ராமதாசை கூட்டணியில் சேர்க்க முதல்வர் ஸ்டாலின் தயங்குவது ஏன்?
ராமதாசை கூட்டணியில் சேர்க்க முதல்வர் ஸ்டாலின் தயங்குவது ஏன்?
ADDED : ஜன 22, 2026 05:07 AM

சென்னை: அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணியில், கடந்த 7ம் தேதி பா.ம.க., தலைவர் அன்புமணி இணைந்தார்; அதை தொடர்ந்து, அ.ம.மு.க., பொதுச்செயலர் தினகரனும் இணைந்துள்ளார்.
அ.தி.மு.க., கூட்டணியில் அன்புமணி இணைந்துள்ளதை கடுமையாக எதிர்த்துள்ள ராமதாஸ், 'பா.ம.க., தலைவர் நான் தான்; என்னுடன் தான் கூட்டணி பேச முடியும்' என கூறி வருகிறார். அன்புமணிக்கு எதிராக, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்துள்ளார்.
அ.தி.மு.க.,வுடன் அன்பு மணி இணைந்துள்ளதால், ராமதாசை தி.மு.க., கூட்டணியில் சேர்க்க, பா.ம.க., கவுரவ தலைவர் ஜி.கே.மணி முயற்சித்து வருகிறார். இது தொடர்பாக, வி.சி., தலைவர் திருமாவளவனுடனும் அவர் பேசி வருவதாக கூறப்படுகிறது.
ஆனால், வி.சி., - பா.ம.க., தொண்டர்கள் களத்தில் இணைந்து செயல்பட வாய்ப்பில்லை. இதனால், 2011 சட்டசபை தேர்தலில் நடந்தது போல, வன்னியர், பட்டியலினத்தவர் ஓட்டுகள் அ.தி.மு.க.,வுக்கு சென்று விடும் என தி.மு.க., கருதுகிறது. இதனால், ராமதாசை கூட்டணியில் சேர்க்க, ஸ்டாலின் தயக்கம் காட்டுவதாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக, தி.மு.க., நிர்வாகி ஒருவர் கூறியதாவது: கூட்டணியில் இல்லாவிட்டாலும், தி.மு.க.,வுடன் இணக்கமாக இருப்பவர் ஜி.கே.மணி. ராமதாஸ் மீதும் முதல்வருக்கு மரியாதை உள்ளது. அவரை கூட்டணியில் சேர்க்க, ஸ்டாலினுக்கும், திருமாவளவனுக்கும் விருப்பம் தான்.
ஆனால், ராமதாஸ் கூட்டணிக்குள் வந்தால், எதிர்க்கட்சிகள் பழைய சம்பவங்களை கிளறும். வன்னியர் ஓட்டுகளை ஒன்றிணைக்க, வி.சி., கட்சியினரை அன்புமணி ஆதரவாளர்கள் சீண்டுவர்; இது, தேவையற்ற சிக்கலை உருவாக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

