மசூத் அசார், ஹபீஸ் சயீத் ஒப்படைக்கப்படுவார்களா? இந்திய - பாக்., பதட்டம் நீங்க தற்காலிக தீர்வு
மசூத் அசார், ஹபீஸ் சயீத் ஒப்படைக்கப்படுவார்களா? இந்திய - பாக்., பதட்டம் நீங்க தற்காலிக தீர்வு
UPDATED : மே 10, 2025 07:21 PM
ADDED : மே 10, 2025 07:50 AM

பயங்கரவாதிகளின் புகலிடமான பாகிஸ்தான் உள்ளது. சர்வதேச பயங்கரவாதி ஒசாமா பின்லேடன் பாகிஸ்தானில் பதுங்கி வாழ்ந்தபோது தான், அமெரிக்க படைகளால் கொல்லப்பட்டார்.
மும்பை தொடர் குண்டுவெடிப்புக்கு காரணமான, தாவூத் இப்ராஹிமுக்கு பாக்., தஞ்சம் அளித்தது. 2008ல், மும்பை தாக்குதல், தற்போது பஹல்காமில் பயங்கரவாத தாக்குதல் நடத்திய லஷ்கர் இ தொய்பா தலைவன் ஹபீஸ் சயீத், பல ஆண்டுகளாக பாகிஸ்தானில் பதுங்கி வாழ்ந்து வருகிறார்.
வழக்கு ஒன்றில் தண்டனை பெற்று, தற்போது பாக்., நீதிமன்ற உத்தரவின்படி சிறை வைக்கப்பட்டுள்ளார். ஆனால், வீட்டையே சப்-ஜெயிலாக மாற்றி, ராஜபோக வாழ்க்கை வாழ்ந்து வருகிறார்.
இதேபோல், இந்திய பார்லிமென்ட் தாக்குதல், உரி, பதான்கோட் தாக்குதல் நடத்திய ஜெய்ஷ்-இ-முகமது தலைவன் மசூத் அசார், பாகிஸ்தானில் பல ஆண்டுகளாக பதுங்கி வாழ்ந்து வருகிறார். கடந்த 7ம் தேதி அதிகாலை, பாகிஸ்தான் பகவல்பூரில் இந்தியா நடத்திய தாக்குதலில், மசூத் அசார் உறவினர்கள், கூட்டாளிகள் உட்பட 15 பேர் கொல்லப்பட்டனர். இதில் மசூத் அசார் மட்டும் தப்பி உள்ளார்.
கொல்லப்பட்ட பயங்கரவாதிகளின் இறுதிச் சடங்கில், பாக்., ராணுவ அதிகாரிகள் சீருடையுடன் பங்கேற்று, 'ராயல் சல்யூட்' செய்தது, சர்வதேச கவனத்தை ஈர்த்துள்ளது. பாக்., அரசும், ராணுவமும் பயங்கரவாதிகளுக்கு எத்தகைய ராஜ மரியாதை அளிக்கிறது என்பதற்கு இந்த சம்பவமே பெரிய உதாரணம்.
நமது நாட்டில் எல்லை தாண்டிய பயங்கரவாதத்துக்கு காரணமான, சர்வதேச பயங்கரவாதிகள் மசூத் அசார், ஹபீஸ் சயீத் ஆகிய இரண்டு பயங்கரவாதிகளையும், பாகிஸ்தான் ஒப்படைத்தால், தற்போதைய பதட்டமான சூழலுக்கு தீர்வு கிடைக்கும். சமாதான நடவடிக்கைக்கான பேச்சு துவங்குவதாக இருந்தால், இதுவே இந்தியாவின் முக்கிய கோரிக்கையாக இருக்கும்.
போர் நிறுத்தம்
இதற்கிடையே, இரு நாடுகளும், இன்று மே 10ம் தேதி மாலை 5 மணி முதல் போர் நிறுத்தம் செய்து அறிவிப்பு வெளியிட்டுள்ளன. இரு நாடுகளின் ராணுவ அதிகாரிகள் பேச்சுவார்த்தையை தொடர்ந்து இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.