'வி.சி., கட்சிக்கு ஆட்சியில் பங்கு கொடுப்பாரா முதல்வர் ஸ்டாலின்' : நயினார் நாகேந்திரன் கேள்வி
'வி.சி., கட்சிக்கு ஆட்சியில் பங்கு கொடுப்பாரா முதல்வர் ஸ்டாலின்' : நயினார் நாகேந்திரன் கேள்வி
ADDED : ஜூலை 14, 2025 01:30 AM

விருதுநகர்:: “முதல்வர் ஸ்டாலின் கூட்டணி கட்சியான விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு, ஆட்சியில் பங்கு கொடுப்பாரா,” என விருதுநகரில், தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
பூத் கமிட்டி கலந்தாய்வில் பங்கேற்ற அவர் கூறியதாவது:
பா.ஜ., பூத் கமிட்டிகளை வலிமையாக்க, முதற்கட்டமாக விருதுநகர், கன்னியாகுமரி, திருநெல்வேலி, துாத்துக்குடி, தென்காசி லோக்சபா தொகுதிகளிலுள்ள பூத் கமிட்டிகளுக்கு வெளிமாவட்டங்களில் இருந்து பொறுப்பாளர்கள் நியமிக்கப்படுகின்றனர்.
வரும் 2026 சட்டசபை தேர்தலில் எங்கள் கூட்டணி ஆட்சி அமைக்கவும், தி.மு.க., ஆட்சியை அகற்ற வேண்டும் என்பதற்காகவும் பயணத்தை துவங்கியுள்ளோம்.
திருவண்ணாமலை கூட்டத்தில், அ.தி.மு.க., கூட்டணி டிபாசிட் இழக்கும் என்று துணை முதல்வர் உதயநிதி கூறியது அவரது தனிப்பட்ட கருத்து.
தி.மு.க., ஆட்சிக்கு வந்த பின் அடிமை மாடல், பாசிச அரசியலை செய்து வருகிறது. ஆளுங்கட்சியினர், பெரும்பான்மையான மக்கள் மனதை புண்படுத்தும்படியாக நடந்து கொள்கின்றனர்.
ராஜா எம்.பி., மற்றும் முன்னாள் அமைச்சர் பொன்முடி, பெண்களை தவறாக பேசியுள்ளனர்.
அரசு பள்ளிகளில், 'ப' வடிவில் மாணவர்களை அமர வைப்பதை விட அவர்களுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுப்பது மிகவும் முக்கியம்.
ஆட்சிக்கு வந்து இரண்டரை ஆண்டுகள் கழித்து, லோக்சபா தேர்தலுக்காக மட்டுமே தி.மு.க., அரசு குடும்ப தலைவியருக்கு, மாதம் 1,000 ரூபாய் வழங்கியது.
அடுத்தாண்டு தேர்தல் வருவதால் விடுபட்ட குடும்ப தலைவியருக்கு, தற்போது 1,000 ரூபாய் வழங்கப்படும் என்கின்றனர். 2026ல் தி.மு.க., ஆட்சிக்கு வராது.
இவ்வாறு அவர் கூறினார்.