sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

ப்ரீமியம்

/

மணிப்பூரில் நிஜமாகவே என்ன தான் பிரச்னை?

/

மணிப்பூரில் நிஜமாகவே என்ன தான் பிரச்னை?

மணிப்பூரில் நிஜமாகவே என்ன தான் பிரச்னை?

மணிப்பூரில் நிஜமாகவே என்ன தான் பிரச்னை?

11


UPDATED : அக் 01, 2024 01:01 AM

ADDED : அக் 01, 2024 12:16 AM

Google News

UPDATED : அக் 01, 2024 01:01 AM ADDED : அக் 01, 2024 12:16 AM

11


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மணிப்பூர் மக்கள் யாருமே அம்மண்ணில் தோன்றியவர்கள் அல்ல. ஆரம்ப காலத்தில், அண்டை தேசங்களில் இருந்து குடியேறிய மங்கோலிய இனக்கூறு உடைய மக்களே இவர்கள். இவர்களில், 'மெய்தி' என்றழைக்கப்படும் பழங்குடிகளே மூத்த குடிகள். அதாவது, முதலில் குடியேறியவர்கள்.

இவர்களுக்கு பின் குக்கிகள், அடுத்து நாகர்கள் மற்றும் பிற பழங்குடிகள் மணிப்பூருக்கு வந்து, ஆளாளுக்கு ஒரு பிராந்தியத்தில் வாழத் துவங்கினர். பவுத்த கலாசார பாரம்பரியம் உடைய மெய்தியினருடன் ஒப்பிடுகையில், குக்கிகள் முரட்டு குணம் படைத்தவர்கள். பவுத்த மன்னர் ஆண்டு வந்த மணிப்பூரை, 1891ல் ஆங்கிலேயர்கள் கைப்பற்றினர். 1949 அக்., 15ல் மணிப்பூர், இந்தியாவுடன் இணைக்கப்பட்டது. அப்படி, ஆங்கிலேய ஆட்சி முறை மாறினாலும், மணிப்பூரில் கிறிஸ்துவம் புரையோடி இருந்தது.

பள்ளத்தாக்குகளையும், மலைக்காடுகளையும் நில அமைப்பாக உடைய மணிப்பூரில், விவசாயமும், வன விளைச்சல்களுமே பிரதான தொழில். பள்ளத்தாக்குகளில் பெரும்பாலும் மெய்தியினரும், மலைகளில் குக்கிகளும் வாழ்ந்து வருகின்றனர். 1949ல் மணிப்பூர் இந்தியாவுடன் இணைக்கப்பட்ட போதே, எஸ்.டி., எனப்படும் பழங்குடியினர் அந்தஸ்தை மெய்தியினர் இழந்து விட்டதாகக் கூறப்படுகிறது. இதில் தான், முதல் பிரச்னையே.

கடந்த 1972 ஜன., 21ல் மணிப்பூர், இந்தியாவின் 19வது மாநிலமாக அங்கீகரிக்கப்பட்டது. 1992ல் மணிப்பூரி ஆட்சி மொழியாக்கப்பட்டது. 22,372 சதுர கி.மீ., பரப்பளவு உடைய மாநிலத்தின் தற்போதைய 35 லட்சத்திற்கும் மேலான மக்கள் தொகையில், 54 சதவீதம் மெய்தியினரும், 41 சதவீதத்துக்கும் மேலாக குக்கியினரும் உள்ளனர். மணிப்பூரின் தலைநகரம் இம்பால். தற்போது, பா.ஜ., ஆட்சி செய்யும் மணிப்பூர் சட்டசபையில், 60 எம்.எல்.ஏ.,க்களில் 40 எம்.எல்.ஏ.,க்கள் மெய்தியினர்; 20 எம்.எல்.ஏ.,க்கள் குக்கியினர்.

மியான்மரின் 390 கி.மீ., துாரத்தை எல்லையாக உடைய மணிப்பூரில் நடந்த அன்னிய குடியேற்றங்களை, அரசியல் லாபத்திற்காகவே முந்தைய அரசுகள் கண்டு கொள்ளவில்லை. மதச்சார்பு மற்றும் தங்களுக்கான மரபணுவின் பலம் கூடும் என்பதால் குக்கிகளும் எதிர்க்கவில்லை. எதிர்த்தவர்கள் மெய்தியினர் மட்டுமே.

இப்படி சட்டவிரோதமாக குடியேறிய வந்தேறிகள் போதை வணிகத்தில் முன்னேறியும், எஸ்.டி., எனப்படும் பழங்குடியினர் அந்தஸ்துடன் குக்கிகள் அரசின் சலுகைகளை நோகாமல் அனுபவித்து வந்ததையும் கண்டு, தாங்கள் சொந்த மண்ணிலேயே புறக்கணிக்கப்படுவதாக உணர்ந்த மெய்தியினர், தங்களையும் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்கும்படி அரசிடம் கோரிக்கை வைத்தனர்; வழக்கும் தொடுத்தனர்.

