2 தொகுதிகளுக்கு சம்மதித்தது ஏன்? திருமாவளவன் புது விளக்கம்!
2 தொகுதிகளுக்கு சம்மதித்தது ஏன்? திருமாவளவன் புது விளக்கம்!
ADDED : மார் 12, 2024 01:48 AM

சென்னை: ''தி.மு.க., கூட்டணியில், ஆளுங்கட்சியாக உள்ள தி.மு.க.,வுக்கு கடந்த முறையைவிட, இம்முறை இரண்டு தொகுதி குறைந்துள்ளது. இரண்டு தொகுதிகள் ஒன்றாகாமல் போனதே, நம் போராட்டத்துக்கு கிடைத்த வெற்றி தான்,'' என, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்தார்.
சென்னை சைதாப்பேட்டையில், அனைத்து கல்லுாரி அரசு விடுதி முன்னாள் மாணவர்கள் சங்க துவக்க விழாவில், அவர் பேசியதாவது:
அரசியல் களத்தில், விடுதலை சிறுத்தைகள் கட்சி நெருப்பாற்றில் நீந்துவதுபோல் நீந்துகிறது. போகிற போக்கில் சிலர் நம்மை விமர்சிக்கின்றனர், 'ஏன் அங்கு ஒட்டிக் கொண்டிருக்கிறார்; எதற்கு இரண்டுக்கும், ஒன்றுக்கும் நிற்கிறார்' என்கின்றனர்.
லாஜிக்
அரசியல் கட்சி என்றால் என்ன என்று தெரியாதவன் எல்லாம், அரசியல் கட்சி தலைவர்களுக்கு அறிவுரை கூறுகிறான். ஒரு கட்சி துவக்குவது, தொடர்ந்து இயங்குவது, அதை வீரியமாக நடத்துவது என்பது, களத்திற்கு வந்தால் தான் தெரியும்.
தேர்தல் களத்தில் நின்றால்தான் தெரியும். காங்கிரசுக்கு 10; விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு இரண்டா என்கின்றனர். கேட்பதற்கு லாஜிக் நன்றாக உள்ளது.
ஏன் காங்கிரஸ் கட்சிக்கு 10 என, யோசித்து பாருங்கள். ஆண்ட கட்சி காங்கிரஸ். அனைத்து மாநிலங்களையும் ஆண்டது. அன்று மாநில கட்சிகளுக்கு, காங்கிரஸ் கட்சி கூட்டணியில், சீட் பிரித்துக் கொடுத்தது.
இன்று, மாநில கட்சிகளிடம் காங்கிரஸ் வாங்குகிறது. 20 - 30 இடங்களில் போட்டியிடக்கூடிய தேசிய கட்சி, இன்று 10 இடங்களில் போட்டியிடுகிறது. அதன் கிராப் கீழே இறங்கி வருகிறது.
நாம் மேலே போகிறோம். ஆனால், போராடிக் கொண்டிருக்கிறோம். இதற்கு சமூக நெருக்கடி முக்கிய காரணம். விடுதலை சிறுத்தைகள் கட்சி பரந்த பார்வை உள்ள கட்சியாக இருந்தாலும், எல்லா தரப்பு மக்களுக்காக போராடும் கட்சியாக இருந்தாலும், அடிப்படையில் திருமாவளவன் யார் என பார்க்கின்றனர்.
இவர்கள் ஒரு சக்தியாக வளர்ந்தால்... என, ஒரு கேள்வி போடுகின்றனர். இவர்களை எதிர்ப்பவர்கள், நம் கட்சியை எதிர்ப்பாரே என்ற கவலை அவர்களுக்கு உள்ளது. இவர்களை ஊக்கப்படுத்தினால், இவர்களை பிடிக்காதவர்கள் நம்முடைய கட்சிக்கும் ஓட்டளிக்காமல் போய் விடுவரோ என்ற கவலை உள்ளது.
