த.வெ.க.,வுக்கு ஓட்டளிக்க போவது யார்? கருத்து கணிப்புபடி 25 சதவீதம் கிடைக்குமா?
த.வெ.க.,வுக்கு ஓட்டளிக்க போவது யார்? கருத்து கணிப்புபடி 25 சதவீதம் கிடைக்குமா?
ADDED : மார் 19, 2026 05:18 AM

மதுரை: சட்டசபை தேர்தலில் முதன்முறையாகவும், தனித்தும் போட்டியிட உள்ள தமிழக வெற்றிக்கழகத்திற்கு விஜய் ரசிகர்களான இளைஞர்கள், நடுநிலையாளர்கள் உள்ளிட்டோர் ஓட்டளிக்க உள்ளனர். இவர்களால் 25 சதவீதம் ஓட்டுகள் கிடைக்குமா என்பது மே 4ல் தெரிந்து விடும்.
அ.தி.மு.க., - தி.மு.க.,வுக்கு மாற்று, கூட்டணி ஆட்சி என்ற கோஷத்துடன் த.வெ.க.,வை துவக்கிய விஜய்க்கு 'நியூ ஜென்' எனும் இளைஞர்களின் ஆதரவு அதிகம் உள்ளது. கூட்டணி ஆட்சி என்று அறிவித்த நிலையில் த.வெ.க.,வுடன் பா.ஜ.,வும், காங்கிரசும் மறைமுகமாக பேச்சுவார்த்தை நடத்தின.
இதனால் காங்கிரசுக்கு 28 தொகுதிகள், ஒரு ராஜ்யசபா 'சீட்' கொடுத்து தி.மு.க., தனது கூட்டணியை தக்கவைத்துக்கொண்டது. பா.ஜ., தரப்பில் பல 'சலுகைகள்' தெரிவித்தும் கூட்டணி அமைக்க த.வெ.க., முன்வராமல் 234 தொகுதிகளிலும் தனித்தே போட்டியிடுகிறது.
முதன்முறையாக தேர்தலில் போட்டியிட உள்ள த.வெ.க.,வுக்கு பெரும்பான்மையாக ஓட்டளிக்க போவது அவரது ரசிகர்களான இளைஞர்கள்தான். அடுத்ததாக விஜய் சார்ந்திருக்கும் மதத்தைச் சேர்ந்தவர்கள். தமிழகத்தில் முஸ்லிம்களுக்கென சில கட்சிகள் உள்ள நிலையில் கிறிஸ்துவர்களுக்கு ஒரு 'பாப்புலரான' தலைவர் தேவை என்ற எண்ணம் உள்ளது. அது தேர்தலில் எதிரொலிக்க வாய்ப்புள்ளது.
இவர்களை தொடர்ந்து 'எந்த கட்சியும் வேணாம். புதுசா வர்றாப்ல. இந்த முறை விஜய்க்கு ஓட்டளித்துதான் பார்ப்போமே' என்று கருதும் நடு நிலையாளர்களின் ஓட்டுகள் கிடைக்கும்.
அடுத்ததாக 'தி.மு.க., வும், அ.தி.மு.க.,வும் தமிழகத்தை இதுவரை ஆண்டும் ஒன்றும் வளர்ச்சி இல்லை. அவை ஊழல் கட்சிகள்' என இவ்விரு கட்சிகளுக்கு மாற்றாக ஒரு கட்சியை தேடிக்கொண்டிருப்பவர்கள் த.வெ.க.,வுக்கு ஓட்டளிக்க வாய்ப்புள்ளது.
இத்தேர்தலில் த.வெ.க.,வுக்கு 25 சதவீதம் ஓட்டுகள் கிடைக்கும் என பலரும் யூகத்தின் அடிப்படையில் கூறி வருகின்றனர். இளைஞர்கள், நடுநிலையாளர்கள், அ.தி.மு.க., - தி.மு.க., வேண்டாம் என்று கூறுபவர்களால் 25 சதவீதம் ஓட்டுகள் கிடைக்குமா, அவை ஆட்சி அமைக்க உதவுமா என்பது மே 4ல் தெரிந்துவிடும்.

