ADDED : நவ 21, 2024 02:22 AM

நேர்மையாகவும் திறமையாகவும் செயல்படுபவர் பலரின் பெருமை, வெளி உலகுக்கு தெரியாமல் போவதற்கு காரணம், அவர்களிடம் சேர்ந்தே இருக்கும் தேவையற்ற கர்வம். இதை பணிச்செருக்கு என்பர்.
நேர்மையும், திறமையும் உள்ளவர்கள், அவை இல்லாதவர்களை அவமதிப்பதும், அலட்சியப்படுத்துவதும் கூட தவறு. ஆனால், சிலர் யாரையுமே மதிக்காமல் எல்லோரையும் அலட்சியப்படுத்துவர். அதை அவர்கள் தங்களிடமிருக்கும் திறமையையும், நேர்மையையும் வெளிச்சம் போட்டுக் காட்டுவதற்காக செய்கின்றனர்; ஆனால் உண்மையில், அதுவே அவர்களின் அந்த நற்பண்புகளை ஒளியிழக்கச் செய்துவிடுகிறது என்பதை, அவர்கள் உணர்வதில்லை.
பொறுப்பான பதவியில் இருப்பவர்கள் திறமையாகவும் நேர்மையாகவும் செயல்பட்டால் மட்டும் போதாது, அவர்களின் திறமையையும் நேர்மையையும் மக்கள் உணரும்படி செய்வது அவர்களது கடமை. அதற்கு அவர்கள் மக்களிடம் பழகும் விதத்தில் காட்டும் எளிமை ஒன்றே சரியான வழி.
'பதவி வரும்போடு பணிவு வரவேண்டும் துணிவும் வர வேண்டும்; பாதை தவறாமல் பண்பு குறையாமல் பழகி வர வேண்டும்' என்று பாடினார் கவிஞர் வாலி. இது எல்லா துறையினருக்கும் பொருந்தும்.
தன்னிடம் கோரிக்கையோடு அணுகும் பொதுமக்களுக்கு, அவர்களுடைய கோரிக்கையை நிறைவேற்ற முடியாவிட்டால் கூட, அதற்கான காரணத்தையும், தான் உண்மையிலேயே எடுத்துக் கொண்ட முயற்சிகளையும், சம்பந்தப்பட்டவர்களுக்கு விளக்கிக் கூற வேண்டியது மிகவும் அவசியம்.
அப்படிச் செய்தால், கோரிக்கையுடன் வந்தவர்கள் அதிருப்தியடைவதற்கோ, அந்த அலுவலர் மீது மேலதிகாரிகளிடம் புகார் செய்வதற்கோ வாய்ப்பில்லை.
ஆனால் இன்று எல்லா புகார்களும், முதலமைச்சர் தனிப்பிரிவு அலுவலகம் வரை சென்று மோதித்தான் ஓய்கின்றன; அவற்றிற்கு பதிலளிக்கும் அளவிலேயே, பல உயர் அதிகாரிகளின் பெரும்பான்மையான நேரம் வீணடிக்கப்படுகிறது.
இதுதான் காரணம்
மருத்துவம் உட்பட அனைத்து அறிவியல் விஷயங்களும், முழுமை பெறாத ஆய்வுகள் தான். கண்டுபிடித்தனர்; கண்டுபிடித்துக் கொண்டிருக்கின்றனர்; கண்டுபிடிப்பர்.
ஒரு நோயாளிக்கு அளிக்கப்படும் சிகிச்சை பயனளிப்பதும், பயனின்றிப் போவதும், மருத்துவர் திறமையைப் பொருத்தது மட்டுமல்ல; நோயின் தன்மை, அது பாதித்திருக்கும் அளவு, சிகிச்சைக்காக கொடுக்கப்படும் மருந்துகளை, நோயாளியின் உடல் ஏற்றுக்கொள்ளும் தன்மை, நோயாளி மனதளவில் காட்டும் துணிவு, ஒத்துழைப்பு இவைகளும் கூட காரணமாகும்.
நல்ல மருத்துவருக்கு, தன்னிடம் வரும் நோயாளி நலமடைந்து செல்வதுதான் அவரது தொழிலுக்கு உயர்வை கொடுக்கும் என்பது தெரியும். எனவே அவர் தன்னுடைய முயற்சியில் தொய்வு காட்ட வாய்ப்பே இல்லை.
