'டில்லி உஷ்ஷ்ஷ்...' செல்வப்பெருந்தகை பேச்சின் பின்னணியில் யார்?
'டில்லி உஷ்ஷ்ஷ்...' செல்வப்பெருந்தகை பேச்சின் பின்னணியில் யார்?
ADDED : ஜூன் 16, 2024 01:18 AM

'எத்தனை காலம் தான் கையேந்துவது? காங்கிரசை வலுப்படுத்த வேண்டும்' என, தமிழக காங்., தலைவர் செல்வப்பெருந்தகை சமீபத்தில் பேசியது, பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது; அத்துடன் தி.மு.க., - -காங்., கூட்டணியில் உரசலையும் உண்டாக்கியது. செல்வபெருந்தகைக்கு முன்னாள், காங்., தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் எதிர்ப்பு தெரிவித்தார்.
'தி.மு.க., - -காங்., கூட்டணி தமிழகம், புதுச்சேரி உட்பட 40 தொகுதிகளையும் கைப்பற்றியுள்ள நிலையில் இப்படி பேசலாமா? திடீரெனெ செல்வப்பெருந்தகை இப்படி பேசக் காரணம் என்ன? இதன் பின்னணியில் இருப்பது யார்?' என பல கேள்விகள் எழுந்துள்ளன.
'உ.பி.,யில், 'இண்டியா' கூட்டணி மாபெரும் வெற்றியை பெற்றதால், மிக உற்சாகமாக உள்ளார் ராகுல். உ.பி., வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க, பாத யாத்திரை செல்ல இருக்கிறார். தமிழகத்திலும் ராகுல், பிரியங்கா என இருவருமே பாத யாத்திரை மேற்கொள்ள முடிவு செய்துள்ளனர். கட்சியை வலுப்படுத்தவே இந்த முயற்சி. செல்வ பெருந்தகை சும்மா அப்படி பேசவில்லை; ராகுல், பிரியங்கா சொல்படி தான் அவர் செயல்பட்டுள்ளார்' என, டில்லி அக்பர் சாலையில் உள்ள, காங்., அலுவலகத்தில் பேச்சு அடிபடுகிறது.
இதற்கிடையே, டில்லி மீடியாவை, 'மோடி மீடியா' என கிண்டலடித்த ராகுல், டில்லி பத்திரிகையாளர்களை விருந்திற்கு அழைக்கப் போகிறாராம். காங்கிரசுக்கு, 99 தொகுதிகள் கிடைத்ததில் மிக்க மகிழ்ச்சியில் உள்ளதால் இந்த ஏற்பாடாம்.