நல வாரியம் அமைக்காதது ஏன்? கோவில் பூசாரிகள் நலச்சங்கம் கேள்வி
நல வாரியம் அமைக்காதது ஏன்? கோவில் பூசாரிகள் நலச்சங்கம் கேள்வி
UPDATED : ஜன 30, 2024 07:32 AM
ADDED : ஜன 29, 2024 11:41 PM

பல்லடம்:மூன்று ஆண்டுகள் ஆகியும், நலவாரியம் அமைக்காதது ஏன்? என, தமிழக அரசுக்கு, கோவில் பூசாரிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
இது குறித்து கோவில் பூசாரிகள் நலச் சங்கத்தின் மாநிலத் தலைவர் வாசு கூறியதாவது:
தமிழகம் முழுவதும், அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ், 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோவில்கள் உள்ளன. இவற்றில் வேலை பார்க்கும் அர்ச்சகர்கள், பூசாரிகளின் நலன் கருதி, நலவாரியம் அமைத்து தர வேண்டும் என நீண்ட காலமாக கோரிக்கை வைத்து வருகிறோம்.
ஆட்சி பொறுப்பேற்றதும் நிச்சயமாக நலவாரியம் அமைத்து தரப்படும் என, தி.மு.க., அரசு கடந்த சட்டசபை தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டிருந்தது. ஆனால், மூன்று ஆண்டுகள் கடந்த பின்னும், இதுவரை நல வாரியம் அமைக்கப்படவில்லை.
நல வாரியத்துக்கான அலுவலர் சாரா உறுப்பினர்களும் அறிவிக்கப்படவில்லை. இதன் காரணமாக, கோவில் அர்ச்சகர்கள் பூசாரிகளுக்கு கிடைக்க வேண்டிய நலத்திட்ட பயன்கள் கிடைக்கப்பெறாமல் முடங்கி கிடக்கின்றன.
நலவாரியம் அமைக்கப்படாமல் எதற்காக நீண்ட காலமாக கிடப்பில் போடப்பட்டுள்ளது; எதற்காக தமிழக அரசு தயக்கம் காட்டி வருகிறது என, பூசாரிகள் பலரும் தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகின்றனர்.
மேலும், இதர வாரியங்கள் எல்லாம் அமைக்கப்பட்டு செயல்பாட்டில் உள்ள நிலையில், கோவில் அர்ச்சகர்கள், பூசாரிகளுக்கு மட்டும் நல வாரியம் அமைக்கப்படாமல் இருப்பது வேதனை அளிக்கிறது. எனவே தமிழக அரசு உடனடியாக நல வாரியத்தை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.