ஜல்லிக்கட்டு காளைகளுக்கு தி.மு.க., அறிவித்த மாதம் ரூ.1,000 ஊக்கத் தொகை கிடைக்குமா?
ஜல்லிக்கட்டு காளைகளுக்கு தி.மு.க., அறிவித்த மாதம் ரூ.1,000 ஊக்கத் தொகை கிடைக்குமா?
ADDED : அக் 21, 2025 05:08 AM

தமிழகத்தில் ஜல்லிக்கட்டு காளைகளை பராமரிக்க, அதை வளர்ப்போருக்கு மாதந்தோறும், 1,000 ரூபாய் ஊக்கத்தொகை வழங்குவதாக, தி.மு.க., அறிவித்த நிலையில், நான்கு ஆண்டுகள் கடந்தும் வழங்கவில்லை என, ஜல்லிக்கட்டு காளை வளர்ப்பவர்கள் விரக்தியடைந்துள்ளனர்.
உழவர்களின் உற்ற தோழனாக விளங்கும் மாடுகளை குளிக்க வைத்து பொங்கலிட்டு வணங்கி நன்றி செலுத்தும் விழாவாகவே மாட்டுப் பொங்கல் விழா கொண்டாடப்படுகிறது. சங்க இலக்கியமான கலித்தொகையில் ஏறு தழுவுதல் பற்றி தெளிவாக உள்ளது. தமிழக கிராமங்களில், ஜல்லிக்கட்டு காளைகளை, பலர் பராமரித்து வருகின்றனர்.
கடந்த, 2021ல், சட்டசபை தேர்தலின்போது, தி.மு.க., தேர்தல் அறிக்கையில், 373வது அறிக்கையாக, 'தமிழகத்தின் வீரம், பண்பாடு, கலாச்சாரத்தின் அடையாளமாக திகழும் ஜல்லிக்கட்டு காளை வளர்ப்பவருக்கு, ஊக்கத் தொகையாக, மாதம் தோறும், 1,000 ரூபாய் வழங்கப்படும்' என, தெரிவிக்கப்பட்டது.
கடந்த, 2023ல், இத்திட்டத்தை செயல்படுத்துவதற்காக, அனைத்து மாவட்டங்களிலும், ஜல்லிக்கட்டு காளை குறித்து, கால்நடை பராமரிப்புத்துறை மூலம் கணக்கெடுப்பு செய்து, காளை இனம், உரிமையா ளர் விபரங்கள் குறித்து பதிவு செய்து, தமிழக அரசுக்கு அனுப்பி வைத்தனர்.
இதற்கான அரசாணை, அதே ஆண்டில் வெளியிடப்படும் என, எதிர்பார்த்த நிலையில், இதுநாள் வரை அறிவிப்பு வெளியாகவில்லை. நான்கு ஆண்டுகளுக்கு மேலாகியும், தி.மு.க., தேர்தல் அறிக்கையில் தெரிவித்த, இத்திட்டம் நடைமுறைப்படுத்தாமல் உள்ளதால், ஜல்லிக்கட்டு காளை உரிமையாளர்கள் விரக்தியில் உள்ளனர்.
காளை உரிமையாளர் கந்தசாமி கூறியதாவது:
தமிழகத்தில், 19 மாவட் டங்களில், 352 இடங்களில், ஜல்லிக்கட்டு, எருது விடுதல், மஞ்சுவிரட்டு என, விழா நடைபெறுகிறது. 2024-25ல், 214 இடங்களில், இவ்விழா நடந்துள் ளது. ஆண்டுதோறும் 26,000 காளைகள் பங்கேற்கிறது.
பூர்வீக காளை இனங்களான, காங்கேயம், உம்பளச்சேரி, ஆலம்பாடி, பர்கூர், புலிகுளம் போன்ற காளைகள், ஜல்லிக்கட்டில் பங்கேற்கிறது. தமிழக அளவில், 1.14 லட்சம் காளைகள் உள்ளன. தி.மு.க., தேர்தல் அறிக்கையில், ஜல்லிக்கட்டு காளைகளுக்கு, மாதம், 1,000 ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்படும் என, அறிவித்தது.
ஆனால், இதுநாள் வரை, அந்த அறிவிப்பை செயல்படுத்தவில்லை. வரும் ஜன., மாதம், பொங்கல் விழாவில், ஜல்லிக்கட்டு துவங்கும் நிலையில், தமிழக அரசு, இத்திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
- நமது நிருபர் -: