வீடுகளில் சோலார் மின் உற்பத்திக்கு 'நெட்வொர்க்' கட்டணம் ரத்தாகுமா?
வீடுகளில் சோலார் மின் உற்பத்திக்கு 'நெட்வொர்க்' கட்டணம் ரத்தாகுமா?
UPDATED : ஏப் 05, 2025 07:23 AM
ADDED : ஏப் 05, 2025 02:31 AM

துாத்துக்குடி:மின் தேவையை கருத்தில் கொண்டு, வீட்டு கூரைகளில் சூரிய தகடுகள் அமைத்து, மின் உற்பத்தி செய்ய, மத்திய, மாநில அரசுகள் மானியம் வழங்கி வருகின்றன. இதனால், பல்வேறு தரப்பினர் கூரைகளில் சோலார் தகடுகள் அமைத்து மின் உற்பத்தி செய்து வருகின்றனர்.
கூரையில் சூரிய சக்தி மின்சாரம் உற்பத்தி செய்பவர்களுக்கு, மின்துறை சார்பில் நெட்வொர்க் கட்டணம் விதிக்கப்படுகிறது. இதனால், உரிமையாளர்கள் பாதிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
'எம்பவர் இந்தியா' நுகர்வோர் மற்றும் சுற்றுச்சூழல் கல்வி ஆராய்ச்சி நடுவத்தின் கவுரவ செயலர் சங்கர் கூறியதாவது:
சூரிய சக்தி வாயிலாக மின்சாரம் உற்பத்தி செய்து, மின் வாரியத்திற்கு 'கிரிட்' வாயிலாக அனுப்பும் போது, அந்த மின்சாரத்தை எடுப்பதற்கான கட்டணமே நெட்வொர்க் கட்டணம் எனப்படுகிறது. இது தொடர்பாக, நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு, நெட்வொர்க் கட்டணத்தை ரத்து செய்ய நீதிமன்றமும் ஏற்கனவே உத்தரவு பிறப்பித்துள்ளது.
தவறு என்று நீதிமன்றமே கூறியும், நெட்வொர்க் கட்டணம் வசூலிப்பதால், மின் நுகர்வோர் மிகவும் பாதிக்கப்படுகின்றனர். இதனால் தங்கள் கூடுதல் உற்பத்திக்கான கட்டமைப்பை திரும்ப ஒப்படைத்து வருகின்றனர்.
வீட்டின் பயன்பாடு போக, மீதமுள்ள மின்சாரத்தை மின் வாரியத்திற்கு அனுப்பும் போது அதற்கான கட்டணத்தையும் தருவதில்லை.
எனவே, வீட்டு கூரை மின் உற்பத்திக்கு நெட்வொர்க் கட்டணத்தில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும். வீட்டின் பயன்பாடு போக, மீதமுள்ள மின்சாரம் மின் வாரியத்திற்கு வழங்கப்பட்டால், அந்த மின்சாரத்திற்கான கட்டணத்தையும் வழங்க மின்துறை முன்வர வேண்டும். முதல்வர் இந்த விவகாரத்தில் தலையிட்டு உரிய ஆணை பிறப்பிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.