ADDED : பிப் 16, 2025 11:32 PM

திருவனந்தபுரம்: அமெரிக்காவின் வாஷிங்டனில், அந்நாட்டு அதிபர் டொனால்டு டிரம்பை, பிரதமர் நரேந்திர மோடி சந்தித்து பேசியதை, காங்., மூத்த தலைவரும், திருவனந்தபுரம் தொகுதி எம்.பி.,யுமான சசி தரூர் சமீபத்தில் பாராட்டி பேசினார்.
இது குறித்து, சசி தரூர் நேற்று அளித்த விளக்கம்:
பிரதமர் மோடியின் அமெரிக்க பயணம், நம் நாட்டு மக்களுக்கு சில நன்மைகளை ஏற்படுத்தி உள்ளது. டிரம்ப் பதவியேற்ற பின், அவரை சந்தித்த நான்காவது உலக தலைவர் பிரதமர் மோடி என்பது, உலக அரங்கில் நம் நாட்டுக்குள்ள முக்கியத்துவத்தை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.
அதே நேரத்தில், சட்ட விரோதமாக குடியேறியவர்கள் நம் நாட்டுக்கு திருப்பி அனுப்பப்பட்ட விவகாரத்தை, அதிபர் டிரம்பிடம் பிரதமர் மோடி ஏன் எழுப்பவில்லை என்பதும் வியப்பாக உள்ளது. ஒருவேளை, இந்த விவகாரத்தை டிரம்பிடம் மோடி தனியாக எழுப்பினாரா என்றும் தெரியவில்லை.
என்னை பொறுத்தவரை, பிரதமர் மோடியின் அமெரிக்க பயணம், நம் நாட்டுக்கு பயனுள்ளதாக அமைந்துள்ளது. அதனாலேயே அவரை பாராட்டினேன். நான் அனைத்து நேரங்களிலும், காங்கிரஸ்காரராக பேச முடியாது. நான், கட்சியின் செய்தித் தொடர்பாளரும் அல்ல.
இந்த குறிப்பிட்ட விவகாரத்தில், நாட்டின் நலனுக்காக மட்டுமே பேசுகிறேன். அரசு பொறுப்பில் உள்ள ஒருவர், காங்கிரசைச் சேர்ந்தவராக இருந்தாலும் சரி, வேறு எந்த கட்சியைச் சேர்ந்தவராக இருந்தாலும் சரி, ஏதாவது ஒரு செயலை சரியாக செய்தால், அதை ஒப்புக்கொண்டு பாராட்ட வேண்டும். தவறு செய்தால் விமர்சிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.