ADDED : பிப் 10, 2024 05:58 AM

மதுரை: பாரத் அரிசி, பாரத் ஆட்டா (மாவு) போல மத்திய அரசு தென்னை விவசாயிகளிடமிருந்து கொப்பரையை கொள்முதல் செய்து பாரத் தேங்காய் எண்ணெய் விற்பனைக்கு கொண்டு வரவேண்டும் என தமிழக தென்னை விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.
இந்தியாவில் 22 மாநிலங்களில் ஒரு கோடியே 10 லட்சம் தென்னை விவசாயிகள் உள்ளனர். தமிழகம், கேரளா, கர்நாடகாவில் மட்டும் 80 சதவீத தேங்காய் உற்பத்தி ஆகிறது.
இது உள்நாட்டு எண்ணெய் வித்து என்பதால் மத்திய அரசு பாரத் தேங்காய் எண்ணெய்யாக விற்பனை செய்து விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உயர்த்த வேண்டும் என தமிழக விவசாயிகள் சங்க தலைவர் ஈசன் முருகசாமி, பாரதிய கிசான் சங்க தேசிய துணைத்தலைவர் பெருமாள் தெரிவித்தனர்.
அவர்கள் மேலும் கூறியதாவது:
தமிழகத்தில் முப்பது ஆண்டுகளாக ரேஷன் கடைகள் மூலம் வழங்கப்படும் பாமாயில், இந்தோனேசியா, மலேசியா, பிலிப்பைன்ஸ், தாய்லாந்தில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. மாதம் குறைந்தபட்சம் 2 கோடி லிட்டர் பாமாயில் இறக்குமதி ஆகிறது. ஒரு லிட்டர் ரூ.100க்கு வாங்கி கார்டுதாரர்களுக்கு ரூ.25க்கு அரசு விற்கிறது.
மீதி ரூ.75 மக்களின் வரிப்பணத்தில் இருந்து மானியமாக வெளிநாட்டு வியாபாரிகளுக்கு போகிறது.
தமிழகத்தில் ஆண்டுக்கு 10 கோடி லிட்டர் தேங்காய் எண்ணெய்யும், கடலை எண்ணெய்யையும் சேர்த்தால் 24 கோடி லிட்டர் எண்ணெய் உற்பத்தி ஆகிறது. எனவே உள்நாட்டு தேங்காய் எண்ணெய், கடலை எண்ணெய்க்கு மானியம் தரும் வகையில் அரசு திட்டத்தை நெறிமுறைப்படுத்த வேண்டும். விவசாயிகள் உற்பத்தி செய்த தேங்காய் எண்ணெய்யை மானிய விலையில் வாங்கி ரேஷன் கடையில் விற்பனை செய்தால் விவசாயிகளுக்கும் நல்ல விலை கிடைக்கும். ஒரு மாதம் பாமாயில் அடுத்த மாதம் தேங்காய் எண்ணெய் என வழங்கினால் தென்னை சாகுபடி பரப்பு அதிகரிக்கும்.
பாரத் தேங்காய் எண்ணெய்
மத்திய அரசு கொப்பரைக்கான குறைந்தபட்ச ஆதார விலையாக கிலோவுக்கு ரூ.111.60 நிர்ணயித்து விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்கிறது. ஆனால் 30 சதவீதம் மட்டுமே கொள்முதல் செய்வதால் மீதி 70 சதவீத கொப்பரை காய்களுக்கு வெளி மார்க்கெட்டில் கிலோ ரூ.80 ஐ விட குறைந்த விலையே கிடைக்கிறது.
மத்திய அரசு கொள்முதல் செய்யும் கொப்பரை காய்களை டன் கணக்கில் வெளி மார்க்கெட்டில் குறைந்தபட்ச ஏலத்திற்கு விற்பனை செய்கிறது. அதற்கு பதிலாக தேசிய 'நாபெட்' நிறுவனம் மூலம் கொப்பரையைப் பெற்று அவற்றை தேங்காய் எண்ணெய்யாக உற்பத்தி செய்ய வேண்டும். இதன் மூலம் பாரத் அரிசி, பாரத் ஆட்டா, பாரத் சன்னா, பாரத் வெங்காயம் என்பது போல பாரத் தேங்காய் எண்ணெய் என 100 மில்லி தேங்காய் எண்ணெய் ரூ.20க்கு விற்கலாம். மத்திய மாநில அரசுகள் உதவினால் தமிழகத் தென்னை விவசாயிகளால் உற்பத்தியை பெருக்க முடியும் என்றனர்.