போதைப் பொருட்களின் மூலப்பொருளான பாப்பி செடிகள், இந்தியாவிலேயே அதிகமாக பயிரிடப்படுவது மணிப்பூரில் தான். குக்கிகளாலும், மியான்மரின் வந்தேறிகளாலும் மலைப் பகுதிகளில் பயிரிடப்படும் பாப்பி செடிகள், அறுவடைக்கு பின் மியான்மர், தாய்லாந்து போன்ற கீழ்திசை நாடுகளுக்கு கடத்தி செல்லப்பட்டு, அங்கு பல வகையான விலையுயர்ந்த போதைப் பொருட்களாக மாற்றி தயாரிக்கப்பட்டு, சர்வதேச அளவில் கோடிக்கணக்கில் மார்க்கெட்டிங் செய்யப்படுகிறது.

மெய்தி சமூகத்தினர் தங்களுக்கும் பழங்குடி அந்தஸ்து கோரிய பின்னணியில், இதுவும் ஒன்றாகும். பெரும்பான்மையினராகவும், செல்வந்தர்களாகவும் இருந்து வரும் மெய்தியினருக்கு, பழங்குடியினர் அந்தஸ்து கொடுத்தால், தங்களின் வாழ்வாதாரம் கெடும் என்றும், மேலும் மெய்தி இன அதிகாரிகள் அதிகம் இடம் பெற்ற மாநில அரசு, போதை வஸ்துக்கள் பயிரிடுவதையும், அதன் வணிகத்தின் மீதும் தொடர் நடவடிக்கை எடுத்து வந்தால், அது தங்களின் பிழைப்பை வேரோடு சாய்க்கும் செயல் என்றும் கூறி, ஆட்சியாளர்களை குக்கிகள் எதிர்த்து வந்தனர்.

கடந்த 2019 முதல், 18,000க்கும் அதிகமான ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த போதைப் பயிர்களையும் மற்றும் கடத்தும் போது பறிமுதல் செய்யப்பட்டதையும் சேர்த்து அழிக்கப்பட்டவையின் சர்வதேச மதிப்பு 4,600 கோடி ரூபாய். மேலும், 2022ல் மட்டும் கடத்தலில் கைப்பற்றப்பட்ட போதைப் பொருட்களின் மதிப்பு 1,600 கோடி ரூபாய்க்கும் மேல்.

இவற்றில் சம்பந்தப்பட்ட, 900க்கும் மேற்பட்ட குற்றவாளிகள் கைது செய்யப்பட்டதுடன், கடத்தல் வழித்தடங்களும் அடைக்கப்பட்டன. இப்படியான பா.ஜ., அரசின் தொடர் நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்ட குக்கிகள், அடுத்து என்ன செய்யலாம் என்று யோசித்துக் கொண்டிருந்தனர்.

இந்தச் சூழ்நிலையில் தான், ஏற்கனவே மெய்தியினர் தொடர்ந்திருந்த வழக்கில் கடந்தாண்டு ஏப்ரல் 20ல் மணிப்பூர் உயர் நீதிமன்றமானது, மெய்தி இனத்தவரையும் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்குமாறு மத்திய, மாநில அரசுகளுக்கு பரிந்துரைத்து தீர்ப்பு வழங்கியது. அவ்வளவு தான்...

தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து, குக்கியின மாணவர் அமைப்பினர், மே 3ல் நடத்திய கண்டன பேரணியில் வெடித்த கலவரம் படிப்படியாக மாநிலம் முழுதும் பரவியது.

பா.ஜ., - எம்.எல்.ஏ.,க்கள் மற்றும் அமைச்சர்களின் வீடுகளுக்கு தீ வைக்கப்பட்டன. ஜூன் 15ல் இம்பாலில் மத்திய வெளியுறவு துறை இணை அமைச்சரின் வீட்டை 1,000க்கும் மேற்பட்ட குக்கிகள் கூடி தீ வைத்தனர். அத்துடன், காவல் நிலையங்களை தாக்கி ஆயிரக்கணக்கான நவீன ரக ஆயுதங்கள் கொள்ளையடிக்கப்பட்டன.

ஏராளமான ஹிந்து கோவில்களும், பதிலடியாக சர்ச்சுகளும் சேதப்படுத்தப்பட்டன. இரு தரப்பினரின் வசிப்பிடங்களும் தீக்கிரையாகின. பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கானோர் அரசு முகாம்களிலும், அசாம் ரைபிள்ஸ் ஏற்படுத்திய முகாம்களிலும் தங்க வைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டனர்.

ஜனநாயகத்தின் நான்காவது துாண் என்கிற நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் விதமாக, மக்களை பிரிக்கும்படியாக செயல்பட்டு வரும் சில செய்தி ஊடகங்கள், வழக்கம் போல செய்திகளை இரட்டிப்பு செய்து வெளியிட்டு திருப்தி அடைந்தன.

