சமஸ்கிருத வளர்ச்சிக்கு ரூ.12 கோடி; தமிழக அரசு செலவிட்டது ஏன்: பா.ஜ.,
சமஸ்கிருத வளர்ச்சிக்கு ரூ.12 கோடி; தமிழக அரசு செலவிட்டது ஏன்: பா.ஜ.,
ADDED : ஜூன் 25, 2025 02:04 AM

சென்னை : “மத்திய அரசு, சமஸ்கிருதத்தை மேம்படுத்த 2,532.59 கோடி ரூபாய்; தமிழ் உட்பட ஐந்து மாநில மொழிகளுக்கு 147.56 கோடி ரூபாயை கடந்த ஆண்டு ஒதுக்கியதாக செய்தி வெளியானது.
இச்செய்தியை முதல்வர் ஸ்டாலின், தன் 'எக்ஸ்' வலைதளத்தில் பதிவிட்டு, 'போலிப்பாசம் தமிழுக்கு, பணமெல்லாம் சமஸ்கிருதத்துக்கு' எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கு பதிலளித்து, தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்ட அறிக்கை:
ஏற்கனவே பலமுறை விளக்கம் அளித்த மொழிவாரியான நிதி ஒதுக்கீடு குறித்து, பொய் பிரசாரம் செய்ய துவங்கி இருக்கிறார் முதல்வர் ஸ்டாலின்.
தமிழகத்தில் பலமுறை ஆட்சியில் இருந்தும், மத்தியில் பசையான அமைச்சர் பதவிகளை வகித்தும், அப்பா, மகன், பேரன் என, தலைமுறை தலைமுறையாக தமிழ்ப்பற்று என்று வெறும் வாயிலேயே வடை சுடுவதைத் தவிர, கேரளா, கர்நாடகா, ஆந்திராவில் புதிய தமிழ் பல்கலை அமைக்க, தி.மு.க., என்ன முயற்சி எடுத்தது; யார் உங்களை தடுத்தது?
மத்திய அரசில் அமைச்சர் பதவி வாங்கிக் கொண்டு, உலகம் போற்றும் ஊழல்களை செய்து கொண்டிருந்த 2006 - 2014 எட்டு ஆண்டுகளில், தி.மு.க., அங்கம் வகித்த மத்திய அரசு, சமஸ்கிருதத்துக்கு ஒதுக்கிய நிதி 675.36 கோடி ரூபாய்.
தமிழுக்கு வெறும் 75.05 கோடி ரூபாய் மட்டுமே. அப்போது எங்கு சென்றன இந்த வாடகை வாய்கள்?
தமிழக பள்ளிக்கல்வி துறை, சமஸ்கிருத மொழி வளர்ச்சிக்கு கடந்த ஆண்டு 11.68 கோடி ரூபாய் செலவிட்டதே, அது எதற்காக என்று கூற முடியுமா. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.