இ.சி.ஆரில் பெண்கள் காரை துரத்தியது ஏன்? கைதானவர் சொல்லும் கதை
இ.சி.ஆரில் பெண்கள் காரை துரத்தியது ஏன்? கைதானவர் சொல்லும் கதை
ADDED : பிப் 03, 2025 05:48 AM

சென்னை : ''என் கூட்டாளி சந்தோஷ் பிடிக்கச்சொன்னதால், இ.சி.ஆரில், பெண்களை காரில் துரத்தினேன்,'' என, கைதான சந்துரு வாக்குமூலம் அளித்துள்ளார்.
சென்னை, இ.சி.ஆரில், அதிகாலை, 2:00 மணியளவில், டாடா சபாரி கார் மற்றும் மஹிந்திரா தார் ஜீப்பில், மற்றொரு காரில் சென்ற பெண்களை துரத்தியது தொடர்பாக, கானத்துார் போலீசார் கல்லுாரி மாணவர்கள் உட்பட, ஐந்து பேரை கைது செய்துஉள்ளனர்.
கடத்தல் வழக்கு
அவர்களில், இரும்புலியூரைச் சேர்ந்த சந்துரு, 26 என்பவர் போலீசாரிடம் அளித்துள்ள வாக்குமூலம்:
சென்னை பீர்க்கங்காரணையைச் சேர்ந்த சந்தோஷ், 28, என்பவரும் நானும் கூட்டாளிகள். நான் பொறியியல் படித்துள்ளேன். மொபைல் போன் கடை நடத்தி வந்தேன். அதில், ஒரு பிரச்னை ஏற்பட்டு கைதாகி சிறைக்கு சென்றேன்.
வெளியே வந்த பின், என் கூட்டாளிகள் சிலர், எங்கள் வீட்டிற்கு அருகே வசிக்கும் ஒருவரை கடத்தி பணம் பறித்து, என் வங்கி கணக்கில் செலுத்தினர். இதனால், அந்த கடத்தல் வழக்கிலும் கைதாகி சிறைக்கு சென்று வந்தேன். அதில் ஜாமின் கிடைத்ததும், பழைய கார், பைக் வாங்கி விற்கும் தொழில் செய்து வருகிறேன்.
இதே தொழில் செய்யும் இரும்புலியூர் சந்தோஷ் அறிமுகம் கிடைத்தது. அவர் அந்த பகுதியில் கட்டப்பஞ்சாயத்து செய்து வந்தார். பொத்தேரி கல்லுாரி மாணவர்கள் பிரச்னையில் சிக்கும் போது நாங்கள் இருவரும் பஞ்சாயத்து செய்வோம். என்னை தேடி, மஹிந்திரா தார் ஜீப்பில், சந்தோஷ் மற்றும் கல்லுாரி மாணவர்கள் ஆறு பேர் வந்தனர்.
வாக்குவாதம்
நானும் மாணவர்கள் மூவரும் டாடா சபாரியிலும், சந்தோஷ் மற்றும் 2 மாணவர்கள் ஜீப்பிலும் கோவளத்துக்கு இ.சி.ஆர்., வழியாக சென்றோம். முட்டுக்காடு சென்ற போது, சந்தோஷ் மொபைல் போனில் அழைத்தார். நம் காரை இடித்து விட்டு, கார் ஒன்று நிற்காமல் செல்கிறது. அதை பிடி என்றார். நானும் அந்த காரை துரத்தி சென்றேன்.
பாலத்தில் அந்த காரை மடக்கி குறுக்கே நிறுத்தினேன். அந்த காரில் இருந்த பெண்கள் அதற்குள் ரிவர்ஸ் எடுத்து, கானத்துார் சென்று விட்டனர். நானும் வீடு வரை துரத்தினேன். சந்தோஷும் வந்துவிட்டார். பெண்களிடம் வாக்குவாதம் செய்தோம். அப்போது, நான் சொன்னது இவர்களின் காரை அல்ல; அதனால், அவர்களிடம் மன்னிப்பு கேள் என சந்தோஷ் கூறினார். நானும் மன்னிப்பு கேட்டேன்.
போக்குவரத்து போலீசாரிடம் கெத்து காட்டவும், சுங்க சாவடியில் கட்டணம் செலுத்தாமல் போகவும் தான், காரில் தி.மு.க., கொடி கட்ட சந்தோஷ் சொன்னார். அதன்படி கட்டினேன். நான் எந்த கட்சியிலும் இல்லை.
என் தாத்தா, எம்.ஜி.ஆரிடம் டிரைவராக இருந்தார். என் மாமா செந்தில்குமார், தாம்பரம் பகுதியில் அ.தி.மு.க., நிர்வாகி. இவ்வாறு சந்துரு வாக்கு மூலம் அளித்துள்ளார்.