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஜூன் 26 முதல் நான்கு நாட்கள் மணிப்பூரில் தங்கி, கலவரத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு, கலவரத்தை கட்டுப்படுத்துவதற்கான செயல் திட்டங்களை வகுத்து கொடுத்தார். பின், எதிர்க்கட்சிகளின் இளவரசரான ராகுல், குக்கிகள் தங்க வைக்கப்பட்டுள்ள முகாம்களுக்கு சென்று, வழக்கமாக மத்திய, மாநில அரசுகள் செயலிழந்து விட்டன என்று பேட்டியளித்தார்.

கலவரம் துவங்கிய இரண்டாம் நாளே, அதாவது மே 5ல், இரு குக்கியின பெண்கள் நிர்வாணமாக ஊர்வலமாக அழைத்து செல்லப்பட்ட, 'வாட்ஸாப்' பதிவை திட்டமிட்டே ஒன்றரை மாதம் கழித்து, ஜூலை 20ல் பார்லிமென்டின் மழைக்கால கூட்டத்தொடர் கூடுவதற்கு முதல் நாள் பரவச் செய்ததால், மீண்டும் கலவரம் தீவிரமானது. சொல்லி வைத்தது போல, மறுநாள் எதிர்க்கட்சி எம்.பி.,க்கள் இரு சபைகளையும் நடத்த விடாமல் முடக்கினர்.

கலவரத்தின் வீரியத்தை உள்வாங்கிய மணிப்பூர் உயர் நீதிமன்றம், தன் தீர்ப்பை நிறுத்தி வைத்ததுடன், 2024 பிப்., 21ல் சர்ச்சைக்குரிய பத்தியை நீக்கியது. இருப்பினும், கலவரம் ஓய்ந்தபாடில்லை. அங்கொன்றும், இங்கொன்றுமாக நடந்து கொண்டு தான் இருக்கிறது.

மணிப்பூர் கலவரத்தை பொறுத்தமட்டில், எதிர்க்கட்சிகள் குக்கியினரை அரசுக்கும், மெய்தியினருக்கும் எதிராக துாண்டி விடுவதால், ஆளும் பா.ஜ.,வினர் மெய்தியினருக்கு ஆதரவாக செயல்படுகின்றனர் என்பதே தெளிவான உண்மை. ஓட்டு வங்கி அரசியலின் மகத்துவமும் இதுதான்.

மணிப்பூரில் நடக்கும் மோதல்கள் முற்றிலும் சமூகம் சார்ந்ததே தவிர, மதம் சார்ந்ததில்லை என்பதே யதார்த்தமான உண்மை. மெய்தியினரில் 10 சதவீதம் பேர் கிறிஸ்துவர்களாகவும், அதேபோல குக்கி சமூகத்தினரில் குறிப்பிட்ட அளவில் ஹிந்துக்களாக இருந்தாலும் கூட, மதப் பற்றை விட சமூகப் பற்றுக்குத் தான் முக்கியத்துவம் கொடுக்கின்றனர். எனவே, மணிப்பூர் கலவரமானது முற்றிலும் சமூகம் சார்ந்ததே. அரசியல் ஆதாயங்களுக்காக எதிர்க்கட்சியினர், இதற்கு மதச்சாயம் பூசி வதந்திகளை பரப்பி, இந்திய ஒருமைப்பாட்டை சீர்குலைக்க முயற்சிக்கின்றனர்.

பொதுவாக எதிர்க்கட்சியினர், ஆளுங்கட்சியினரை நோக்கி எப்போதுமே சீற்றத்துடன் செயல்படுவது இயல்பானதே. ஆட்சியாளர்களை அரசியல் ரீதியாக சீண்ட, எதிர்க்கட்சியினர் சிறுபான்மையினரை துாண்டிவிட்டு பிரச்னைகளை உருவாக்கி அதில் குளிர் காய்வதும் ஒரு அரசியல் தந்திரமே. இந்த மாடல், நாடு முழுதும் பரவினால், அது உள்நாட்டு பாதுகாப்புக்கும், மத ஒற்றுமைக்கும் சவாலாக அமைந்து விடும் என்கிற ஆபத்தை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்.

மணிப்பூரில் இயங்கும் ஆயுதக் குழுக்கள் சமீபத்தில் ட்ரோன், ராக்கெட் போன்ற நவீன ஆயுதங்களை கொண்டு தாக்குதல்களை நடத்தியுள்ளன. இது, மிகவும் ஆபத்தானது. மத்திய, மாநில அரசுகள் சமூக பாரபட்சம் பார்க்காமல், கலவரக் குழுக்களுக்கு நவீன ரக ஆயுதங்கள் வரும் வழிகளை கண்டறிந்து தடுப்பதுடன், அன்னிய சக்திகளின் தொடர்பை முறியடித்து, மணிப்பூர் மக்களின் அமைதியான வாழ்க்கைக்கு அடிகோல வேண்டும் என்பதே ஒட்டுமொத்த இந்திய மக்களின் எதிர்பார்ப்பு.

Image 1327479


சிந்தனைக்களம்

லிங்கேஸ்வரன் (98401 42740)

காவல் உதவி ஆய்வாளர் - பணி நிறைவு






      Dinamalar
      Follow us