அர்த்தமற்ற பேச்சுக்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து நேரத்தை வீணடிப்பானேன்?
அர்த்தமற்ற பேச்சுக்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து நேரத்தை வீணடிப்பானேன்?
ADDED : டிச 17, 2024 05:11 AM

அன்றாடம் வெளியாகும் நாளிதழ்களில், நம் கவனத்தை ஈர்க்கும் விதத்தில் அதிக இடத்தை ஆக்கிரமித்துக் கொண்டிருக்கும் செய்திகளானவை பிரபலங்களும், பிரபலங்கள் என்று தங்களை பிரகடனப்படுத்தப் போராடும் ஜூனியர் பிரபலங்களும், பொதுமேடையில் தனக்கு கிடைத்த அரிய வாய்ப்பை பயன்படுத்தி, எதையாவது உளறிக் கொட்டிய செய்தியும், அதற்காகவே காத்துக்கொண்டிருந்த அவர்களின் எதிர்ப்பாளர்கள் எழுப்பிய கண்டனக்குரல் பற்றிய தகவலுமாகத்தான் இருக்கின்றன.
ஒருவர் தெரிவித்த கருத்துக்கு, அடுத்தவர் மறுப்பு தெரிவிக்கும் வாய்ப்புள்ள இந்த சமூகத்தில், ஆக்கப்பூர்வமாக செலவிட வேண்டிய அறிவு, திறமை, நேரத்தை அவசியமற்ற வகையில் வீணடித்துக் கொண்டிருக்கின்றனர்.
அவற்றை அப்படியே இயற்கை மரணம் அடைய விடாமல் குத்திக் கிளறி, தங்களின் சொந்தக் கருத்துக்களைத் திணித்து புத்துயிர் கொடுத்து பிழைக்க வைத்து, பொதுவெளியில் விவாதப்பொருளாக உலவ விடுகின்றனர்.
அஞ்சுவதுமில்லை
இரண்டு துறவிகள் நடைபயணமாக, ஊர் ஊராகச் சென்று கொண்டிருந்த போது, ஒரு ஆற்றைக் கடந்து செல்ல நேரிட்டது. நீரின் அளவும், வேகமும் பயப்படுமளவுக்கு இல்லாததால், இருவரும் ஆற்றில் இறங்கி கடக்க முடிவு செய்தனர்.
அப்போது அங்கு, ஆற்றை கடக்கும் துணிவு இல்லாமலும், ஆடை நனைந்து விடும் என்ற அச்சத்திலும், ஒரு அழகிய இளம் பெண் நின்று கொண்டிருந்தாள்.
இதைக் கண்ட துறவிகளில் ஒருவர், சட்டென்று அவளைத் துாக்கித் தன் தோளில் சுமந்து, மறு கரையில் இறக்கி விட்டு எவ்வித சலனமுமின்றி நடக்கத் துவங்கினார்.
சற்று துாரம் சென்றதும், அவருடன் வந்த மற்றொரு துறவி, 'நாம் துறவிகள் என்பதை மறந்துவிட்டீரா? ஒரு இளம் பெண்னை தோளில் சுமந்து வருவது தவறு என்று உங்களுக்கு தோன்றவில்லையா?' என்று கேட்டார்.
முதல் துறவி பதிலேதும் சொல்லாமல் நடந்து கொண்டிருந்தார். சற்று துாரம் சென்றதும் உடன்வந்த துறவி, 'என்ன இருந்தாலும் துறவியான நீர், அந்த பெண்ணை துாக்கி வந்ததை எவ்விதத்திலும் நியாயப்படுத்த முடியாது' என்றார்.
அதற்கும் பதிலேதும் சொல்லாமல் நடந்து கொண்டிருந்தார் முதல் துறவி. சற்று துாரம் போனதும், உடன் வந்தவர் மீண்டும், 'என்ன, நான் கேட்டுக் கொண்டேயிருக்கிறேன்... பதிலேதும் சொல்லாமல் மவுனம் சாதிக்கிறீரே... குற்ற உணர்வா?' என்று கேட்டார்.
அதற்கு அந்த முதல் துறவி, 'நான் அந்த பெண்ணை தோளில் தான் சுமந்து வந்தேன்; கரையிலேயே இறக்கி விட்டுவிட்டேன். நீர் ஏனைய்யா இன்னும் அவளை மனதில் சுமந்து கொண்டே வருகிறீர்? தயவுசெய்து இறக்கி விடுமய்யா!' என்றாரே பார்க்கலாம்! வெட்கத்தால் தலைகுனிந்து மவுனமானார் உடன்வந்த துறவி.
