அமித் ஷா கருத்துக்கு பழனிசாமி மவுனம் ஏன்: திருமா
அமித் ஷா கருத்துக்கு பழனிசாமி மவுனம் ஏன்: திருமா
ADDED : ஜூன் 29, 2025 01:56 AM

பெரம்பலுார் : ''செல்வப்பெருந்தகை, ராமதாஸ் சந்திப்பு குறித்து, யூகத்தின் அடிப்படையில் பதில் சொல்ல முடியாது,'' என்று வி.சி.க., தலைவர் திருமாவளவன் தெரிவித்தார்.
பெரம்பலுார் மாவட்டம், மேலமாத்துாரில் வி.சி.க., தலைவர் திருமாவளவன் அளித்த பேட்டி:
அ.தி.மு.க.,- - பா.ஜ., கூட்டணி வெற்றி பெற்றால், தமிழகத்தில் கூட்டணி ஆட்சி தான், என்று பா.ஜ., கட்சியினர் தான் தொடர்ந்து பேசி வருகின்றனர். ஆனால், முன்னாள் முதல்வர் பழனிசாமி இதுவரை இதுகுறித்து வாய் திறக்கவில்லை. அவர்தான் பதில் சொல்ல வேண்டும்.
மேலும், தமிழகத்தில், தேசிய ஜனநாயக கூட்டணியில் அ.தி.மு.க., உள்ளதா அல்லது அ.தி.மு.க., தலைமையில் தான் கூட்டணியா என்பதை பழனிசாமி தான் விளக்க வேண்டும்.
தி.மு.க., கூட்டணியில் பா.ம.க., இணையலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவி வரும் நிலையில், பா.ம.க நிறுவனர் ராமதாசை, காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை நேரில் சந்தித்தது கூட்டணி குறித்து பேசுவதற்காகவா? என்பது எனக்கு தெரியாது.
பா.ம.க.,வில் நிலவும் குழப்பம் தந்தை, மகனுக்கு இடையிலான ஒன்று. அதில் நாங்கள் கருத்து சொல்ல ஒன்றுமில்லை. இவ்வாறு, அவர் தெரிவித்தார்.