ஆட்சி அதிகாரம் இருக்கும் இடத்தில் ஊழலும் நிச்சயமாக இருக்கும்; ஒப்புக்கொள்ளும் திருமாவளவன்
ஆட்சி அதிகாரம் இருக்கும் இடத்தில் ஊழலும் நிச்சயமாக இருக்கும்; ஒப்புக்கொள்ளும் திருமாவளவன்
ADDED : ஜூன் 14, 2025 03:43 AM

திருச்சி: தி.மு.க., கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு அதிக இடங்களை கேட்போம் என, திருமாவளவன் மீண்டும் தெரிவித்துஉள்ளார்.
தி.மு.க., கூட்டணியில் உள்ள மா.கம்யூ., வி.சி., உள்ளிட்ட கட்சிகள், கடந்த சட்டசபை தேர்தலை விட, 2026 தேர்தலில் கூடுதல் இடங்களை ஒதுக்குமாறு தி.மு.க.,விடம் கோரி வருகின்றன.
இந்த நிலையில், திருச்சியில், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் நேற்று கூறியதாவது:
2026 சட்டசபை தேர்தலில், தி.மு.க., கூட்டணியில் அதிக இடங்களை கேட்போம். எத்தனை இடங்கள் என, இப்போது முடிவெடுக்க முடியாது. கட்சி நலனுக்காக அதிக எதிர்பார்ப்பு உள்ளது.
அதை விட கூட்டணி நலன் முக்கியம். எல்லாவற்றையும் கருத்தில் கொண்டு தேர்தல் நேரத்தில் முடிவெடுப்போம். கூட்டணி ஆட்சி என்பதில் நாங்கள் தெளிவாக உள்ளோம். எனினும், அதற்கு, 2026 தேர்தல் சரியான களம் அல்ல.
தி.மு.க., கூட்டணியில் இருந்து சில கட்சிகள் வெளியேறும் என்று பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் கூறுவது மாயத்தோற்றம்; தி.மு.க., கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்த முயற்சிக்கின்றனர். அண்ணாமலை இல்லாமல் பா.ஜ., - அ.தி.மு.க., கூட்டணி அமைந்ததால், 2026ல் பா.ஜ., ஆட்சி என்று கூறி, அந்த கூட்டணியை அவர் சிதைக்க பார்க்கிறார்.
இந்த உலகத்தில் ஊழலற்ற ஆட்சி என்று எங்குமே கிடையாது. ஆட்சி, அதிகாரம் இருக்கும் இடத்தில் நிச்சயமாக ஊழலும் இருக்கும்.
எனவே, ஊழலை கூறி, ஒரு ஆட்சியையோ, கட்சியையோ வீழ்த்த முடியாது; அது மிகவும் கடினம். ஊழலை விட ஜாதியவாத மற்றும் மதவாத பிரச்னைகள் பெரிது. இவ்வாறு அவர் கூறினார்.