ADDED : நவ 18, 2024 12:42 AM

நடிகர் தனுஷ் மீது நடிகை நயன்தாரா கடுமையான குற்றச்சாட்டுகளை அடுக்கி வெளியிட்ட அறிக்கை, தென்னிந்திய திரை உலகில் பரபரப்பை ஏற்படுத்தியது.
தனுஷ் இதுவரை அதற்கு பதில் சொல்லவில்லை. ஆனால், நயன்தாரா இப்போது கிளப்பி இருக்கும் விவகாரத்தில், தனுஷ் மீது தவறு இல்லை என்று காட்டும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
இன்று, நயன்தாராவின் பிறந்த நாள்; 39 வயது முடிந்து, 40 வயதில் அடியெடுத்து வைக்கிறார். இதைக் கொண்டாடும் விதமாக, 'நெட்பிளிக்ஸ்' நிறுவனம் ஒரு டாக்குமென்டரி வெளியிடுகிறது. நயன்தாராவும், அவரது கணவர் விக்னேஷ் சிவனும் அதன் தயாரிப்பாளர்கள்.
சிம்பு, பிரபுதேவா ஆகியோருடன் அடுத்தடுத்து உறவு முறிந்து, நயன்தாரா சோர்ந்திருந்த நேரத்தில், நானும் ரவுடி தான் என்ற படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தது. அதன் தயாரிப்பாளர் தனுஷ்; இயக்குனர் விக்னேஷ் சிவன்.
மனதை மாற்றினார்
பட்ஜெட் எகிறியதால் இயக்குனர் மீது தனுஷுக்கு அதிருப்தி. ஒரு கட்டத்தில் படத்தை கைவிட நினைத்தார். நயன்தாரா மிகவும் வற்புறுத்தி தனுஷ் மனதை மாற்றினார். இயக்குனருடன் காதல் உருவானது அதற்கு முக்கிய காரணம்.
படப்பிடிப்பு தளத்தில் காட்சி அமைப்பது மற்றும் ஒத்திகை என்ற பெயரில் இருவரும் காதல் வளர்த்தனர். மொத்த யூனிட்டும் வேடிக்கை பார்த்தது; ஊருக்கும் தெரிந்தது.
படத்தின் காட்சிகளோடு, இவர்களின் காதல் காட்சிகளும் கேமராவில் பதிவாகின. அந்த பதிவுகளை, காட்சிகளுக்கு பின்னால் அல்லது பி.டி.எஸ்., என்று சொல்வர்.
நெட்பிளிக்சை உண்மையில் கவர்ந்தது அந்த நிஜக் காதல் காட்சிகள் தான். டாக்குமென்டரியில் அந்த சீன்களை சேர்க்க வேண்டும் என்றனர்; நயன் சம்மதித்தார்.
நல்ல விலை கொடுக்க ஒப்புக்கொண்டு நெட்பிளிக்ஸ் ஒப்பந்தம் போட்டது; அது கேட்ட காட்சிகளை நயன்தாரா கொடுத்தார்.
மொபைல்போனில் மூன்றாம் நபரால் பதிவு செய்த காட்சிகள் என்று, நெட்பிளிக்சிடம் நயனும், விக்னேஷும் சொல்லி இருந்தனர். ஆனால், நானும் ரவுடி தான் படத்தை ஷூட் செய்த அதே கேமராவில் பதிவான காட்சிகள் தான் இவை என்று, நெட்பிளிக்ஸ் தெரிந்து கொள்ள அவகாசம் தேவைப்படவில்லை.
படத்தின் தயாரிப்பாளரிடம், இந்த காட்சிகளை டாக்குமென்டரியில் சேர்த்துக் கொள்ள எழுத்துபூர்வ அனுமதி வாங்கி தாருங்கள் என்று நயனிடம் கேட்டது, நெட்பிளிக்ஸ்.
இதனால், சிக்கலில் மாட்டிக் கொண்டோம் என்பது, காதல் தம்பதிக்கு உடனே புரிந்தது. நானும் ரவுடி தான் ரிலீசில் இருந்தே தனுஷுடன் உறவு சரி இல்லை.
