ADDED : அக் 19, 2025 12:55 AM

புதுடில்லி: க ரூர் சோக சம்பவம், தமிழக வெற்றிக் கழகத்தை சோதனையில் ஆழ்த்தினாலும், இன்னொரு பக்கம் வெளிநாட்டு துாதுவர்கள் பலரும், விஜய் குறித்து அதிகம் தெரிந்து கொள்ளவு ம், அவரை சந்தித்து பேசவும் தயாராகி வருகின்றனர்.
கிட்டத்தட்ட, 85 நாடுகளின் துாதரகங்கள் இந்தியாவில் உள்ளன. இதில் பலரும், வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதி உள்ளனர். அக்கடிதத்தில், 'தமிழக வெற்றிக் க ழகத் தலைவர் விஜயை சந்திக்க வேண்டும்; அதற்கான அனுமதி தேவை' என, குறிப்பிட்டுள்ளனராம்.
வெளிநாடு துாதுவர்கள் இந்தியாவின் மாநில கவர்னர்கள், முதல்வர்கள் மற்றும் அமைச்சர்கள், எதிர்க்கட்சி தலைவர்கள் உட்பட அனைத்து கட்சி தலைவர்கள், தொழிலதிபர்கள் என, பலரையும் சந்திக்க வேண்டுமென்றால், மத்திய வெளியுறவுத் துறையின் அனுமதியை பெற வேண்டும். இந்த அனுமதி இல்லாமல் துாதுவர்களோ அல்லது துாதரகத்தின் சீனியர் அதிகாரிகளோ யாரையும் சந்திக்க முடியாது.
இந்தியாவில் நடைபெறும் பார்லிமென்ட் தேர்தல், சட்டசபை தேர்தல் தொடர்பாக, இந்த வெளிநாட்டு துாதரகங்கள் தங்கள் நாடுகளுக்கு அறிக்கை அனுப்புவது வழக்கம். தமிழகத்தில், புதிதாக துவங்கப்பட்டுள்ள, த.வெ.க.,வின் கொள்கை என்ன... விஜய் முதல்வரானால் என்ன செய்யப் போகிறார் என, பல விபரங்களை அறிந்து கொள்ள, வெளிநாட்டு துாதுவர்கள் ஆவலாக உள்ளனர்.
சென்னையில் உள்ள அமெரிக்கா உட்பட பல துாதரக சீனியர் அதிகாரிகள், விஜய் குறித்து தங்கள் நாடுகளுக்கு ஏற்கனவே அறிக்கை அனுப்பி விட்டனராம். இருப்பினும், விஜயை சந்திக்க ஆர்வமாக உள்ளனர். தனக்கு கடிதம் எழுதிய அதிகாரிகளுக்கு, ஜெய்சங்கர் அனுமதி அளித்து விட்டாராம்.