ADDED : ஏப் 18, 2024 12:16 AM

தேர்தல் திருவிழாவில் சுழன்று, சுழன்று வேலை செய்யும் பிரதானக்கட்சிகளின் கிளை, நகர நிர்வாகி முதற்கொண்டு, மாவட்ட பொறுப்பில் உள்ள நிர்வாகிகள் வரை, கட்சிப்பணத்தை மையமாக வைத்தே தேர்தல் பணியாற்றுகின்றனர்;
பண அரசியல் ஒரு புறமிருக்க, ஒரே கட்சிக்குள் நிலவும் கோஷ்டி அரசியல் என்பது இன்னொரு புறம். ஓட்டுப்பதிவின் போது, தங்கள் கட்சி வேட்பாளரின் தோல்விக்கே காரணமாக இருக்கும் அளவுக்கு கூட கோஷ்டி அரசியல் வலிமையானதாக இருக்கிறது. ''வெறும், 2,000 ஓட்ல தான் தோத்தேன்; கட்சிக்காரங்களே சதி பண்ணிட்டாங்க' என, சொற்ப ஓட்டு வித்தியாத்தில் வெற்றியை பறி கொடுத்த பலரை பார்த்திருக்க முடியும்.
ஆனால், ''யாரோ எப்படியோ போகட்டும்ங்க; என் கட்சி இதுதான்; சின்னம் இதுதான். இதைத்தவிர வேறெந்த கட்சிக்கும் ஓட்டுப்போட மாட்டேன். எனக்கு பதவியெல்லாம் முக்கியமில்ல'' என, சொல்லும் அடிமட்ட தொண்டனின் வைராக்கியம் தான், ஒவ்வொரு அரசியல் கட்சிகளையும் தாங்கிப்பிடித்துக் கொண்டிருக்கிறது. வாக்காளர்களின் மனநிலை என்பது அப்படி அல்ல.
தாங்கள் ஒரு கட்சிக்கு ஓட்டளிக்க முடிவெடுத்து விட்டால், அந்த கட்சிக்கு தான் ஓட்டளிப்பர். அந்த கட்சிக்குள் நிலவும் உட்கட்சி பூசல், உள்ளடி வேலை குறித்தெல்லாம் வாக்காளர்களுக்கு கவலையில்லை. சொல்லப்போனால் அரசியல் கட்சியினரை விட வாக்காளர்களும், அடிமட்ட தொண்டனும் தான், உண்மையில் கட்சியை நேசிப்பவர்கள் என்றால் அது மிகையல்ல.

