பா.ஜ., - பா.ம.க., ஒப்பந்தம் கையெழுத்து பொதுச்செயலாளர் 'மிஸ்சிங்' ஏன் ?
பா.ஜ., - பா.ம.க., ஒப்பந்தம் கையெழுத்து பொதுச்செயலாளர் 'மிஸ்சிங்' ஏன் ?
ADDED : மார் 21, 2024 12:05 AM

பா.ஜ., பா.ம.க., கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தின் போது பொதுச்செயலாளர் கலந்து கொள்ளாதது அவரது அவசர பேட்டியே காரணம் என அக்கட்சியினரிடையே பேசப்பட்டு வருகின்றது.
லோக்சபா தேர்தலில் பா.ம.க., அ.தி.மு.க.,வுடன் கூட்டணியா? பா.ஜ.,வுடன் கூட்டணியா? என தினம் தினம் தமிழக அரசியலில் மட்டுமன்றி, இந்திய அரசியலிலும் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வந்தது.
இந்நிலையில் கடந்த 18ம் தேதி விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அடுத்த தைலாபுரம் தோட்டத்தில் பா.ம.க., கட்சியின் உயர்மட்ட குழு கூட்டமும், அதனைத் தொடர்ந்து நடந்த மாவட்ட செயலாளர்கள் கூட்டத்திலும் பா.ஜ., கட்சியுடன் கூட்டணி வைப்பது என முடிவு செய்யப்பட்டது.
தோட்டத்திற்கு வெளியே காத்திருந்த செய்தியாளர்களிடம் பா.ம.க., தலைமை எந்த ஒரு அறிவிப்பையும் அதிகாரபூர்வமாக வெளியிடவில்லை. கூட்டத்தில் இருந்து வெளியே வந்த அக்கட்சியின் பொதுச்செயலாளர் வடிவேல் ராவணன் பா.ஜ., கட்சியுடன் கூட்டணி என பேட்டியளித்தார்.
இதனை அடுத்து அன்று இரவு அவர் அங்கிருந்து புறப்பட்டு சென்றார். புறப்பட்ட சிறிது நேரத்தில் அவருக்கு தோட்டத்திலிருந்து போன் மூலம் டோஸ் விழுந்ததால், அதனைத் தொடர்ந்து நேற்று முன்தினம் நடந்த கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்து மற்றும் கட்சியின் தலைவரின் செய்தியாளர்கள் சந்திப்பு ஆகியவற்றில் பொதுச் செயலாளர் வடிவேல் ராவணன் பங்கேற்கவில்லை.
இதற்கு காரணம் பா.ம.க., கட்சியின் கூட்டணி முடிவு குறித்த அறிவிப்பை அக்கட்சியின் நிறுவனரோ, தலைவரோ அறிவிப்பு வெளியிடுவதற்கு முன்பு பொதுச்செயலாளர் அவசரப்பட்டு முந்திரிக்கொட்டை தனமாக முந்திக்கொண்டு செய்தியாளர்களிடம் பேட்டி கொடுத்ததால் தான் தோட்டத்தின் தரப்பு டென்ஷனாகியது.
அதன் காரணமாகவே பொதுச்செயலாளர் மறுநாள் நடந்த கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்து, அதனைத் தொடர்ந்து நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் பங்கேற்வில்லை என பா.ம.க., தரப்பில் பேசப்பட்டு வருகிறது.
மேலும் விழுப்புரம் வேட்பாளர் லிஸ்டில் அவரது பெயர் இடம் பெருமா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.
-நமது நிருபர்-

