தி.மு.க., முப்பெரும் விழா யார் நடத்துவது? போட்டியில் செந்தில் பாலாஜிக்கு வெற்றி
தி.மு.க., முப்பெரும் விழா யார் நடத்துவது? போட்டியில் செந்தில் பாலாஜிக்கு வெற்றி
ADDED : ஜூலை 31, 2025 06:52 AM

தி.மு.க., முப்பெரும் விழாவை தங்கள் மாவட்டங்களில் நடத்த, மூத்த அமைச்சர்கள் சிலர் விருப்பம் தெரிவித்துள்ள நிலையில், கரூர் மாவட்டத்தில், அவ்விழாவை மாநாடு போல் நடத்த, தி.மு.க., தலைமை முடிவு செய்துள்ள தகவல் வெளியாகி உள்ளது.
தி.மு.க., துவங்கப்பட்டு, 75 ஆண்டுகள் நிறைவடைந்து, 76ம் ஆண்டில் அடி வைக்கிறது. வரும் செப்., 17ம் தேதி, தி.மு.க., முப்பெரும் விழா கொண்டாடப்படுகிறது. ஆண்டுதோறும் செப்., 15ம் தேதி, அண்ணாதுரை பிறந்த தினம், 17ம் தேதி ஈ.வெ.ரா., பிறந்த தினம் மற்றும் தி.மு.க., துவங்கிய நாள் ஆகியவற்றை இணைத்து, முப்பெரும் விழாவாக, செப்., 17ம் தேதி கொண்டாடுவது தி.மு.க., வழக்கம்.
கடந்த ஆண்டு முப்பெரும் விழா, தென் சென்னை மாவட்ட தி.மு.க., சார்பில் நடத்தப்பட்டது. இந்த ஆண்டு முப்பெரும் விழா, சட்டசபை தேர்தல் நெருக்கத்தில் நடப்பதால், அவ்விழாவை மாநாடு போல் நடத்த, தி.மு.க., தலைமை திட்டமிட்டுள்ளது.
அடுத்த மாதம், த.வெ.க., மாநாடு மதுரையில் நடக்கவுள்ளது. அம்மாநாட்டில் பங்கேற்கும் தொண்டர்களின் கூட்டத்தை விட, அதிக கூட்டத்தை முப்பெரும் விழாவுக்கு கூட்ட வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது. அதனால், சில மூத்த மாவட்டச் செயலர்கள், தங்கள் மாவட்டங்களில் முப்பெரும் விழா நடத்த, கட்சி தலைமையிடம் அனுமதி கேட்டுள்ளனர்.
சமீபத்தில், அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமியின் மக்கள் சந்திப்பு சுற்றுப்பயணம், கொங்கு மண்டலத்தில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக, உளவுத்துறை ஆட்சி தலைமைக்கு ரிப்போர்ட் கொடுத்துள்ளது.
இதனால், கொங்கு மண்டலத்தில், தி.மு.க.,வின் செல்வாக்கை நிரூபிக்கும் வகையில், கரூரில் முப்பெரும் விழா நடத்தலாம் என, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி யோசனை தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே, 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டத்தின் வாயிலாக, தி.மு.க., உறுப்பினர் சேர்ப்பில், கரூர் மாவட்டம் முதலிடம் பிடித்து, மேலிட பாராட்டைப் பெற்றது. இதனால், மாநாட்டை கரூரில் நடத்தலாம் என்ற செந்தில் பாலாஜியின் யோசனையை தலைமை ஏற்றுக் கொண்டது. இதையடுத்து, மும்பெரும் விழாவை மாநாடு போல கரூரில் பிரமாண்டமாக நடத்தும் பொறுப்பு, அவரிடம் ஒப்படைக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
- நமது நிருபர் -