தமிழகம் விரும்பும் அடுத்த முதல்வர் யார்: கருத்து கணிப்பில் புது தகவல்
தமிழகம் விரும்பும் அடுத்த முதல்வர் யார்: கருத்து கணிப்பில் புது தகவல்
ADDED : மார் 30, 2025 01:18 AM

புதுடில்லி: தமிழக சட்டசபைக்கு தேர்தல் நடக்க இன்னும் ஒரு ஆண்டு இருக்கும் நிலையில், தனியார் நிறுவனம் நடத்திய கருத்து கணிப்பு சுவாரசியத்தை ஏற்படுத்தியுள்ளது. யார் முதல்வராக வேண்டும் என்பதில், 27 சதவீதம் பேர், தற்போதைய முதல்வர் ஸ்டாலினுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். அதே நேரத்தில் களத்துக்கு புதுமுகமான நடிகர் விஜய்க்கு 18 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
தமிழக சட்டசபைக்கு அடுத்தாண்டு ஏப்., - மே மாதங்களில் தேர்தல் நடக்க உள்ளது. மேற்கு வங்கம், கேரளா உள்ளிட்ட மாநிலங்களுடன் இணைந்து தமிழகமும் தேர்தலை சந்திக்க உள்ளது.
இந்நிலையில் 'சி வோட்டர்ஸ்' என்ற தனியார் அமைப்பு, தமிழக நிலவரம் தொடர்பாக கருத்து கணிப்பை நடத்தியுள்ளது. அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள கருத்து கணிப்பு முடிவுகள் சுவாரசியத்தை ஏற்படுத்தியுள்ளன.
யார் முதல்வராக வேண்டும் என்ற கேள்விக்கு, 27 சதவீதம் பேர், தற்போதைய முதல்வரும், தி.மு.க., தலைவருமான ஸ்டாலின் பெயரைக் குறிப்பிட்டுள்ளனர். தமிழக வெற்றிக் கழக தலைவரான நடிகர் விஜய்க்கு, 18 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
முன்னாள் முதல்வரான, அ.தி.மு.க., பொதுச் செயலர் பழனிசாமிக்கு 10 சதவீதம் பேரும், தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலைக்கு, 9 சதவீதம் பேரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
ஸ்டாலினுக்கு அதிகமானோர் ஆதரவு தெரிவித்திருந்தாலும், முதல் முறையாக தேர்தலை சந்திக்க உள்ள நடிகர் விஜய் இரண்டாம் இடத்தில் இருப்பது, வரும் மாதங்களில் அரசியல் மாற்றங்களுக்கு வித்திடும் வாய்ப்பை ஏற்படுத்தி தந்துள்ளதாக கருதப்படுகிறது.
மேலும், மீதமுள்ள 36 சதவீதம் பேரின் ஆதரவு யாருக்கு கிடைக்கும் என்பது, தேர்தல் முடிவுகளை புரட்டி போடும் வாய்ப்பை ஏற்படுத்தி தந்துள்ளது.
தமிழக அரசின் செயல்பாடுகள் குறித்த கேள்விக்கு, 15 சதவீதம் பேர், மிகவும் திருப்தி என்று கூறியுள்ளனர். ஓரளவுக்கு திருப்தி என, 36 சதவீதம் பேர் கூறியுள்ளனர். அதே நேரத்தில், 25 சதவீதம் பேர் திருப்தி இல்லை என்றும், 24 சதவீதம் பேர் எதையும் கூற முடியவில்லை என்றும் கூறியுள்ளனர்.
முதல்வராக ஸ்டாலினின் தனிப்பட்ட செயல்பாடுகள் குறித்த கேள்விக்கு, 22 சதவீதம் பேர் மிகவும் திருப்தி என்று கூறியுள்ளனர். ஓரளவுக்கு திருப்தி என, 33 சதவீதம் பேர் கூறியுள்ளனர். 22 சதவீதம் பேர் திருப்தி இல்லை என்றும் 23 சதவீதம் பேர் எதையும் கூற முடியவில்லை என்றும் தெரிவித்துள்ளனர்.
எதிர்க்கட்சித் தலைவராக பழனிசாமியின் செயல்பாடுகள் மிகவும் திருப்திகரமாக இருப்பதாக, 8 சதவீதம் பேர் கூறியுள்ளனர். ஓரளவுக்கு திருப்தி என27 சதவீதம் பேர் கூறியுள்ளனர். அதே நேரத்தில், 32 சதவீதம் திருப்தி இல்லை என்றும், 33 சதவீதம் பேர் எதையும் கூற முடியவில்லை என்றும் தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் தற்போதுள்ள முக்கிய பிரச்னையாக, 15 சதவீதம் பேர் பெண்கள் பாதுகாப்பை குறிப்பிட்டுள்ளனர். 12 சதவீதம் பேர் விலைவாசி உயர்வையும், 10 சதவீதம் பேர் போதை மற்றும் மது சம்பவங்களையும் கூறியுள்ளனர்.