பெட்ரோலில் எத்தனால் கலப்பால் வாகனங்களின் 'மைலேஜ்' குறையுமா? வதந்திகளுக்கு மத்திய அரசு மறுப்பு
பெட்ரோலில் எத்தனால் கலப்பால் வாகனங்களின் 'மைலேஜ்' குறையுமா? வதந்திகளுக்கு மத்திய அரசு மறுப்பு
ADDED : ஆக 07, 2025 12:53 AM

புதுடில்லி: பெட்ரோலில், 20 சதவீத எத்தனால் கலப்பதால் வாகனங்களின் 'மைலேஜ்' குறையும் என சமூக வலைதளங்களில் பரவும் செய்திக்கு, மத்திய அரசு மறுப்பு தெரிவித்துள்ளது.
இந்தியா தன் எண்ணெய் தேவையில் 85 சதவீதம் வரை இறக்குமதி செய்கிறது. எத்தனால் கலந்த பெட்ரோல் திட்டத்தின் கீழ், 2014-ல் பெட்ரோலில் எத்தனால் கலப்பு விகிதம் வெறும் 1.5% உடன் துவங்கியது.
கடந்த, 2022, ஜூன் மாதத்தில் பெட்ரோலில் 10 சதவீதம் எத்தனால் கலப்பு என்ற இலக்கு எட்டப்பட்டது. இந்நிலையில் தற்போது நிர்ணயிக்கப்பட்ட கால அளவான 2030-ஐ காட்டிலும் ஐந்து ஆண்டுக்கு முன்னதாகவே 20 சதவீதம் எத்தனால் கலப்பு இலக்கு எட்டப்பட்டதாக மத்திய அரசு சமீபத்தில் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், பெட்ரோலில் 20 சதவீதம் எத்தனால் கலப்பதால், வாகனங்களின் மைலேஜ் குறையும் என்ற கருத்து சமூக வலைதளங்களில் பரவியது. காங்கிரஸ் தலைவர்களும் இந்த குற்றச்சாட்டை முன்வைத்தனர்.
இந்தக் குற்றச்சாட்டுகள் உண்மைக்குப் புறம்பானவை என, மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து மத்திய அரசு வெளியிட்ட அறிக்கை:
எத்தனால், பெட்ரோலை விட குறைவான ஆற்றல் அடர்த்தி கொண்டது என்பதால், மைலேஜில் சிறிது குறைவு ஏற்படலாம். எனினும், இது பெரிய பாதிப்பை ஏற்படுத்தாது.
மேலும், 20- சதவீத எத்தனால் கலப்புக்கு ஏற்றவாறு வடிவமைக்கப்பட்ட வாகனங்களில் மைலேஜ் 2 சதவீதம் வரை மட்டுமே குறையக்கூடும்; பிற வாகனங்களில் மைலேஜ் 6 சதவீதம் வரை குறையக்கூடும்.
இந்த சிறிய அளவிலான மைலேஜ் குறைவை, இன்ஜின் டியூனிங்கில் மேம்பாடுகள் செய்வதன் மூலம் சரிசெய்யலாம்.
ஒரு லிட்டர் எரிபொருளில் 800 மி.லி., பெட் ரோல் 200 மி.லி., எத்தனால் கலந்து விற்கப்படும் 'இ20' எரிபொருள் திட்டத்தால் கச்சா எண்ணெய்க்காக வெளிநாடுகளைச் சார்ந்திருப்பது குறையும்; கரியமில வாயு வெளியேற்றம் குறையும்; விவசாயிகளின் வருவாய் அதிகரிக்கும்.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

