UPDATED : ஆக 31, 2025 08:34 AM
ADDED : ஆக 31, 2025 07:37 AM

கடந்த முறை அமெரிக்க அதிபராக இருந்த டொனால்டு டிரம்ப் இந்தியா வந்தபோது, அவரும், பிரதமர் மோடியும் கட்டித் தழுவி நட்பை வெளிப்படுத்தினர். ஆனால் இந்த முறை அதிபரான டிரம்ப் மாறிவிட்டார்.
'ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்தாவிட்டால் வரிவிதிப்பு அதிகமாக இருக்கும்' என எச்சரித்தார். ஆனால், மோடியோ அதை கண்டுகொள்ளாமல், 'இந்திய மக்களுக்கு எது நன்மை தருமோ அதைத்தான் செய்வேன்' எனக் கூறி, டிரம்பை 'டம்மி'யாக்கிவிட்டார்.
கோபத்தில் கொந்தளித்த டிரம்ப் இந்தியா மீது ஏகப்பட்ட வரிவிதிப்பு செய்து, மோடியின் துரோகியாகிவிட்டார். இப்படி நண்பர் துரோகியாக மாறியது ஏன்? இதற்கு, நான்கு காரணங்கள் சொல்லப்படுகின்றன.
முதலாவது, 2019ல் டிரம்ப் அதிபராக இருந்தபோது, அப்போதைய பாகிஸ்தான் பிரதமரான இம்ரான் கான் அமெரிக்க சென்றார். அப்போது, 'காஷ்மீர் பிரச்னையில் தீர்வு காண அமெரிக்க உதவியை மோடி நாடியுள்ளார்' என, இம்ரானிடம் தெரிவித்தாராம் டிரம்ப்; இதற்கு மறுப்பு தெரிவித்தார் மோடி.
இரண்டாவது, அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெற்றபோது, டிரம்ப் மற்றும் கமலா ஹாரிஸ் என, இரண்டு வேட்பாளர்களையும் சந்திக்க நேரம் கேட்டிருந்தாராம் மோடி. உடனே, ஒரு கூட்டத்தில், 'மோடி என்னை சந்திக்க வருகிறார்' என, அறிவித்துவிட்டார், டிரம்ப்; ஆனால் கடைசி நேரத்தில், கமலா ஹாரிஸ் சந்திக்க நேரம் ஒதுக்கவில்லை. 'ஒரு வேட்பாளரை மட்டும் சந்தித்தால் சரியிருக்காது' என, தன் அமெரிக்க பயணத்தையே ரத்து செய்துவிட்டார் மோடி.
மூன்றாவது, 'இந்தியா -- பாக்., போரை நிறுத்தியது நான்தான்' என, 42 முறை சொல்லிவிட்டார் டிரம்ப். 'ஆனால், இது உண்மையல்ல' என மோடி கூறியதை, டிரம்ப் காது கொடுத்து கேட்கவே இல்லை.
நான்காவது, கனடாவில் நடந்த, 'ஜி - 7' மாநாட்டில் மோடி - டிரம்ப் சந்திப்பதாக இருந்தது. ஆனால், திடீரென கிளம்பிய டிரம்ப், தன் வெள்ளை மாளிகையில், இரவு விருந்திற்கு மோடியை அழைத்தார்.
அதே சமயத்தில், பாக்., ராணுவ தளபதி ஆசிம் முனீரையும் அதே இரவு விருந்திற்கு அழைத்திருந்தார் டிரம்ப். இதனால், அந்த அழைப்பை மறுத்துவிட்டார் மோடி.
'இதனால்தான், கோபத்தில் இந்தியா மீது வரிவிதிப்பு என்ற ஏவுகணையை உபயோகித்தார் டிரம்ப்' என, சொல்லப்படுகிறது. இதற்கிடையே, 'டிரம்ப், நான்கு முறை மோடியை தொலைபேசியில் தொடர்பு கொள்ள முயற்சித்தார்; ஆனால், அந்த அழைப்பை மோடி ஏற்கவில்லை' என, ஜெர்மனியிலிருந்து வெளியாகும் செய்தித்தாள், செய்தி வெளியிட்டுள்ளது.

