பா.ஜ.,வில் இணைவது யார், யார்? கோவையில் தொடர்கிறது சஸ்பென்ஸ்; கட்சிகளில் திக்... திக்...
பா.ஜ.,வில் இணைவது யார், யார்? கோவையில் தொடர்கிறது சஸ்பென்ஸ்; கட்சிகளில் திக்... திக்...
ADDED : பிப் 28, 2024 05:38 AM

கோவை : 'கோவையில் விழப்போகிறது ஒரு விக்கெட்' என, பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை அளித்த பேட்டி, அரசியல் கட்சியினர் மத்தியில், கொந்தளிப்பை ஏற்படுத்தியது. எந்தெந்த கட்சியில் இருந்து, யார் யார் செல்லப் போகிறார்கள் என்ற விவாதம் நடந்து வருகிறது.
அதில், முன்னாள் அமைச்சர்கள் அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள், முன்னாள் மேயர் உள்ளிட்டோர் இணையப் போவதாக, சமூக வலைதளங்களில் தகவல் வைரலானது. இதை சம்பந்தப்பட்ட அனைவருமே மறுத்துள்ளனர்.
இதை உறுதிப்படுத்தும் வகையில், பா.ஜ., தலைமை அறிவித்தபடி, மாற்றுக்கட்சியினர் இணையும் விழா, கோவையில் நடைபெறவில்லை.
இதற்கு, 'எந்த கட்சியில் இருந்தும் நிர்வாகிகள் இணைய முன்வராததால், இணைப்பு விழா நடத்தவில்லை; பொய்யான தகவலை பரப்பி, மலிவான அரசியலை பா.ஜ., நடத்தி வருகிறது' என, மற்ற கட்சியினர் விமர்சித்து வருகின்றனர்.
இதுகுறித்து, பா.ஜ.,வினர் கூறியதாவது:
அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் மூவர் வருவதற்கு தயாராக இருக்கின்றனர். தி.மு.க.,வை சேர்ந்த முன்னாள் அமைச்சர் மற்றும் அவரது மகன், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த தேசிய நிர்வாகி உள்ளிட்ட பலரும், பா.ஜ.,வுக்கு வரத் தயாராக இருக்கின்றனர்.
பிரதமர் மோடி, தமிழக சுற்றுப்பயணத்தை முடித்துச் சென்றபின், டில்லியில் இணைப்பு விழா கண்டிப்பாக நடக்கும். பல கட்சிகளை சேர்ந்த பெரிய புள்ளிகள் இணைய இருக்கின்றனர்.
அவர்கள் முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் எம்.எல்.ஏ.,க்களாக இருக்கலாம்; தற்போதைய எம்.எல்.ஏ.,க்களாக இருக்கலாம் அல்லது கட்சி நிர்வாகிகளாக இருக்கலாம். இவ்வாறு, அவர்கள் கூறினர்.

