14ம் தேதியே மத்திய அரசிடமிருந்து வந்த கடிதத்தை நேற்று முன்தினம் மாநில அரசு வெளியிட்டதேன்?
14ம் தேதியே மத்திய அரசிடமிருந்து வந்த கடிதத்தை நேற்று முன்தினம் மாநில அரசு வெளியிட்டதேன்?
ADDED : நவ 20, 2025 12:06 AM

சென்னை: கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டம் சாத்தியமில்லை என்பதற்கான கடிதம் 14ம் தேதியே பெறப்பட்ட நிலையில், அதை பிரதமர் மோடி தமிழகம் வரும் நாளை ஒட்டி வெளியிட்டு, தமிழக அரசு அரசியல் ஆதாயம் தேடிஉள்ளது.
சென்னையை தொடர்ந்து, மதுரை, கோவை உள்ளிட்ட சில நகரங்களில் மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்த, தமிழக அரசு திட்டமிட்டு உள்ளது.
மதுரையில் 11,360 கோடி ரூபாயில், திருமங்கலம் - ஒத்தக்கடை வரை 31.93 கி.மீ., துாரம்; கோவையில் 10,740 கோடி ரூபாயில், 39 கி.மீ., துாரம் மெட்ரோ ரயில் திட்டங்களை செயல்படுத்த, விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு, மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டது.
கடந்த ஆண்டு, கூடுதல் ஆவணங்களை இணைத்து அனுப்புமாறு, திட்ட அறிக்கையை மத்திய அரசு திருப்பி அனுப்பியது.
அதன் அடிப்படையில், கூடுதல் ஆவணங்களுடன், திருத்தப்பட்ட விரிவான திட்ட அறிக்கையை கடந்த ஆண்டு நவம்பரில் தமிழக அரசு அனுப்பியது.
இந்த இரண்டு மெட்ரோ ரயில் திட்டங்களுக்கும் ஒப்புதல் கிடைத்து விடும் என்ற நம்பிக்கையில், நிலம் கையகப்படுத்துவது போன்ற அடுத்தகட்ட பணிகளையும் தமிழக அரசு துவக்கியது.
இதற்கிடையே, மேற்கண்ட இரண்டு மெட்ரோ ரயில் திட்டங்களுக்கான அறிக்கையை, மத்திய அரசின் நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சகம், தமிழக அரசுக்கு திருப்பி அனுப்பி உள்ளது. 20 லட்சத்துக்கும் குறைவாக மக்கள்தொகை இருப்பதை, முதன்மையான காரணமாக கூறி, இந்த திட்டங்களுக்கு ஒப் புதல் அளிக்க மறுத்துள்ளது.
இந்த தகவல், தமிழக அரசுக்கு, கடந்த 14ம் தேதி வந்து விட்டது. அன்றே அதை வெளியிடாமல், தமிழக அரசு மவுனம் காத்தது.
பிரதமர் மோடி நேற்று கோவை வந்த நிலையில், நேற்று முன் தினம் மெட்ரோ ரயில் திட்டஅறிக்கை திருப்பி அனுப்பப்பட்ட செய்தியை கசிய விட்டது. மேலும், மத்திய அரசு அனுப்பிய கடிதத்தை முழுமையாக வெளியிடாமல், மக்கள் தொகை தொடர்பான சிறு பகுதி
மட்டும் வெளியானது.
அரசு தரப்பில் கேட்டபோது, முழு கடிதம் விபரத்தை தெரிவிக்க, அதிகாரிகள் மறுத்தனர்.
இந்த சூழ்நிலையில், நேற்று தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலை, மத்திய வீட்டு வசதி நகர் மேம்பாட்டு அமைச்சகம், தமிழக அரசின் தலைமைச் செயலருக்கு அனுப்பிய கடிதத்தை, தன் சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டார்.
மத்திய அரசு அனுப்பிய கடிதத்தில், தமிழக அரசு அனுப்பிய திட்ட அறிக்கையில், கோவை மாநகர மக்கள் தொகை, 2011ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி, 15.84 லட்சம்
உள்ளது; மதுரையில் 15 லட்சம் உள்ளது.
ஆனால், 2017ல் மத்திய அரசு உருவாக்கிய மெட்ரோ ரயில் விதிகளின்படி, மெட்ரோ திட்டங்களுக்கு மத்திய அரசின் நிதி உதவி பெற, ஒரு நகரத்தின் மக்கள் தொகை 20 லட்சம் அல்லது அதற்கு மேற்பட்டதாக இருக்க வேண்டும்.
'கோவை மற்றும் மதுரையில், மாநில அரசு திட்ட அறிக்கையில் தெரிவித்தபடி மக்கள் தொகை குறைவாக இருப்பதால், திட்ட அறிக்கை திருப்பி அனுப்பப்படுகிறது' என, கடிதத்தில் தெரிவித்து உள்ளது.
இதையடுத்து, கடந்த 2011ம் ஆண்டு கணக்கெடுப்பை, மாநில அரசு அனுப்பியிருந்தாலும், 2017ல் மத்திய அரசு உருவாக்கிய விதி குறித்து, மாநில அரசு அறியவில்லையா அல்லது இப்படி ஒரு விதி இருந்தால், நம் திட்டம் ஒப்புதல் ஆகாதே என எந்த தமிழக அதிகாரியும் யோசிக்கவில்லையா என்ற சந்தேகம் எழுகிறது.
இவ்விவகாரத்தில்
தமிழக அரசு அரசியல் செய்யாமல், மத்திய அரசிடம் மீண்டும் மக்கள் தொகை விபரத்தை தெரியப்படுத்தி, மெட்ரோ திட்டத்திற்கு ஒப்புதல் பெற வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.
'தமிழகத்தை புறக்கணிப்பது அழகல்ல!'
தமிழக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கை:
கோவில் நகர் மதுரைக்கும், தென்னிந்திய 'மான்செஸ்டர்' கோவைக்கும் மெட்ரோ ரயில் இல்லை என மத்திய அரசு நிராகரித்துள்ளது. அனைவருக்கும் பொதுவானதாக செயல்படுவதுதான் அரசுக்கான இலக்கணம். அதற்கு மாறாக, பா.ஜ.,வை தமிழக மக்கள் நிராகரிப்பதற்காக, இப்படி பழி வாங்குவது கீழ்மையான போக்கு.
பா.ஜ., ஆளும் மாநிலங்களில் உள்ள சிறிய இரண்டாம் நிலை மாநகரங்களுக்கு கூட, மெட்ரோ ரயிலுக்கான ஒப்புதல் வழங்கிவிட்டு, எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களை புறக்கணிப்பது அழகல்ல. கூட்டாட்சி கருத்தியலை இப்படி சிதைப்பதை, சுயமரியாதைமிக்க மண்ணான தமிழகம் ஒருபோதும் ஏற்றுக் கொள்ளாது.
சென்னை மெட்ரோ ரயில் பணிகளை தாமதப்படுத்தி, முடக்க நடந்த முயற்சிகளை முறியடித்து முன்னேறினோம். அதேபோல, மதுரை மற்றும் கோவையிலும் வருங்கால வளர்ச்சிக்கு இன்றியமையாத தேவையான மெட்ரோ ரயிலை கொண்டு வருவோம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

