தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/செய்திகள்/ப்ரீமியம்/ கேரள சட்டசபை தேர்தலிலும் பா.ஜ., சாதிக்குமா?

 கேரள சட்டசபை தேர்தலிலும் பா.ஜ., சாதிக்குமா?

 கேரள சட்டசபை தேர்தலிலும் பா.ஜ., சாதிக்குமா?


ADDED : டிச 16, 2025 05:01 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 16, 2025 05:01 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கேரளாவில் சட்டசபை தேர்தல் நடக்க சில மாதங்களே இருக்கின்றன. அதற்கு முன்னோட்டமாக நடந்த உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் வெற்றி காற்று யார் பக்கம் வீசப் போகிறது என்பதை உணர்த்தி இருக்கிறது.

ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான இடதுசாரி ஜனநாயக முன்னணி, எதிர்க்கட்சியான காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி என இதுவரை கேரள அரசியல் இருமுனை போட்டியை மட்டுமே பார்த்து வந்தது.

மும்முனை போட்டி



ஆனால், உள்ளாட்சித் தேர்தலில், 45 ஆண்டுகளாக இடதுசாரிகள் வசம் இருந்த திருவனந்தபுரம் மாநகராட்சியை பா.ஜ., கைப்பற்றியதன் மூலம் மும்முனை போட்டிக்கான வாய்ப்பு அதிகரித்துள்ளது.

மொத்தம், 505 கிராம ஊராட்சிகள், 79 ஊராட்சி ஒன்றியங்கள், 7 மாவட்ட ஊராட்சிகள், 54 நகராட்சிகள் மற்றும் 4 மாநகராட்சிகளில் காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சி கூட்டணி வென்றுள்ளது. அதே சமயம், இந்த உள்ளாட்சித் தேர்தலில் பா.ஜ.,வின் செல்வாக்கும் வலுவாக அதிகரித்திருப்பதை நிச்சயம் மறுக்க முடியாது.

தலைநகரான திருவனந்தபுரம் மாநகராட்சியை பெரும்பான்மை பலத்துடன் கைப்பற்றியதுடன், 26 ஊராட்சி ஒன்றியங்கள், 4 நகராட்சிகளிலும் அக்கட்சி வெற்றியை சுவைத்துள்ளது.

ஆட்சியில் இருக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி கூட்டணிக்கு இந்த உள்ளாட்சித் தேர்தலில் பலத்த அடி விழுந்து இருக்கிறது.

ஊழல் புகார்



ஆளுங்கட்சியாக இருந்தபோதிலும், கோழிக்கோடு மாநகராட்சியில் மட்டுமே வெற்றியை ஈட்டியுள்ளது. இது தவிர, 340 கிராம ஊராட்சிகள், 63 ஊராட்சி ஒன்றியங்கள் மற்றும், 28 நகராட்சிகளில் ஆளும் கூட்டணி வெற்றி பெற்றுள்ளது.

இது கடந்த கால தேர்தலில் பெற்ற வெற்றியை விட குறைவானதாக பார்க்கப்படுகிறது. இடதுசாரிகளின் கோட்டையாக கருதப்பட்ட பல ஊராட்சிகள் தற்போது காங்கிரஸ் மற்றும் பா.ஜ., வசம் சென்று இருக்கின்றன.

கடந்த நான்கரை ஆண்டுகளாக பெரிய அளவில் மக்கள் நலத்திட்டங்களை மேற்கொள்ளாத முதல்வர் பினராயி விஜயன், கடைசி நேரத்தில் அவசர, அவசரமாக திட்டங்களை அறிவித்தது தான் இந்த தோல்விக்கு மிக முக்கிய காரணமாக பார்க்கப் படுகிறது.

இடதுசாரிகளின் சந்தர்ப்பவாத அரசியல், ஊழல் குற்றச்சாட்டுகள், தங்க கடத்தல் வழக்கு, சபரிமலை தங்கம் திருடு போன விவகாரம் ஆகியவையும் இதில் சேர்ந்து கொண்டன.

ஆளுங்கட்சிக்கு எதிராக எழுந்திருக்கும் இந்த மனநிலையை, வரும் சட்டசபை தேர்தலில் பா.ஜ., சரியாக பயன்படுத்துமா, உள்ளாட்சித் தேர்தலில் கிடைத்த வெற்றியை சாதகமாக்குமா என்பது தான் கேரள அரசியலில் எழுந்திருக்கும் பெரும் கேள்வி.

எதிர்பார்ப்பு



கடந்த லோக்சபா தேர்தலில் யாருமே எதிர்பார்க்காத அளவில் திருச்சூர் தொகுதியில் பா.ஜ., சார்பில் போட்டியிட்ட நடிகர் சுரேஷ் கோபி வெற்றி பெற்றிருந்ததை மறந்து விட முடியாது.

தேர்தலுக்கான வெற்றி விதையை பா.ஜ., ஏற்கனவே ஊன்றிவிட்டது என்றே தோன்றுகிறது. அதற்கான பலன் உள்ளாட்சித் தேர்தலில் கிடைத்துள்ளது. எனவே, வரும் சட்டசபை தேர்தலிலும், பா.ஜ., கணிசமாக தொகுதிகளை அறுவடை செய்யும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. இரண்டாவது இடத்துக்கான போட்டியில் கூட பா.ஜ., வென்றால் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.

- நமது சிறப்பு நிருபர் -

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us