எங்கே செல்கிறது நிதி! நியாயம் கேட்கும் பந்தலுார் பழங்குடியின மக்கள்
எங்கே செல்கிறது நிதி! நியாயம் கேட்கும் பந்தலுார் பழங்குடியின மக்கள்
UPDATED : டிச 12, 2024 05:26 AM
ADDED : டிச 11, 2024 09:40 PM

பந்தலுார்: பழங்குடியின மக்களின் மேம்பாட்டுக்காக, மத்திய, மாநில அரசுகள் ஒதுக்கும் நிதி முறையாக பயன்படுத்தாமல் உள்ளதால், மலை மாவட்டத்தின் பெரும்பாலான மண்ணின் மைந்தர்கள் இன்னும் வறுமையின் பிடியில் சிக்கி தவிக்கின்றனர்.
நீலகிரி மாவட்டத்தில், கூடலுார் மற்றும் பந்தலுார் பகுதிகளில், குரும்பர், காட்டு நாயக்கர், பணியர் சமுதாய பழங்குடியின மக்கள் வாழ்ந்து வருகின்றனர். அதில், 'பணியர் சமுதாய மக்கள், 215 கிராமங்களில் 10 ஆயிரம் பேர்; காட்டு நாயக்கர், 70 கிராமங்களில், 3,500 பேர்; பெட்டக் குரும்பா, 25 கிராமங்களில், 3,000 பேர்; முள்ளு குரும்பர், 13 கிராமங்களில், 1,800 பேர்,' என, மொத்தம், 28ஆயிரத்து 300 பேர் வசித்து வருகின்றனர்.
இவர்களின் வாழ்க்கை மேம்பாட்டிற்காக, மத்திய, மாநில அரசுகள் நிதி ஒதுக்கீடு செய்கின்றன. அந்த நிதி, கிராம ஊராட்சி; பேரூராட்சி மற்றும் நகராட்சிகள்; ஊராட்சி ஒன்றியம்; மாவட்ட ஊராட்சி; ஊரக வளர்ச்சி முகமை; பழங்குடியினர் நலத்துறை மற்றும் எம்.எல்.ஏ., எம்.பி., மாவட்ட நிர்வாகம், என பல்வேறு துறைகளின் கீழ் ஒதுக்கப்பட்டு பல்வேறு பணிகள் நடந்து வருகிறது.
மேம்பாடாத பழங்குடிகளின் வாழ்க்கை
ஆனால், மலை பகுதியில் மிகவும் குறைந்த எண்ணிக்கையில் வாழ்ந்து வரும், மண்ணின் மைந்தர்களின் வாழ்க்கை; கல்வி; பொருளாதார ரீதியாக மேம்பட்டதாக தெரியவில்லை. ஒரு சில இடங்களில் மட்டும் பழங்குடியினர் மேம்பட்டு வருகின்றனர். பெரும்பாலான கிராமங்களில் பழங்குடியின மக்களுக்கு, குடியிருக்க வீடு கூட இல்லாத அவலம் இன்றும் தொடர்கிறது.
தேர்தல் நேரங்களில் மட்டும் இவர்களை நாடி செல்லும் அரசியல்வாதிகள் முதல் அதிகாரிகள் வரை, இம்மக்களை வெறும் ஓட்டு வங்கிகளாக மட்டுமே பயன்படுத்தி வருகின்றனர். மாறாக ஆட்சிக்கு வந்தவுடன், பழங்குடி கிராமங்களில், குடியிருப்பு, சாலை, குடிநீர், தெரு விளக்கு உள்ளிட்ட எந்த அடிப்படை வசதிகளும் நிறைவேற்றிதருவதில்லை.
பெயரளவுக்கு ஆய்வு
இது குறித்த தகவல்கள் வெளியாகும் நேரத்தில் மட்டும், அதிகாரிகள் பெயரளவிற்கு கிராமங்களில் விசாரணை செய்வதுடன் தங்கள் பணியை நிறுத்தி கொள்கின்றனர். இவர்களுக்காக, பல்வேறு ஐந்தாண்டு திட்டங்கள் வந்தும், இம்மக்களின் வாழ்வாதாரம் உயராமல் உள்ளதால், இந்த சமூகம் மெல்ல, மெல்ல அழிவின் பிடியில் சென்று, முகவரி இல்லாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
இதற்கு உதாரணமாக, பந்தலுார் சேரங்கோடு, ஊராட்சிக்கு உட்பட்ட கொண்டடா பழங்குடியின கிராமத்தில், பணியர் சமுதாயத்தை சேர்ந்த, 5- குடும்பங்கள் மட்டுமே வாழ்ந்து வரும் நிலையில்,பாதுகாப்பற்ற சூழலில் இன்னும் குடிசையில் பலதலைமுறைகளாக வாழ்ந்து வருகின்றனர்.
இந்த பகுதிக்கு பழங்குடியின வார்டு உறுப்பினர் உள்ள நிலையில், அவரும்இது குறித்து கண்டு கொள்ளாதது கிராம மக்களை வேதனையில் ஆழ்த்தி உள்ளது.
இங்குள்ள மக்கள் கூறுகையில்,'எங்கள் கிராமத்தில் எவ்வித வசதிகளும் இல்லை. எந்த திட்டமும் இங்கு செயல்படுத்தவில்லை. மாவட்ட நிர்வாக அதிகாரிகள், எங்கள் பிரச்னைகளுக்கு நிரந்தரதீர்வு காணும் வகையில், நேரடியாக ஆய்வு செய்து, தொகுப்பு வீடு கட்டித்தரநடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கு முன்பு, பழங்குடி மக்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதி எங்கே சென்றது என்பது குறித்து, விசாரணை செய்ய குழு அமைத்து, நீதியை பெற்று தர வேண்டும்,' என்றனர்.