ஒருவரது கருத்து, அவருக்கு மட்டுமே சொந்தமானது. அதை தெரிவிப்பதும் தெரிவிக்காமல் மனதுக்குள்ளேயே முடக்கிப் போட்டிருப்பதும் அவரது சொந்த விருப்பம். அதேபோல், அவர் வெளியிடும் கருத்துக்களை ஏற்றுக்கொள்வதும், ஒதுக்கித் தள்ளுவதும் அதைக் கேட்கும் வாய்ப்புக் கிடைத்த அத்தனை பேருடைய விருப்பம் மற்றும் உரிமை.
அறிவும், ஆற்றலும் மிக்கவர்கள், இதுபோன்ற அர்த்தமற்ற விமர்சனங்களைப் பொருட்படுத்துவதுமில்லை; கண்டு அஞ்சுவதுமில்லை.
ஒருமுறை, புத்தபிரானை கடுமையான சொற்களால் ஒருவர் திட்டியபோது கேட்டுக்கொண்டு எவ்வித சலனமும் இல்லாமல் இருந்தாராம்.
இதைக் கண்டு வேதனையடைந்த ஒருவர், புத்தரிடம் காரணம் கேட்டபோது, 'ஒருவர் உங்களுக்கு மனமுவந்து கொடுக்கும் பரிசை நீங்கள் வாங்க விரும்பாமல் மறுத்துவிட்டால், அது யாருக்கு சொந்தமாகும்? கொடுக்க முன்வந்தவருக்குத்தானே?
'நான் விரும்பாத ஒன்று, என் விருப்பமின்றி என்னை வந்து சேரமுடியாது, எனும்போது, அதை நினைத்து நான் ஏன் வருந்த வேண்டும் அல்லது பதிலளிக்க வேண்டும். அவருக்கு சொந்தமானது அவரிடமே இருக்கட்டும்' என்றாராம்.
சமூக ஊடகம் என்ற பொதுமேடை, பிரபலப் பிரியர்கள் மற்றும் சுயநலமிக்க சந்தர்ப்பவாதிகளின் குரூர எண்ணங்களுக்கு வடிவம் கொடுக்க உதவுகிறது.
வியாபார நோக்கத்துடன் ஆரம்பிக்கப்படும், 'யு டியூப்' சேனல்களில் பேட்டி எடுப்பவர், தன் திறமையால் தான் பெற நினைக்கும் வில்லங்கமான விளக்கத்தை, பேட்டி கொடுப்பவரின் வாயிலிருந்து வரவழைத்து விடுகின்றனர்.
கூடுதலாக, அந்த பதிவிற்கு கொஞ்சமும் சம்பந்தம் இல்லாமல், படித்த உடன் பார்க்கத் துாண்டும் வகையில் தலைப்பு கொடுத்து விடுகின்றனர்.
ஒரு பிரபல மதத்தின் தலைமை குரு, விமானத்தில் பாரிஸ் நகரம் வந்து இறங்கினார். விமான நிலையத்தில் பத்திரிகை நிருபர்கள் பேட்டி கண்டனர். அதில் ஒரு குறும்புக்கார நிருபர், 'நீங்கள் பாரிசில் தங்கியிருக்கும் போது இரவு விடுதிகளுக்கு செல்வீர்களா?' என்று கேட்டார்.
ஆக்கப்பூர்வமான கேள்வி
இந்த கேள்வியை சற்றும் எதிர்பார்க்காத மதகுரு, அதற்கு சாதுர்யமாக பதிலளிக்க விரும்பி, 'அப்படி ஒன்று இங்கு இருக்கிறதா என்ன?' என்று கேட்டு வைத்தார்.
அடுத்தநாள் அந்த பத்திரிகையில் வந்த தலைப்புசெய்தி, 'பிரபல மத குரு, பாரிஸ் விமான நிலையத்தில் இறங்கியவுடன் கேட்ட முதல் கேள்வி, 'இங்கு இரவு விடுதிகள் ஏதும் இருக்கிறதா?' என்பது தான்' என்றிருந்தது.
கருத்தாழத்துடன் பேசுவதற்கு மட்டுமல்ல; ஆக்கப்பூர்வமான கேள்விகள் கேட்பதற்கும், அவற்றிற்கு அர்த்தம் செறிந்த பதிலளிப்பதற்கும் அறிவும், திறமையும் வேண்டும்.
நகைச்சுவை நடிகர் நாகேஷ், தன் வாழ்க்கையில் சில பிரச்னைகளை கடந்து வந்த நேரம். இலங்கை வானொலியில் அவரிடம் ஒருவர், 'எல்லாரையும் சிரிக்க வைக்கும் உங்களுடைய வாழ்க்கை பயணம் எப்படி?' என்று கேட்டார். அதற்கு அவர், 'பம்பாய்க்கு இதுதான் வழி என்று காட்டும் கைகாட்டி மரம், இதுவரை பம்பாய் போனதில்லை' என்று சொன்னார்!
