UPDATED : டிச 22, 2024 03:28 PM
ADDED : டிச 22, 2024 02:27 AM

சென்னை: தமிழக ரயில் திட்டங்களுக்கு, 3,389 ஹெக்டர் நிலம் தேவை; ஆனால், மாநில அரசு இதுவரை, 866 ஹெக்டர் நிலமே கையகப்படுத்தி தந்துள்ளது. இதனால், ரயில் திட்டப் பணிகளில் தாமதம் காணப்படுவதாக, ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ரயில்வே திட்டங்கள் நாடு முழுதும் மண்டல வாரியாக செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த திட்டங்களுக்கான செலவுகள், மத்திய, மாநில அரசுகளின் கோரிக்கைகள், ரயில்வேயின் தேவைகள், சமூக - பொருளாதாரம் சார்ந்த பணிகள் குறித்த பரிசீலனைகள் அடிப்படையில், ஒட்டுமொத்த நிதி கையிருப்பை பொறுத்து, ரயில்வேயால் அனுமதி வழங்கப்படுகிறது.
தமிழகத்தில் செயல்படுத்தப்படும் ரயில்வே உள்கட்டமைப்பு திட்டங்கள், தெற்கு ரயில்வே மண்டலம் வாயிலாக செயல்படுத்தப்படுகின்றன. தமிழகத்தில் திண்டிவனம் - திருவண்ணாமலை, அத்திப்பட்டு - புத்துார், மொரப்பூர் - தர்மபுரி, தஞ்சாவூர் - பட்டுக்கோட்டை உட்பட 10 புதிய ரயில் பாதை திட்டங்கள், 14,669 கோடி ரூபாயில் நடந்து வருகின்றன.
இதில், 24 கி.மீ., துார பணிகள், 1,223 கோடி ரூபாய் செலவில் முடிக்கப்பட்டுள்ளன. அதுபோல், 967 கி.மீ., துாரத்துக்கு 13,381 கோடி ரூபாயில், ஒன்பது வழித்தடங்களில் அகலப்பாதை திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இதில், 37 கி.மீ., துாரம் பணிகள் முடிந்து பயன்பாட்டிற்கு வந்துள்ளன. இருப்பினும், பெரும்பாலான ரயில் திட்டங்களுக்கான நிலத்தை, மாநில அரசு கையகப்படுத்தி தருவதில் தாமதம் ஏற்படுவதால், பணிகள் சுணக்கமாக நடக்கின்றன.
இது குறித்து, ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது:
தமிழகத்தில், கடந்த மூன்று ஆண்டுகளாக ஒப்புதல் அளிக்கப்பட்டு, 10 புதிய ரயில் பாதை திட்டங்கள், மூன்று அகலப்பாதை திட்டங்கள், ஒன்பது இரட்டை பாதை திட்டங்கள் என, 22 ரயில் திட்டங்கள், 33,467 கோடி ரூபாயில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
ஒவ்வொரு பட்ஜெட்டிலும், தமிழக ரயில் திட்டங்களுக்கு நிதி ஒதுக்கப்படுகிறது. இருப்பினும், நிலம் கையகப்படுத்துவதில் தாமதம் ஏற்படுவதால், பணிகளை துரிதப்படுத்த முடியவில்லை. மேலும், திட்டமிட்ட காலத்துக்குள் பணிகளை முடிக்க முடியாத சூழல் ஏற்படுகிறது.
கடந்த பட்ஜெட்டில் தமிழக திட்டங்களுக்கு, 6,362 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழக ரயில் திட்டங்களுக்கு மொத்தம் 3,389 ஹெக்டர் நிலம் தேவை. ஆனால், இதுவரை மாநில அரசு ஒதுக்கியதோ, 866 ஹெக்டர் தான். 1 ஹெக்டேர் என்பது, 2.45 ஏக்கராகும்.
இதனால், புதிய பாதை மற்றும் இரட்டை பாதை திட்டங்கள், பல ஆண்டுகளாக மெதுவாக நடக்கின்றன. கர்நாடகா உள்ளிட்ட சில மாநில அரசுகள், ரயில்வே திட்டங்களை துரிதமாக செயல்படுத்தி வருகின்றன. நிலம் கையகப்படுத்துவது, நில உரிமையாளர்களுக்கான இழப்பீடு வழங்குவது போன்ற பிரச்னைகள் உடனுக்குடன் தீர்க்கப்படுகின்றன.
அதுபோல், தமிழக அரசும், ரயில்வேயுடன் இணைந்து பணியாற்ற வேண்டும். திட்டங்களுக்கான நிலங்களை தாமதம் இன்றி கையகப்படுத்தி தர வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.