கடனும், வட்டியும் எகிறியதால், படத்தை அடிமாட்டு விலைக்கு அவர் கைமாற்றி விட்டார்.
படம் அமோகமாக ஓடியதால், அப்படி வாங்கியவருக்கும், வினியோகஸ்தர்களுக்கும் பணம் கொட்டியது. தனுஷுக்கு பத்து பைசா தேறவில்லை. போதாக்குறைக்கு திருமணத்துக்கே நயனோ, விக்னேஷோ தனுஷை அழைக்கவில்லை.
பேச்சுவார்த்தையே நின்று போனது. இப்போது அனுமதி கேட்டால் எப்படி தருவார் என்றாலும், நெட்பிளிக்ஸ் கொடுத்த நெருக்கடியால் தனுஷுக்கு கடிதம் எழுதி கேட்டார் நயன்தாரா. எதிர்பார்த்தது போலவே தனுஷ் அனுமதி கொடுக்கவில்லை; இரண்டு வருடம் ஆகியும் தனுஷ் அசைந்து கொடுக்கவில்லை.
வேறு வழியில்லை என்ற நிலையில், பி.டி.எஸ்., பதிவுகளை நீக்கி, வேறு படங்கள், வீடியோ துண்டுகள் சேர்த்து டாக்குமென்டரியை ரீ- - எடிட் செய்தனர். ஆனால், அந்த காட்சிகளில் ஒன்றை டிரெய்லரில் சேர்த்து வெளியிட்டனர்.
திகைத்தார்
டிரெய்லர் பார்த்த தனுஷுக்கு ஷாக். நாம் கொடுக்காமல் இந்த காட்சிகள் நயனுக்கு எப்படி கிடைத்தன என்று திகைத்தார். அனுமதி இல்லாமல் தனக்கு சொந்தமான படைப்பை பயன்படுத்தியதற்காக, 10 கோடி இழப்பீடு கேட்டு நோட்டீஸ் அனுப்பினார்.
நெட்பிளிக்சிலும் விசாரித்தபோது தனுஷுக்கு தெரிந்தது, மொத்த பி.டி.எஸ்., பதிவுகளும், அவரது ஒண்டர் பார் கம்பெனியில் இருந்தே நயன் கைக்கு போயிருக்கிறது என்பது.
அவருக்கு நெருக்கமான ஒருவரே இதை செய்திருக்கிறார் என்பதும், இதற்காக அவருக்கு, நயன்தாரா 1 கோடி ரூபாயில் கார் வாங்கி பரிசாக அளித்திருக்கிறார் என்பதும் தெரியவந்தது.
ஆனாலும், அந்த நபர் கெட்ட எண்ணம் கொண்டவர் அல்ல என்பதாலும், நட்பு வட்டத்தில் இருப்பதாலும், அவர் மீது நடவடிக்கை எடுக்க தனுஷ் விரும்பவில்லை என்கின்றனர்.
'தனுஷை ரொம்ப நல்லவர் என்றெல்லாம் சொல்லவில்லை; ஆனால், இந்த விவகாரத்தை பொறுத்தவரை நயன்தாரா மீதுதான் தவறு இருக்கிறது. கீழே இறங்கி வந்து பிரச்னைக்கு தீர்வு காண்பதற்கு பதிலாக, ஆத்திரம் கண்ணை மறைத்ததால், தனுஷ் மீது நெருப்பை கொட்டியிருக்கிறார்' என்றார், இந்த விஷயத்தை பகிர்ந்து கொண்ட முக்கிய புள்ளி.
இன்று ஓடிடியில் ரிலீசாகும் டாக்குமென்டரிக்கு நயன் மிகச்சிறப்பாக விளம்பரம் தேடிக்கொண்டார் என்று, கோலிவுட்டில் பலரும் சொல்கின்றனர். இன்னொரு விவகாரம் வெடிக்கும் வரை, நயன் -- தனுஷ் மோதல் செய்தி உயிர்ப்புடன் இருக்கும் என்பது அவர்கள் கணிப்பு
- நமது நிருபர் -.