ஜார்ஜ் பெர்னாட்ஷாவை ஒரு பொதுக்கூட்டத்தின்போது சந்தித்த அழகிய இளம் பெண் ஒருவர், 'நீங்களும் நானும் திருமணம் செய்து கொண்டால், நமக்கு பிறக்கும் குழந்தைகள் என்னைப் போன்று அழகாகவும், உங்களைப் போன்று அறிவோடும் இருந்தால் எப்படியிருக்கும்!' என்று கேட்டாராம்.
பெர்னாட்ஷா, 'மாறாக என்னைப் போன்ற அழகுடனும், உன்னைப் போன்ற அறிவுடனும் பிறந்து விட்டால், அந்த ஜந்து இந்த சமுதாயத்தில் எப்படி உயிர் வாழும்?' என்று கேட்டாராம்.
பெர்னாட்ஷா தோற்றத்தில் அழகில்லாதவர் என்பது ஒருபுறமிருக்க, ஒரு உலகப்புகழ் பெற்ற அறிஞரிடம், இப்படி நாகரிகமற்ற வினாவை எழுப்பிய பெண்ணின் அறிவீனத்தை, நாசுக்காக சுட்டிக்காட்டிய விதம், பெர்னாட்ஷாவின் பேச்சுத் திறமைக்கு ஒரு எடுத்துக்காட்டு.
இதுவே தற்போதைய சூழலில் நிகழ்ந்திருந்தால், பெர்னாட்ஷாவும் எதிர்ப்பை சந்தித்திருக்கலாம்.
மிகப்பெரிய மகான்களும், மிகச்சிறந்த மேதைகளும், ஞானிகளும் சொல்லிச் சென்ற, வாழ்க்கைக்கு மிகவும் தேவையான அறிவுரைகளைக்கூட, காற்றில் பறக்கவிட்ட இந்த சமுதாயம், ஒன்றுக்கும் உதவாத வாய்ச்சொல் வீரர்களின் பிதற்றல்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து, கடுமையான எதிர்ப்பு தெரிவித்து, அது என்னவோ இந்த சமுதாயத்தையே புரட்டிப் போடும் மந்திரச்சொல் போல் பெரிதுபடுத்தி, அவர்களை பிரபலப்படுத்துவதன் மூலம், அவர்கள் இந்த சமுதாயத்தில் முக்கியமானவர்கள் என்றும், அவர்கள் தெரிவிக்கும் கருத்து முக்கியத்துவம் வாய்ந்தது என்றும் ஒப்புக்கொண்டது போல் ஆகிறது.
இதுதான் அவர்களின் உள்நோக்கம்; அது நிறைவேறிவிட்ட திருப்தி அவர்களுக்கு!
பரபரப்பான செய்திகளுக்காக காத்துக்கிடக்கும் ஊடகங்களுக்கு தீனிபோடும் விதமாக, அரசியல்வாதிகள் ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டும் நோக்கத்தில், ஒருவர் செய்த ஊழலையும், அந்தரங்க வாழ்க்கையையும் மற்றொருவர் வெளிப்படுத்த, இறுதியில் இருவருடையதும் அம்பலமாகி விடுகிறது.
பிரபலமானவர்கள், அதிலும் குறிப்பாக அரசியல் மற்றும் திரைத்துறையில் இருப்பவர்கள், என்ன தான் உயர்ந்த நிலையில் பிறர் பொறாமைப்படும் இடத்தில் இருந்தாலும் விளக்குக்கு கீழ் இருக்கும் நிழல் போல், அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையில் தவிர்க்க முடியாத சில பின்னடைவுகள் இருக்கத்தான் செய்கிறது.
நியாயமான வழி
அதை தேவையில்லாமல் அம்பலப்படுத்தி மகிழ்ச்சியை அனுபவிப்பது, பொறாமையின் வெளிப்பாடு, மனிதாபிமானமற்ற செயல்.
கடந்த காலத்தில், மஞ்சள் பத்திரிகை நடத்தி திரையுல பிரபலங்களின் தனிப்பட்ட வாழ்க்கையை அநாகரிகமான முறையில் அம்பலப்படுத்தி வந்த ஒருவர் கொலை செய்யப்பட்டு, அது தொடர்பாக இரண்டு புகழ்பெற்ற திரைப்பட நடிகர்கள், சிறைக்கு சென்று திரும்பிய சரித்திரம் பலரும் அறிந்ததே.
அடுத்தவரின், குறிப்பாக பிரபலங்களின் அந்தரங்கத்தை அறிவதில் மக்கள் காட்டும் ஆர்வமே இது போன்று அவதுாறு பரப்புபவர்கள் உருவாகக் காரணம்.
நல்ல சந்தர்ப்பத்தை நன்றாக பயன்படுத்திக் கொள்வோர்தான் வாழ்வில் முன்னேற முடியும், ஆனால் அந்த சந்தர்ப்பம் நியாயமான வழியில் வந்ததாகவும் அடுத்தவரை பாதிக்காததாகவும் இருக்க வேண்டியது அவசியம்.