இதற்கு விதிவிலக்காக, எங்கோ சிலர் இருக்கலாம். அதை வைத்து, தன்னுடைய உண்மையான முயற்சியில் தோல்விகண்ட மருத்துவர்களை, குறை சொல்வதும், தாக்குவதும் முற்றிலும் மனிதாபிமானமற்ற செயல்.
அதன் விளைவு, ஆபத்தான நிலையிலிருக்கும் நோயாளிகளைக் காப்பாற்ற, துணிந்து முயற்சி மேற்கொள்ள வேண்டிய சூழ்நிலையைச் சந்திக்கும் மருத்துவர்களின் மனதில், அச்சத்தையும் தயக்கத்தையும் ஏற்படுத்தும்; இது சமுதாயத்துக்கு ஆபத்து.
என்னுடைய பணியனுபவத்தில், விபத்து மற்றும் தாக்குதல் சம்பவங்களில், உயிர் பிழைக்கும் வாய்ப்பே இல்லை என்று எண்ணி, மருத்துவமனைக்கு எடுத்து சென்ற பலர், நம்ப இயலாத வகையில் மருத்துவர்களால் காப்பாற்றப்பட்டிருக்கின்றனர், மோசமான குற்றவாளிகள் உட்பட. அதே நேரத்தில் பிழைத்து விடுவர் என்ற நம்பிக்கையில் கொண்டு செல்லப்பட்ட சிலரை, காப்பாற்ற முடியாமல் போன நிகழ்வுகளும் உண்டு.
சமீபத்திய நிகழ்வில் தன் மகனின் அத்துமீறிய செயலை, அவரது தாயாரே ஏற்றுக் கொள்ளவில்லை என்றாலும், மருத்துவரின் தவறான அணுகுமுறையால், தான் அடைந்த மன உளைச்சலையும் சுட்டிக்காட்டியிருக்கிறார்.
ஆத்திரம் கண்ணை மறைக்கும்போது, அறிவு மழுங்கிப் போகிறது. தவறான புரிதலால், துாண்டப்பட்ட மகனின் எல்லை மீறிய கோபமே இந்த வன்முறை நிகழ்வுக்கு காரணம்.
கோபத்தின் உச்சத்தில் ஒரு மருத்துவரைக் கொல்ல முயற்சித்தது, மிருகத்தனமானது. அதேநேரத்தில், தன் உயிருக்கு உத்தரவாதமில்லாத நோயைச் சுமந்து கொண்டு சிகிச்சைக்கு வரும் ஒவ்வொரு நோயாளியும், சிகிச்சை அளிக்கும் மருத்துவரை கடவுள் போல் எண்ணி, தங்களின் உடலை ஒப்படைக்கிறார்.
அவர்களுடன் வரும் ரத்த சொந்தங்களும், கடுமையான மன உளைச்சலில்தான் வருகின்றனர்.
உயர்ந்த பொறுப்பையும் மதிப்பையும் தாங்கி நிற்கும் மருத்துவர்கள், தாங்கள் அளிக்கும் சிகிச்சையைப் பற்றியும், அதன் பக்க விளைவுகள், குணமடையும் வாய்ப்பு ஆகியவற்றை, சாமானியரும் புரிந்துகொள்ளும் வகையில் எளிமையாகவும், அச்சத்தை ஏற்படுத்தாத வகையிலும், நோயாளிக்கு விளக்கிக் கூற வேண்டும்.
மனப்பக்குவம் அவசியம்
ஒரு மருத்துவர் நோயாளிக்கு தன் சிகிச்சையைத் துவக்குவதற்கு முன், நோயாளியின் ஒத்துழைப்பை பெற, மனதளவில் அவரை அந்த சிகிச்சைக்கு தயார் செய்ய வேண்டும். பாம்பு கடித்தவர்களில் பெரும்பாலோர், பயத்தினால் தான் இறக்கின்றனர் என்று கூறப்படுகிறது. அதுபோல் நோயால் பாதிக்கப்பட்டவர்களின் பயமும், மன உளைச்சலும் அவர்கள் உட்கொள்ளும் மருந்துகளைக் கூட பயனளிக்காமல் செய்ய வாய்ப்பிருக்கிறது.
