UPDATED : ஜன 29, 2024 02:33 AM
ADDED : ஜன 29, 2024 02:26 AM

தேசிய ஜனநாயகக் கூட்டணியில், நிதீஷ் குமாருக்கு கதவுகள் அடைக்கப்பட்டு விட்டதாக பா.ஜ., ஏற்கனவே அறிவித்த நிலையில், தற்போது அவரை கூட்டணிக்குள் ஏன் பா.ஜ., சேர்த்துக் கொள்ள வேண்டும். இதனால், பா.ஜ., பெறப்போகும் பயன் என்ன என்பது குறித்து விரிவாக பார்ப்போம்.
வரும் லோக்சபா தேர்தலில், பா.ஜ.,வை வீழ்த்துவதற்காக எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து உருவாக்கியுள்ள, 'இண்டியா' கூட்டணி உருவாக முக்கியப் பங்காற்றியவர் நிதீஷ்குமார்.
அவரே தற்போது அந்த கூட்டணியை புறக்கணித்துவிட்டு வெளியேறுவது, பா.ஜ.,வுக்கு சாதகமாகப் பார்க்கப்படுகிறது.
பின்னடைவு
மேலும், பீஹாரில் உள்ள 40 லோக்சபா தொகுதிகளில் இண்டியா கூட்டணி பலமுடன் இருப்பதாக பார்க்கப்பட்ட நிலையில், நிதீஷின் இந்த திடீர் 'பல்டி', இண்டியா கூட்டணியினருக்கு பின்னடைவை ஏற்படுத்தும்.
நிதீஷ் குமாரை மீண்டும் கூட்டணிக்குள் சேர்த்துக் கொள்வதை பீஹார் பா.ஜ., தலைவர்கள் பலர் விரும்பவில்லை என்ற போதிலும், வேறு சில அரசியல் கணக்குகளுடன் பா.ஜ., தலைமை அதற்கு பச்சைக்கொடி காட்டியுள்ளது.
கடந்த 10 ஆண்டுகளில் ஐந்து முறை கூட்டணி மாறிய நிதீஷ் குமாருக்கு, பீஹாரில் மக்கள் ஆதரவு குறைந்துள்ளது.
கடந்த 2010 பீஹார் சட்டசபை தேர்தலில் 115 இடங்களில் வென்ற அவரது ஐக்கிய ஜனதா தளம், 2020ல் 43 இடங்களில் மட்டுமே வென்றது.
அவரை கூட்டணிக்குள் சேர்த்து, தொடர்ந்து பீஹார் முதல்வராக நீடிக்க அனுமதித்தாலும், மாநில அரசு பா.ஜ.,வின் கட்டுப்பாட்டில் தான் செயல்படும் என்பதை அக்கட்சி தலைமை நன்கு உணர்ந்துள்ளது.
இதுவும் அவரை கூட்டணிக்குள் சேர்க்க முக்கிய காரணமாகக் கூறப்படுகிறது.
மத்திய பிரதேசம், மஹாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.,க்கள் அணி மாறி வந்த காரணத்தால், அவை பா.ஜ., செய்த சதியாக பார்க்கப்பட்டது.
ஆனால், பீஹாரை பொறுத்தவரை பா.ஜ., மீது மக்கள் குற்றம் சொல்ல வாய்ப்பு இல்லை என்பதும் அவர்களுக்கு சாதகமான அம்சமாக உள்ளது.
இவை அனைத்தையும் தாண்டி, பீஹாரில், 2.5 சதவீத பெரும்பான்மை வகிக்கும் குர்மி இனத்தவர்கள் தேர்தல் முடிவுகளில் முக்கியப் பங்கு வகிக்கின்றனர்.
குறிப்பாக கிழக்கு உத்தர பிரதேசத்தில் இவர்களின் ஓட்டுகள் தேர்தல் வெற்றிக்கு வழிவகுக்கின்றன.
அழுத்தம்
உ.பி.,யில் நேரடியாக 20 லோக்சபா தொகுதிகள் குர்மி இனத்தவர்களின் கட்டுப்பாட்டில் உள்ளன. இந்த இனத்தைச் சேர்ந்த நிதீஷ் குமார் தே.ஜ., கூட்டணியில் இருப்பது, பீஹார் மற்றும் உ.பி., - பா.ஜ.,வுக்கு சாதகமாக அமையும் என அக்கட்சி கணக்கு போடுகிறது.
இண்டியா கூட்டணியில் இருந்து நிதீஷ் வெளியேறுவதாக அறிவித்தவுடன் அதுகுறித்து கருத்து தெரிவித்த ஐக்கிய ஜனதா தள தலைவர் கே.சி.தியாகி, தொகுதிப் பங்கீட்டில் காங்., ஆதிக்கம் செலுத்துவதாகவும், மாநிலக் கட்சிகளை ஒழித்துக் கட்டுவதே அவர்களது குறிக்கோளாக இருப்பதாகவும் தெரிவித்தார்.
