கோவையில் தலைவிரித்தாடும் தண்ணீர் தட்டுப்பாடு! கண்டுக்காத திராவிடக்கட்சிகள்
கோவையில் தலைவிரித்தாடும் தண்ணீர் தட்டுப்பாடு! கண்டுக்காத திராவிடக்கட்சிகள்
ADDED : மார் 25, 2024 06:42 AM

கோவையில் தண்ணீர் தட்டுப்பாடு அதிகரித்து வரும் நிலையில், சிறுவாணி அணையைத் துார் வாரவும், கூடுதலாகத் தண்ணீர் எடுக்கவும் தமிழக-கேரள மாநிலங்களை ஆளும் தி.மு.க.,-மா.கம்யூ.,கட்சிகள் நடவடிக்கை எடுக்காமல், தேர்தலில் மட்டும் கூட்டு வைத்துக் கொண்டுள்ளன.
கோவை மாநகராட்சியின் மக்கள் தொகை, 20 லட்சத்தைத் தாண்டியுள்ளது. தற்போது கோவை நகருக்கான குடிநீர்த் தேவையை, பவானி அணை மற்றும் சிறுவாணி அணைகள் தான் பூர்த்தி செய்து வருகின்றன.
மாநகராட்சியின் 68 வார்டுகளுக்கு, பவானி அணையிலிருந்து தினமும் 40 கோடி லிட்டர் தண்ணீரும், 32 வார்டுகளுக்கு சிறுவாணி அணையிலிருந்து, 10 கோடி லிட்டர் தண்ணீரும் எடுக்கப்படுகிறது. இவற்றைத் தவிர்த்து, குறிச்சி, குனியமுத்துார் பகுதிகளை உள்ளடக்கிய தெற்கு மண்டலப் பகுதிகளில் மட்டும், ஆழியாறு குடிநீர் திட்டத்தில் தினமும், 70 லட்சம் லிட்டர் தண்ணீர் கிடைக்கிறது.
இவற்றில் சிறுவாணி அணையில் எடுக்கப்படும் தண்ணீர், கோவை வழித்தடத்திலுள்ள ஏழு பேரூராட்சிகள் மற்றும், 10 ஊராட்சிகள் உள்ளிட்ட, 28 கிராமங்களுக்கும் குடிநீராக விநியோகிக்கப்படுகிறது.
மொத்தம் 50 அடி உயரமுள்ள அணையில், 650 மில்லியன் கனஅடி தண்ணீர் தேக்க முடியும். வழக்கமாக, இரு பருவமழைக் காலங்களிலும் சிறுவாணி அணை நிரம்பும். அதன் அடிப்படையில் தான், தினமும் 10.14 கோடி லிட்டர் தண்ணீர் எடுக்கப்பட்டு வந்தது. ஆனால் கடந்த ஆண்டில் பருவமழை குறைவாலும், அதிகளவு தண்ணீர் எடுக்கப்பட்டதாலும் அணையின் நீர் மட்டம் வேகமாகச் சரிந்துவிட்டது. இப்போது வெயிலின் தாக்கம் அதிகரித்து, நாளுக்கு நாள் அணையின் நீர் வெப்பத்தால் உறிஞ்சப்பட்டு, அணை வறண்டு வருகிறது.
தண்ணீர் தட்டுப்பாடு
நான்கு நாளுக்கு ஒரு முறை குடிநீர் விநியோகிக்கப்படும் பழைய மாநகராட்சிப் பகுதிகளில், ஏழு நாளுக்கு ஒரு முறை விநியோகிக்கப்படுகிறது. ஏற்கனவே வாரத்துக்கு ஒரு முறை அல்லது 10 நாளுக்கு ஒரு முறை குடிநீர் வந்த இணைப்புப் பகுதிகளில், இப்போது 15 நாளுக்கு ஒரு முறை மட்டுமே குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது.
தற்போது சிறுவாணி அணையின் நீர் மட்டம் சரிந்ததால், அந்தப் பகுதிகளுக்கும் பில்லுார் குடிநீர்த் திட்டங்களில் குடிநீர் விநியோகிப்பதால், ஒட்டுமொத்தமாக தண்ணீர் தட்டுப்பாடு அதிகரித்து வருகிறது. சிறுவாணி அணையில் பெருமளவு சேறும், சகதியும் இருப்பதால் தான், விரைவாக நிரம்பும் அணை, அதை விட விரைவாகவே வற்றி விடுகிறது. பில்லுார் அணையிலும் பல அடி உயரத்துக்கு சேறு நிறைந்துள்ளது.
துார் வாருவதே தீர்வு
இவ்விரு அணைகளையும் துார் வாருவதே, நீர் இருப்பை அதிகரிப்பதற்கான ஒரே வழியாகும். பில்லுார் அணையைத் துார் வாருவது, தமிழக அரசின் கையில் உள்ளது. ஆனால் சிறுவாணி அணை, கேரளா வனப்பகுதியில் அமைந்திருப்பதால், அதைத் துார் வாரவும், கூடுதலாக தண்ணீர் எடுக்கவும், கேரள அரசின் ஒப்புதல் தேவை.
கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக வலியுறுத்தப்பட்டு வரும் இந்த கோரிக்கைக்கு, கேரள அரசு செவிசாய்ப்பதாகவே இல்லை. இதைத் துார் வாருவதால், கேரள அரசுக்கு எந்த விதத்திலும் பாதிப்புமில்லை.
கண்டுக்காத திராவிடக்கட்சிகள்
இத்தனைக்கும் கேரள அரசை ஆண்ட காங்கிரஸ், கம்யூ., இரு கட்சிகளுடனும், இங்கு ஆண்ட தி.மு.க., மற்றும் அ.தி.மு.க., ஆகிய இரு கட்சிகளுமே பல்வேறு காலகட்டங்களில் கூட்டணி வைத்திருந்தன.
இப்போதும் கேரளாவை ஆளும் மா.கம்யூ., கட்சியும், தமிழகத்தை ஆளும் தி.மு.க.,வும் ஒரே கூட்டணியில் உள்ளன. இப்போதும் இந்தக் கோரிக்கையை நிறைவேற்றும் அக்கறை, தி.மு.க., அரசுக்கு இல்லை. தற்போது கோவை எம்.பி.,யாக இருக்கும் நடராஜன், மா.கம்யூ., கட்சியைச் சேர்ந்தவராக இருந்தும், அவரும் இதற்காக பேசவேயில்லை.
அலைய வைத்த ஆட்சியாளர்கள்
இரு கட்சியினருமே எந்த முயற்சியும் எடுக்காத காரணத்தால் தான், இப்போது கோவை மக்கள் தெருத்தெருவாக குடங்களைத் துாக்கிக் கொண்டு, அலைய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அணை வற்றியுள்ளபோதே, துார் வாரும் பணியை துவக்குவது அவசர அவசியம்.
தமிழக முதல்வர் ஸ்டாலின், அரசியல் தேவைக்காக சமீபத்தில் கேரளாவுக்குச் சென்று, கேரள முதல்வர் பினராயி விஜயனை சந்தித்த போதும், இதைப் பற்றி எதுவுமே பேசவில்லை. இதிலிருந்தே, மக்கள் நலனை விட, அரசியல் செய்வதே இரு கட்சிகளுக்கும் முக்கியம் என்பது அப்பட்டமாகத் தெரிகிறது. கோவை மக்கள், தங்களுடைய ஓட்டுக்களால் தான், இந்த சந்தர்ப்பவாத அரசியலுக்கு வேட்டு வைக்க வேண்டும்.
-நமது நிருபர்-