இந்த திறமையும் மனப்பாங்கும், ஒவ்வொரு மருத்துவருக்கும் அவசியம். திறமையும் தொழில் அனுபவமும் கொண்ட ஒரு மருத்துவரால், இந்த பணியைச் சிறப்பாக செய்ய முடியும். பாதிக்கப்பட்டவர் மற்றும் அவர் மீது பாசம் கொண்டவர்கள் நிலையில் தன்னை வைத்து சிந்தித்தால் மட்டுமே, இதன் அவசியம் புரியும்.
'நான் டாக்டரா? நீ டாக்டரா?' என்று பொறுமையிழந்து கோபத்தைக் கக்கும் ஒருவர், டாக்டர் என்று தன்னைக் கூறிக்கொள்ள தகுதியற்றவர் தான். ஒரு டாக்டரிடம் நோயாளிகள் எதிர்பார்ப்பது கனிவான ஆறுதலான வார்த்தைகள். அவர்களிடம் சொல்லக்கூடாத உண்மைகளை விபரங்களை உடன் இருக்கும் இரத்த சொந்தங்களிடம் கூறிவிடுவது நல்லது.
என்னுடைய பணிக்காலத்தில், பிரபலமானவரின் குடும்ப மருத்துவர், எனக்கும் நெருங்கிய நண்பர். அவரது மனைவியும் மருத்துவர். அவர்களது சொந்த மருத்துவமனையில் தன்னிடன் வழக்கமாக சிகிச்சைபெற்று வரும் ஒரு பெண்ணுக்கு சிகிச்சையளிக்கும் போது, மரணம் ஏற்பட்டுவிட்டது.
அவரது கணவன், மருத்துவரின் கவனக்குறைவும், அலட்சியமுமே தன் மனைவியின் இறப்புக்கு காரணம் என்று புகார் கொடுத்தார். நானும் வழக்கு பதிவு செய்து, பெண்ணின் உடலை மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பினேன்.
மருத்துவர், பிரபலமானவரின் குடும்ப மருத்துவர் என்பதால், பல முனைகளிலிருந்தும் எனக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டது. அவர் எனக்கும் நெருங்கிய நண்பராக இருந்தும், வழக்கு பதிவு செய்ததால், என்மீது கோபித்துக் கொண்டுவிட்டார்.
என்னிடம் அவர் சார்பாக பேசியவர்களிடமெல்லாம், 'இந்த வழக்கில் என்னுடைய புலன் விசாரணையில், செய்வதற்கு ஒன்றுமில்லை. பிரேதப் பரிசோதனை செய்யும், குற்றம்சார்ந்த அறிவியல் மருத்துவர், இந்த மரணம், மருத்துவரின் கவனக்குறைவினால் தான் நிகழ்ந்தது என்று சான்றளித்து விட்டால், என்னால் எதுவும் செய்ய இயலாது' என்று கூறிவிட்டேன்.
நான் சற்றும் எதிர்பாராமல், சான்றிதழ், மருத்துவருக்கும் அவரது மனைவிக்கும் எதிராகவே வந்தது. விசாரணை அதிகாரி என்ற முறையில் எந்த வகையில் கவனக்குறைவு என்று நான் கேட்ட கேள்விகளுக்கும், அந்த குற்றம் சார்ந்த அறிவியல் மருத்துவர் விபரமாகவும், தெளிவாகவும் பதில் கொடுத்துவிட்டார். எனவே வழக்கு பிரிவுகளை மாற்றி குற்றப் பத்திரிகை தாக்கல் செய்துவிட்டேன். மருத்துவருக்கும் எனக்கும் இருந்த நெருங்கிய நட்பு, அன்றோடு துண்டிக்கப்பட்டு விட்டது. மருத்துவர்கள் இருவரும், முன்ஜாமின் பெற்று நீதிமன்றத்தில் வழக்கை சந்தித்தனர். சில அறிவியல் நுணுக்க அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டனர்.
சிறுமை சேருகிறது
அனுபவமிக்க ஒரு மருத்துவரே ஒரு விசாரணை அதிகாரியின் அதிகார வரம்பு பற்றி அறிந்திருக்கவில்லை. என் அனுபவத்தில் மருத்துவர்கள் பலர் மீது அதிருப்தி ஏற்பட்டு, அவர்கள் அளித்த சிகிச்சையை குறை சொல்வதற்கும், சந்தேகிப்பதற்கும் காரணம், அவர்களது தவறான அணுகுமுறையே.
