குடும்ப தொழிலை பாதுகாக்க கர்நாடகாவுக்கு துணை போவதா?
குடும்ப தொழிலை பாதுகாக்க கர்நாடகாவுக்கு துணை போவதா?
ADDED : நவ 14, 2025 05:33 AM

சென்னை: கர்நாடகாவில் உள்ள குடும்ப தொழிலை பாதுகாக்க, மேகதாது அணை பிரச்னையில் கர்நாடக அரசுக்கு, தி.மு.க., ஆட்சியாளர்கள் துணையாக இருப்பதாக, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி குற்றஞ்சாட்டியுள்ளார்.
அவரது அறிக்கை:
தமிழகத்தின் ஜீவ நதியான காவிரி நீரை நம்பித்தான், டெல்டா மாவட்ட விவசாயிகளின் வாழ்வாதாரம் இருக்கிறது. 20 மாவட்ட மக்களின் குடிநீர் ஆதாரமாகவும் காவிரி நதி உள்ளது.
மேகதாதுவில் அணை கட்டுவதற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க, கர்நாடக அரசுக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்திருப்பது அதிர்ச்சியையும், வேதனையையும் அளிக்கிறது.
தமிழகத்தை பாலைவனமாக்கும் கர்நாடக அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து, உச்ச நீதிமன்றத்தில் கடுமையான வாதங்களை வைக்காமல், இத்தீர்ப்புக்கு வழிவகுத்த அரசை, மேகதாதுவில் அணை கட்டப்பட்டால், காவிரியில் உள்ள நம் உரிமைகள் அனைத்தும் பறிக்கப்படும் என்று, ஏற்கனவே அ.தி.மு.க., சார்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டிருந்தது.
கடந்த 2024 பிப்ரவரி 1ம் தேதி, டில்லியில் நடந்த காவிரி மேலாண்மை ஆணையத்தின் 28வது கூட்டத்தில், மேகதாது அணை பிரச்னையை கர்நாடக அரசு எழுப்பியது.
அப்போது, தி.மு.க., அரசு மவுனமாக இருந்ததற்கு, கண்டனம் தெரிவித்தேன்.
அனைத்தையும் மீறி, உச்ச நீதிமன்றத்தில் இதுபோன்ற தீர்ப்பு வருவதற்கு, கர்நாடகாவில் உள்ள தங்களுடைய குடும்பத் தொழிலை காப்பதற்காக உறுதுணையாக இருந்த தி.மு.க., ஆட்சியாளர்களின் செயல், மன்னிக்க முடியாத குற்றம்.
மேகதாது அணை விவகாரத்தில் தமிழகத்தின் உரிமையை மீட்க, தி.மு.க., அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

