UPDATED : பிப் 29, 2024 03:23 AM
ADDED : பிப் 28, 2024 11:14 PM

போதை பொருள் கடத்தல் தொடர்பாக தேடப்பட்டு வரும், தி.மு.க., முன்னாள் நிர்வாகி ஜாபர் சாதிக் சொந்த ஊரில் முகாமிட்டுள்ள மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள், அவரது உறவினர்களிடம் விசாரித்து வருகின்றனர்.
ராமநாதபுரம் மாவட்டம், கமுதியைச் சேர்ந்தவர் ஜாபர் சாதிக், 36. திரைப்பட தயாரிப்பாளர். தி.மு.க.,வில், சென்னை மேற்கு மாவட்ட அயலக அணி துணை அமைப்பாளராக பதவி வகித்தார்.
இவரது சகோதரர்கள் முகம்மது சலீம், 28; மைதீன், 26. இவர்கள் மூவரும், சென்னை சாந்தோமில் மூன்று அடுக்கு மாடி வீட்டில் வசிக்கின்றனர்.
அமீர் இயக்கி வரும், 'இறைவன் மிகப்பெரியவன்' என்ற படத்தை ஜாபர் சாதிக் தயாரிக்கிறார். அந்த படத்தில் மைதீன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ஜாபர் சாதிக், மைதீன் ஆகியோர் அமீரின் உறவினர்கள் என,
கூறப்படுகிறது.
பிப்., 15ம் தேதி, டில்லியில், மெத்தாம்பெட்டமைன் எனும் போதை பொருள் தயாரிக்க பயன்படுத்தும், 75 கோடி ரூபாய் மதிப்புள்ள, சூடோபெட்ரின் எனும் வேதிப்பொருள் கடத்த முயன்றது தொடர்பாக, சென்னையைச் சேர்ந்த முகேஷ், 33, முஜிபுர் ரஹ்மான், 34; விழுப்புரத்தைச் சேர்ந்த அசோக்குமார், 34, ஆகியோர் கைது செய்யப்
பட்டனர்.மத்திய போதை பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் நடத்திய விசாரணையில், போதை பொருள் கடத்தல் கும்பல் தலைவனாக ஜாபர் சாதிக் செயல்படுவது தெரியவந்தது.
அமெரிக்கா, நியூசிலாந்து உள்ளிட்ட நாடுகளில் உள்ள, சர்வதேச போதை பொருள் கடத்தல் கும்பல் வாயிலாக, 15,000 கோடி ரூபாய் வரை சம்பாதித்து இருப்பது தெரியவந்துள்ளது. பிப்., 26ம் தேதி விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என, 'சம்மன்' வழங்கப்பட்டது. ஆனால், சகோதரர் மற்றும் குடும்பத்தாருடன், ஜாபர் சாதிக் தலைமறைவாக உள்ளார்.
அவரைத் தேடி, மத்திய போதை பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள், ஜாபர் சாதிக் சொந்த ஊரான கமுதி மற்றும் ராமநாதபுரத்தில் முகாமிட்டு
உள்ளனர்.
ஜாபர் சாதிக் உடன் நெருங்கிய தொடர்பில் இருந்த சந்தேக நபர்கள் தொடர்பான விபரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன. அதன் அடிப்படையிலும் விசாரணை நடக்கிறது. 'என் படத்தின் தயாரிப்பாளர் ஜாபர் சாதிக் குறித்து வரும் செய்திகள் எனக்கு அதிர்ச்சி அளிக்கிறது. உண்மை எதுவென்று இப்போது வரை எனக்கு தெரியாது' என, இயக்குனர் அமீர் அறிக்கை வாயிலாக தெரிவித்து
உள்ளார்.
அமீருடன் மிக நெருக்கமாக இருந்த ஜாபர் சாதிக், தொழில் 'பார்ட்னர்' எனவும் கூறப்படுகிறது. இதனால் விசாரணை வளையத்தில் அமீர் கொண்டு வரப்பட்டுள்ளார். அவரிடமும் முறைப்படி விசாரணை நடத்தப்படும் என, போலீஸ் தரப்பில்
தெரிவிக்கப்படுகிறது.