தன்னிடம் கோரிக்கை மனுவுடன் வரும் பொதுமக்களை நேரடியாகக் கூட பார்க்காமல், எங்கோ பார்த்துக் கொண்டு ஓரிரு வார்த்தைகளில் அலட்சியமாக பதில் கூறி, வெளியே அனுப்ப முயற்சிக்கும் அரசு அலுவலர், மக்கள் மத்தியில் அதிருப்தியை மட்டுமல்ல, அளவற்ற ஆத்திரத்தையும் மூட்டிவிடுகிறார். அதன் காரணமாகத்தான் சில அரசு அலுவலகங்களில், தீக்குளிக்கும் சம்பவங்களும், போராட்ட சம்பவங்களும் நிகழ்கின்றன.
எனக்குத் தெரிந்த நண்பரொருவர், வங்கி அதிகாரி. தன்மீது சுமத்தப்பட்ட பொய்யான பழியைத் துடைத்து நியாயத்தைப் பெற, சிறந்த வழக்கறிஞர் என்று பேசப்பட்ட ஒரு பிரபல வழக்கறிஞரை அவர் கேட்ட அளவுக்கு அதிகமான தொகையையும் தன் சிரமங்களுக்கிடையே கொடுத்து, வாதாட நியமித்தார்.
ஆனால், பணத்தைப் பெறுவதில் காட்டிய ஆர்வத்தை வழக்கில் காட்டாமல், தனது ஜூனியரை அனுப்பி வழக்கை நடத்தி என் நண்பருக்கு நியாயம் கிடைக்காமல் செய்துவிட்டார்; வாங்கிய தொகையையும் திருப்பித் தரவில்லை.
இதே மனநிலை பல அரசு அதிகாரிகளிடமும், காவல்துறை அதிகாரிகளிடமும் காணப்படுகிறது.
ஒரு கலந்துரையாடலின் போது, முன்னாள் டி.ஜி.பி., சைலேந்திரபாபு, தன்னிடம் வந்த ஒரு புகார் பற்றி குறிப்பிட்டார். இருசக்கர வாகனம் களவுபோனதாக புகார் கொடுத்த ஒரு நபர், தானே தேடித் திரிந்து, கண்காணிப்பு கேமரா ஒன்றில் பதிவாகியிருந்த ஆதாரத்தை நகல் எடுத்துச் சென்று காட்டி, சம்பந்தப்பட்ட காவல் நிலைய ஆய்வாளரை நடவடிக்கை எடுக்கக் கோரியபோது, அந்த ஆய்வாளர், 'நான் இன்ஸ்பெக்டரா? நீ இன்ஸ்பெக்டரா?' என்று கேட்டாராம்.
தன் பதவிக்கும் தொழிலுக்கும் பெருமை சேர்க்கும் பலரிருக்க, கருப்பாடுகளாக சிலர், இவ்விதம் சிறுமை சேர்த்துக் கொண்டிருப்பதையும், நம்மால் மறுக்க முடியவில்லை.
'ஒரு வாடிக்கையாளர், உங்கள் வளாகத்தில் மிக முக்கியமான பார்வையாளர். அவர் உங்களைச் சார்ந்தவர் அல்ல; நீங்கள் தான் அவரைச் சார்ந்து இருக்கிறீர்கள். அவர் உங்கள் வேலையில் குறுக்கிடுபவர் அல்ல; அதன் ஆதாரமே அவர் தான்.
'அவர் உங்கள் தொழிலுக்கு புறம்பானவர் அல்ல; அவர் அதில் ஒரு பகுதி. நீங்கள் அவருக்கு சேவை செய்வதன் மூலம், அவருக்கு எந்த நன்மையும் செய்யவில்லை; அதற்கான வாய்ப்பை அளித்து, உங்களுக்குத் தான் அவர் நன்மை செய்கிறார்' என்று கூறி இருக்கிறார் -மகாத்மா காந்தி!
இ-மெயில்: spkaruna@gmail.com
மா.கருணாநிதி
முன்னாள் காவல்துறை கண்காணிப்பாளர்