உண்மையான பா.ம.க., எது? தைலாபுரத்தில் ராமதாஸ் அறிவிப்பு
உண்மையான பா.ம.க., எது? தைலாபுரத்தில் ராமதாஸ் அறிவிப்பு
ADDED : செப் 03, 2025 04:56 AM

திண்டிவனம் : திண்டிவனம் அருகே தைலாபுரம் தோட்டத்தில் நேற்று காலை, பா.ம.க., மற்றும் வன்னியர் சங்க மாவட்ட செயலர்கள் கூட்டம், கட்சியின் நிறுவனர் ராமதாஸ் தலைமையில் நடந்தது. இதில், மாவட்ட செயலர்கள் 106 பேர் கலந்து கொண்டனர்.
கவுரவ தலைவர் ஜி.கே.மணி, வன்னியர் சங்க தலைவர் அருள்மொழி, பொதுச்செயலர் முரளிசங்கர், பேராசிரியர் தீரன், புதிதாக நியமிக்கப்பட்டுள்ள ராமதாஸ் ஸ்ரீகாந்திமதி, உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில், புதிதாக நிர்வாக குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ள மகள் ஸ்ரீகாந்திமதியை, நிர்வாகிகளுக்கு அறிமுகம் செய்து வைத்து, பா.ம.க., உறுப்பினர் சேர்க்கை படிவங்களை ராமதாஸ் வழங்கினார்.
அப்போது ராமதாஸ் பேசுகையில், “தற்போது கட்சியில் நியமிக்கப்பட்ட நிர்வாகிகளின் பதவி நிரந்தரமாகும். தற்போதுள்ள நிர்வாகிகளுக்குதான் சட்டசபை தேர்தலில் போட்டியிட சீட் வழங்கப்படும்.
''கட்சி சார்பில், தேர்தலில் போட்டியிடும் கட்சி வேட்பாளர்களுக்கு, 'ஏ மற்றும் பி' படிவம் நான் தான் வழங்குவேன். அதுதான் செல்லுபடியாகும்.
“கட்சிக்கு அங்கீகாரம் பெறுவது தொடர்பாக தேர்தல் ஆணையத்திடம் முறையாக ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. நாம்தான் உண்மையான பா.ம.க., என்பதை தேர்தல் கமிஷன் விரைவில் அறிவிக்கும்,” என்றார்.
பின், அன்புமணி மேற்கொண்டுள்ள நடைபயணம், அவரது நடவடிக்கை, அவரால் கட்சியில் ஏதாவது பிரச்னை உள்ளதா? என, மா.செ.,க்களிடம் ராமதாஸ் கேட்டறிந்தார்.
இதுவரை, கட்சி நிர்வாகிகள் தொடர்பான ஆலோசனை கூட்டத்தில் ஸ்ரீகாந்திமதி கலந்து கொண்டதில்லை. திட்டமிட்டே, மா.செ.,க்கள் கூட்டத்திலும் அவரை ராமதாஸ் கலந்து கொள்ள வைத்துள்ளார் என கட்சியினர் கூறுகின்றனர்.