கூண்டோடு அதிகாரிகள் மாற்றம் ஏன்? காசு, பணம், துட்டு, மணி மணி தான்!
கூண்டோடு அதிகாரிகள் மாற்றம் ஏன்? காசு, பணம், துட்டு, மணி மணி தான்!
ADDED : மார் 17, 2024 12:48 AM

லோக்சபா தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன், மத்திய பிரதேசம் மற்றும் சத்தீஸ்கரில், கடந்த இரண்டு வாரங்களில், கிட்டத்தட்ட 1,000க்கும் மேற்பட்ட அதிகாரிகள் மாற்றப்பட்டுள்ளனர். இதற்கு முக்கிய காரணம், மேலே உள்ள தலைப்பு தான்.
தேர்தல் தேதி அறிவிப்பு வெளியான உடன், தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துவிடும்.
'டிரான்ஸ்பர்'
அதன்பின், மாநிலங்களின் அதிகாரிகள் தொடர்பான நிர்வாகம், தேர்தல் கமிஷன் கட்டுப்பாட்டுக்குள் சென்றுவிடும்.
ஒரே இடத்தில் நீண்ட நாள் இருக்கும் அதிகாரிகள் உள்ளிட்டோர் மாற்றப்படுவர். சாதாரணமாக இது குறைந்த அளவுக்கே இருக்கும்.
மத்திய பிரதேசம் மற்றும் சத்தீஸ்கரில், கடந்த இரண்டு வாரங்களில், ஐ.ஏ.எஸ்., -- ஐ.பி.எஸ்., உள்ளிட்ட 850க்கும் மேற்பட்ட அதிகாரிகள் மாற்றப்பட்டுள்ளனர். சத்தீஸ்கரில், 350 பேரும், மத்திய பிரதேசத்தில், 500 பேரும் மாற்றப்பட்டுள்ளனர்.
இந்த இரண்டு மாநிலங்களிலும், சமீபத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதை தொடர்ந்து, அதிகாரத்தில் உள்ளவர்கள் தங்களுக்கு வேண்டியவர்களுக்கு, பசையான இடங்கள் வழங்குவது என்பது வாடிக்கை தான்.
தங்களுடைய அலைவரிசைக்கு ஒத்துபோகும் அதிகாரிகளை முக்கிய இடங்களில் வைப்பதால், நிர்வாகம் சிறப்பாக இருக்கும் என்று ஆட்சியாளர்கள் கூறுவர்.
ஆனால், இதற்கு பின்னணியில் உள்ளது, காசு, பணம், துட்டு, மணி, மணிதான். கடந்த, 1980களில், காங்கிரசின் மூத்த தலைவரான அர்ஜுன் சிங், ஒருங்கிணைந்த மத்திய பிரதேசத்தின் முதல்வராக இருந்தார். மாநிலத்தில் அப்போது பெரிய அளவில் தொழில் நிறுவனங்கள் கிடையாது.
இதனால் அரசுக்கும், கட்சிக்கும் பெரிய அளவில் வருமானம் கிடைக்காமல் இருந்தது. அப்போது உதயமானது தான், 'டிரான்ஸ்பர்' என்ற தொழில்.
மறைமுக பிரசாரம்
இதைப் பயன்படுத்தி, ஆட்சிக்கும், கட்சிக்கும், கட்சி நிர்வாகிகளுக்கும் வருமானம் பார்க்கும் முறை துவங்கியது. ஒரு குறிப்பிட்ட போலீஸ் ஸ்டேஷனில் உள்ள ஒரு கான்ஸ்டபிள், அங்கேயே  இருக்க, உள்ளூர் அரசியல்வாதிகளை நாடினர்.
அப்படி துவங்கி, எந்த முதலீடும் இல்லாத, எந்த நஷ்டமும் இல்லாத, மிகப் பெரும் தொழிலாக, டிரான்ஸ்பர் தொழில் வளர்ச்சி அடைந்தது.
இது அனைத்து மாநிலங்களுக்கும் பரவியது வேறு விஷயம்.
இப்படி, ஒவ்வொரு நிலையிலும் உள்ள அதிகாரிகள், ஊழியர்களிடம் இருந்து, கட்சிக்காரர்கள் பணம் பார்த்தனர். அதுபோல, பிரச்னைகள் வராமல் பார்த்துக் கொள்ள, நிறுவனங்கள், தொழில்களிடம் இருந்தும், பணம் வசூலிப்பதும் மாமூலானது.
லோக்சபாவுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்ட உடன், அதிகாரிகளை மாற்ற முடியாது என்பதால், கடந்த, இரண்டு வாரங்களில் அதிரடியாக பலர் மாற்றப்பட்டனர். இதன் வாயிலாக கட்சியினருக்கும் பணம் கிடைத்தது.
மற்றொரு வகையில், இந்த டிரான்ஸ்பர், ஆட்சியில் உள்ள கட்சிக்கும் சாதகம் கிடைத்து வந்தது.
அதாவது, நல்ல பசையுள்ள இடத்தில், தங்களுக்கு வேண்டியவர்களை உட்கார வைத்தால், அவர்கள், கட்சிக்கு மறைமுகமாக பிரசாரம் செய்வர் என்பதும், ஆட்சியாளர்களின் கணிப்பு.
காரணமும், காசும் இல்லாமல், அரசியல்வாதிகள் ஏதாவது செய்வரா?
- நமது சிறப்பு நிருபர் -

