காங்., செல்வப்பெருந்தகை சொல்லும் 'அயோக்கியன்' யார்? அரசுக்கு அ.தி.மு.க., கேள்வி
காங்., செல்வப்பெருந்தகை சொல்லும் 'அயோக்கியன்' யார்? அரசுக்கு அ.தி.மு.க., கேள்வி
ADDED : அக் 24, 2025 01:58 AM

சென்னை: 'பொதுப்பணித் துறையில் ஒரு 'அயோக்கியன்' இருப்பதாக, தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை யாரை சொல்கிறார்?' என அ.தி.மு.க., கேள்வி எழுப்பியுள்ளது.
சென்னையில் சில நாட்களுக்கு முன், செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து உபரி நீர் திறக்கப்பட்டது. இந்த தகவல் அறிந்ததும், ஏரி அமைந்துள்ள ஸ்ரீபெரும்புதுார் தொகுதியின் எம்.எல்.ஏ.,வும், தமிழக காங்கிரஸ் தலைவ ருமான செல்வப்பெருந்தகை அங்கு சென்று, தனக்கு தெரியாமல் தண்ணீரை திறந்தது குறித்து அதிகாரிகளிடம் கேட்டார்.
மேலும், 'பொதுப்பணித் துறையில் ஒரு அயோக்கியன் உட்கார்ந்திருக்கிறான். ஜாதி வெறி பிடித்து போய், இந்த துறை இருக்கிறது. எப்போதுதான் ஜாதி வெறியில் இருந்து மீண்டு வரப் போகிறோமோ.
'ஏரியில் தண்ணீர் திறந்தால், அதை மக்களிடம் சொல்லி, பாதிக்கப்படுவோரை காப்பது மக்கள் பிரதிநிதிகள் தான். ஆனால், ஏரியில் நீர் திறப்பதை, தொகுதி எம்.எல்.ஏ.,வான எனக்குக் கூட சொல்லவில்லை' என கடுமையாக விமர்சித்தார்.
இந்நிலையில், இது தொடர்பாக சமூக வலைதள பக்கத்தில் அ.தி.மு.க., வெளியிட்ட பதிவு:
தி.மு.க., கூட்டணி கட்சியான காங்கிரசின் தமிழக தலைவர் செல்வப்பெருந்தகை, தி.மு.க., அரசின் பொதுப்பணித் துறையை பார்த்து, 'வெறி பிடித்த துறை' என்கிறார்.
'செம்பரம்பாக்கம் ஏரியை, நான் தொட்டு திறந்து விடக்கூடாதா?,' என அவர் கேட்கும் கேள்வியின் பின்னணி நமக்கு புரியாதா என்ன?
இது தான், முதல்வர் ஸ்டாலின் அடிக்கடி சொல்லிக் கொண்டிருக்கும் சமூக நீதியா? தி.மு.க., கூட்டணியில் உள்ள முக்கிய கட்சியின் தலைவருக்கே கிடைக்காத சமூக நீதி, சாதாரண மக்களுக்கு, தி.மு.க., ஆட்சியில் எப்படி கிடைக்கும்?
பொதுப்பணித் துறையில் ஒரு 'அயோக்கியன்' இருப்பதாக செல்வப்பெருந்தகை கூறியுள்ளார். அந்த அயோக்கியன் யார்? அதை ஊருக்கு சொல்ல வேண்டாமா?
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

