுக்குத் தான் பயன்' என்கின்றனர்.

