பாரதிதாசன் மீது திடீர் பாசம் ஏன்? அரசுக்கு மாநகர தமிழ் சங்கம் கேள்வி
பாரதிதாசன் மீது திடீர் பாசம் ஏன்? அரசுக்கு மாநகர தமிழ் சங்கம் கேள்வி
ADDED : மே 02, 2025 04:53 AM

சென்னை: 'தி.மு.க., அரசுக்கு, கவிஞர் பாரதிதாசன் மீது வந்திருக்கும் திடீர் பாசம், ஆச்சரியப்பட வைக்கிறது' என, சென்னை மாநகர தமிழ் சங்கத்தின் தலைவர் பாரதி சுகுமாரன் தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை:
தி.மு.க., அரசு அமைந்து, நான்கு ஆண்டுகள் கடந்த நிலையில், தி.மு.க., அரசுக்கு பாரதிதாசன் மீது வந்திருக்கும் திடீர் பாசம் ஆச்சரியப்பட வைக்கிறது. பாரதிதாசன் தமிழினத்திற்கு வீர உணர்ச்சியை ஏற்படுத்தியவர்.
அவரது பாடல்கள் புரட்சிகர உணர்வை உண்டாக்கிடக் கூடியவை. தமிழக அரசு அவருக்கு விழா எடுப்பது, அவரது பிறந்த நாளையொட்டி தமிழர் வார விழாவை அறிவிப்பது, தமிழ் மண்ணிற்கு பெருமை தான். எனினும், முன்னதாகவே இந்த முன்னெடுப்பை எடுத்திருந்தால், அது போற்றுதலுக்கும், பாராட்டுதலுக்கும் உரியதாக இருந்திருக்கும்.
அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடக்க உள்ள நேரத்தில், இந்த அறிவிப்பை வெளியிட்டிருப்பது, தேர்தலை மனதில் வைத்து, தமிழினத்திற்கான அரசு தி.மு.க., என்பதை வெளிக்காட்டிக் கொள்ளும் முயற்சியாகவே தமிழர்கள் காண்கின்றனர்.
நாட்டின் எல்லையில் போர் பதற்றம் உண்டாகியுள்ள நிலையில், தேச ஒற்றுமையை வலியுறுத்தும் நிகழ்வுகளை தமிழக அரசு முன்னெடுத்திருக்கலாம். அதை விடுத்து, சட்டசபை தேர்தலை முன்வைத்து, திடீரென பாரதிதாசன் பெயரில் தமிழர் வார விழாவை நடத்துவது, இன உணர்வையும், மொழி உணர்வையும் வெளிக்கொண்டு வருவதாகவே இருக்கும்.
இதை வேறு ஒரு கோணத்தில் பார்க்க வேண்டும் என்றால், மும்மொழி விவகாரத்தை அரசு கையில் எடுத்து, அது எடுபடாமல் போனதால், அடுத்த கட்டமாக, மத்திய அரசுக்கு எதிராக இனம், மொழி என்ற ஆயுதத்தை, இந்த அரசு ஏந்த ஆரம்பித்துள்ளது என்று நினைக்கத் தோன்றுகிறது.
பாரதிதாசனுக்கு பெருமை சேர்க்கும் முயற்சி என தமிழர் வார விழாவை அறிவித்துள்ள அரசு, அவர் பெயரில் அமைந்துள்ள பல்கலையை விரிவுபடுத்தாமல், எல்லைகளை சுருக்கும் வகையில், கருணாநிதி பெயரில் பல்கலையை அமைக்க உள்ளது. இது, பாரதிதாசன் பெயரை சுருக்குவதாகவே உள்ளது.
இதற்கு பதில், தஞ்சையில் உள்ள தமிழ்ப் பல்கலைக்கு, கருணாநிதி பெயரை சூட்டுவது சிறப்பாக இருக்கும். பாரதிதாசன் பல்கலை எல்லையும் மாறாமல் இருக்கும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

