புலிகளை புகழும் வீடியோக்கள்: என்.ஐ.ஏ.,விடம் 'சாட்டை' சமர்ப்பிப்பு
புலிகளை புகழும் வீடியோக்கள்: என்.ஐ.ஏ.,விடம் 'சாட்டை' சமர்ப்பிப்பு
UPDATED : பிப் 16, 2024 05:20 AM
ADDED : பிப் 15, 2024 10:55 PM

சென்னை: தடை செய்யப்பட்ட விடுதலைப் புலிகள் அமைப்பை புகழ்ந்து பேசிய, 1,500 வீடியோக்களை, என்.ஐ.ஏ., அலுவலகத்தில், நாம் தமிழர் கட்சி நிர்வாகி, 'சாட்டை' துரைமுருகன் சமர்ப்பித்தார்.
சேலம் மாவட்டம் ஓமலுாரில், வாடகைக்கு வீடு எடுத்து தங்கி துப்பாக்கி தயாரித்த, அதே பகுதியைச் சேர்ந்த நவீன் சக்கரவர்த்தி, சஞ்சய் பிரகாஷ் மற்றும் கபிலர் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இவர்கள், விடுதலைப் புலிகள் அமைப்பின் தீவிர ஆதரவாளர்களாக செயல்பட்டனர்.
தமிழகத்தில் புதிய அமைப்பு ஒன்றை உருவாக்கி, பயங்கரவாத செயலில் ஈடுபட திட்டமிட்டு செயல்பட்டு வந்தனர். மூவரும், நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தனர். இது தொடர்பாக, என்.ஐ.ஏ., எனப்படும், தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
அப்போது, நாம் தமிழர் கட்சி முக்கிய நிர்வாகியான சாட்டை துரைமுருகன், இடும்பாவனம் கார்த்திக் மற்றும் இசை மதிவாணன், விஷ்ணுபிரசாத் உள்ளிட்டோர், வெளிநாடுகளில் உள்ள விடுதலைப் புலிகள் அமைப்பினருடன் நெருங்கிய தொடர்பில் இருப்பதாகவும், என்.ஐ.ஏ., அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து, சமீபத்தில் திருச்சியில் சாட்டை துரைமுருகன் வீடு உட்பட ஆறு இடங்களில் சோதனை செய்தனர். அப்போது, ஏழு மொபைல் போன்கள், எட்டு 'சிம் மற்றும் மெமரி' கார்டுகள், நான்கு 'பென்டிரைவ்' உள்ளிட்ட 'டிஜிட்டல்' ஆவணங்களை பறிமுதல் செய்தனர்.
அதன் அடிப்படையில், சாட்டை துரைமுருகன், இடும்பாவனம் கார்த்திக், கோவை மாவட்டத்தைச் சேர்ந்த முருகன் ஆகியோரிடம், பல மணி நேரம் விசாரித்து வாக்குமூலம் பதிவு செய்தனர்.
மேலும், விடுதலைப் புலிகள் தொடர்பாக, 'சாட்டை' எனும் 'யு -டியூப்' சேனலில் பதிவேற்றம் செய்துள்ள, அனைத்து வீடியோக்களையும் ஒப்படைக்க உத்தரவிட்டனர்.
அதன்படி, நேற்று சாட்டை துரைமுருகன் நேற்று, சென்னை என்.ஐ.ஏ., அலுவலகத்தில், 1,500 வீடியோக்களை சமர்ப்பித்தார். அவற்றை ஆய்வு செய்தபின், அதன் அடிப்படையில் விசாரணை தொடரும் என, என்.ஐ.ஏ., அதிகாரிகள் தெரிவித்தனர்.