நிதீஷ் வெளியேற்றத்தை தொடர்ந்து, இண்டியா கூட்டணியில் உள்ள மற்ற கட்சியினர், மாநிலங்களில் அதிக இடங்களை கேட்டு காங்., தலைமைக்கு அழுத்தம் கொடுக்க வாய்ப்புள்ளது.
நிதீஷை பின்பற்றி மேலும் சில மாநில கட்சிகள் இண்டியா கூட்டணியில் இருந்து வெளியேற வாய்ப்புள்ளதாகவும் பா.ஜ., கணக்கு போடுகிறது.
பல்வேறு மாநிலங்களில் எலியும் பூனையுமாக உள்ள கட்சியினர் ஒரே கூட்டணியில் இணைந்தால், அக்கூட்டணி நிலையானதாக இருக்காது என, பா.ஜ., ஆரம்பம் முதலே கூறி வருவது தற்போது உறுதியாகி உள்ளது.
என்ன கோபம்?
'இண்டியா' கூட்டணி கட்சியினர் நடத்திய ஆலோசனை கூட்டத்தில், தன்னைத் தான் கூட்டணியின் தலைவராக தேர்வு செய்வர் என நிதீஷ் குமார் நினைத்திருந்தார். ஆனால், மம்தா பானர்ஜி, ராகுல் ஆகியோரின் உள்ளடி அரசியல் காரணமாக, கார்கே தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.
இது, நிதீஷ் குமாருக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது. ஏனெனில், கடந்த ஒரு ஆண்டாகவே, எதிர்க்கட்சி கூட்டணியின் பிரதமர் வேட்பாளராக தன்னை முன்னிறுத்துவதில், அவர் ஆர்வம் காட்டி வந்தார்.
இண்டியா கூட்டணியை உருவாக்குவதற்கு அவர் தீவிரம் காட்டியதும் இது தான் காரணமாக கூறப்பட்டது.
கூட்டணி உடையும்
ஆனால், தான் நினைத்தது நடக்கவில்லை என்றதும், கூட்டணியிலிருந்து வெளியேற அவர் முடிவு செய்து விட்டார்.
மேலும், லோக்சபா தேர்தலில் பீஹாரில், ஐக்கிய ஜனதா தளம், ராஷ்ட்ரீய ஜனதா தளம் ஆகிய கட்சிகள், தலா, 17 தொகுதிகளில் போட்டியிட விரும்பின.
கூட்டணியில் உள்ள காங்கிரஸ் உள்ளிட்ட மற்ற கட்சிகளுக்கு, மொத்தமாக ஐந்து இடங்களை மட்டுமே ஒதுக்க முடியும் சூழல் நிலவியது.
இதனால், கடைசி நேரத்தில் கூட்டணி உடையும் என கருதிய நிதீஷ், சுதாரித்துக் கொண்டு, முன்கூட்டியே கூட்டணியிலிருந்து கழன்று விட்டதாகவும் கூறப்படுகிறது.
லாலு பிரசாத் மகள் கிண்டல்
பீஹாரில், 2020 சட்டசபை தேர்தலில்,
பா.ஜ., ஆதரவுடன் கூட்டணி அரசு அமைத்த ஐக்கிய ஜனதா தள தலைவர் நிதீஷ் குமார்,
கருத்து வேறுபாடால் அக்கூட்டணியில் இருந்து விலகி, 2022ல், முன்னாள்
முதல்வர் லாலு பிரசாத் யாதவின், ராஷ்ட்ரீய ஜனதா தளத்தின் ஆதரவுடன் மீண்டும்
முதல்வர் ஆனார்.
தொடர்ந்து, லாலு மகன் தேஜஸ்வி யாதவ் துணை
முதல்வரானார். இந்நிலையில், ராஷ்ட்ரீய ஜனதா தளத்துடன் ஏற்பட்ட பிரச்னையால்,
மீண்டும் முதல்வர் பதவியை, நிதீஷ் குமார் நேற்று ராஜினாமா செய்தார்.
இது
தொடர்பாக, லாலு பிரசாத்தின் மகள் ரோஹிணி ஆச்சார்யா, சமூக வலைதளத்தில்
நேற்று வெளியிட்ட பதிவில், 'குப்பை, குப்பைத் தொட்டிக்கு போய் விட்டது' என,
நிதீஷ் குமாரை விமர்சித்துள்ளார்.
சமீபத்தில், சமூக வலைதளத்தில்
வெளியிட்ட மற்றொரு பதிவிலும், நிதீஷ் குமாரை கடுமையாக தாக்கி ரோஹிணி
ஆச்சார்யா பதிவிட்டார். இது சர்ச்சையை ஏற்படுத்தியதை அடுத்து, அந்தப் பதிவை
அவர் நீக்கினார்.
- நமது சிறப்பு நிருபர் -