இந்த யதார்த்தத்தை புரிந்து கொள்ள வேண்டி உள்ளது. இதை கடந்து வர வேண்டும். இரண்டு ஒன்றாகாமல் இருப்பதே போராட்டத்துக்கு கிடைத்த வெற்றி.
கடந்த தேர்தலில், உதயசூரியன் 24 தொகுதிகளில் களத்தில் இருந்தது. இம்முறை 22 தொகுதிகள்தான். தி.மு.க.,வுக்கு இரண்டு குறைந்துள்ளது. விடுதலை சிறுத்தைகள் இரண்டு தனி சின்னம். கடந்த முறை ஒரு தனி சின்னம். ஒரே பார்முலா. அதற்குள் சென்று பேசினால்தான் தெரியும்.
ஆளாளுக்கு சமூக வலைதளங்களில் கதை கட்டுகின்றனர். ஒருவன், 50 கோடி என்கிறான்; ஒருவன், 100 கோடி என்கிறான். மாநாட்டுக்கு திருமாவளவன் வாங்கி விட்டார் என்கிறான். சாதாரண மக்களிடம் குழப்பம் ஏற்படுத்த, இப்படி கருத்துக்களை விதைக்கின்றனர்.
தி.மு.க., ஏன் மூன்று தொகுதிகள் தரக்கூடாது; மூன்று தராவிட்டால் திருமாவளவன் கூட்டணியில் ஏன் இருக்கனும் என்ற கேள்வி லாஜிக்காக தெரியும்.
இங்கிருந்து வெளியேறினால், அ.தி.மு.க.,விடம் போகனும் அல்லது தனியாக நிற்கனும். ஒரு தொகுதி கிடைக்கவில்லை என, அ.தி.மு.க., சென்றால் எல்லாம் சாதிக்க முடியுமா. இவ்வளவு நாள் பேசிய கொள்கை, ஒரு தொகுதிக்குதானா.
ஒரு கூட்டணியை உடைத்து வெளியே போனால், கூடுதல் தொகுதிகள் பெற்றாலும், வெற்றி வாய்ப்பு எவ்வளவு என பார்க்க வேண்டும்.
பா.ஜ.,வும் அ.தி.மு.க.,வும் ஏன் பிரிந்து நிற்கின்றனர். ஒன்றாக இருந்தே வெற்றி பெற முடியாதவர்கள், தனித்தனியே நின்று எப்படி வெற்றி பெற முடியும். இது பழனிசாமிக்கும், மோடிக்கும் தெரியாதா; தெரிந்துதான் நிற்கின்றனர்; வேண்டுமென்றே நிற்கின்றனர்.
ஒரே நாளில் மோடி கூப்பிட்டு சேர்ந்து நில் என்றால் பழனிசாமி நிற்பார். ஏன் அவர் சொல்லவில்லை. எல்லாவற்றிலும் அரசியல் உள்ளது. காரணம் உள்ளது.
பிரிப்பதுதான் கணக்கு
தனியே நின்றால், பா.ஜ.,வை எதிர்க்கும் முஸ்லிம், கிறிஸ்தவ ஓட்டுகள், தலித் ஓட்டுகள், கொள்கை ரீதியான ஓட்டுகள் போன்றவை தி.மு.க.,வுக்கு செல்லாமல், அ.தி.மு.க.,விற்கு செல்லும். ஓட்டு வங்கியை பிரிப்பதுதான் கணக்கு.
இதை கணக்கில் எடுத்து ஒரு முடிவுக்கு வருகிறோம். நமக்கு மூன்றாவது தொகுதி தர தயங்கினர்; பரவாயில்லை. இதற்காக கூட்டணியிலிருந்து வெளியே சென்றால், பா.ஜ., எதிர்ப்பு கூட்டணி பலவீனமடைந்து விடும். அதற்கு நாம் காரணமாக இருக்கக் கூடாது.
இவ்வாறு, திருமாவளவன் பேசினார்.
இதே கருத்துக்களை எடுத்துரைத்து, திருமாவளவன் வீடியோ பதிவு ஒன்றையும் வெளியிட்டு உள்ளார்.

