மத்திய அமைச்சர்களிடம் மனு அளிப்பது பிரச்னைக்கு தீர்வாகுமா?: அண்ணாமலை கேள்வி
மத்திய அமைச்சர்களிடம் மனு அளிப்பது பிரச்னைக்கு தீர்வாகுமா?: அண்ணாமலை கேள்வி
ADDED : நவ 19, 2026 06:12 AM

சென்னை: 'காவிரி தொழில்நுட்ப குழுமத்துக்கு, துணைத் தலைவரை நியமிக்காதது ஏன்' என, 'வீ த லீடர்ஸ்' அமைப்பின் தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பி உள்ளார்.
அவரது அறிக்கை: காவிரி தொழில்நுட்பக் குழுமம் மற்றும் மாநிலங்களுக்கு இடையிலான நீர்ப்பிரிவின் துணைத் தலைவராக இருந்த செல்வராஜ், கடந்த ஜூன் மாதம், ராஜினாமா செய்தார். இன்று வரை, புதிய துணைத் தலைவரை நியமிக்கவில்லை.
தமிழகத்தின் நீராதார உரிமைகள் மற்றும் மாநிலங்களுக்கு இடையிலான, நதி நீர் பிரச்னைகளை கையாள்வதில், முக்கிய பங்கு வகிக்கும் பதவியை நிரப்ப, காலதாமதம் செய்வது, த.வெ.க., அரசின் நிர்வாகத் திறன் மற்றும் பொறுப்புணர்வு குறித்த கேள்விகளை எழுப்புகிறது.
ஒரு புறம், டெல்டா மாவட்டங்களில், சம்பா சாகுபடிக்கு தண்ணீர் கிடைக்காமல், விவசாயிகள் கவலையில் உள்ளனர். மறுபுறம், காவிரி நீர் பங்கீட்டு பிரச்னை தொடர்கிறது. மேகதாது அணை விவகாரம், சவாலாக நீடிக்கிறது.
இத்தனை பிரச்னைகள் இருக்கும்போது, அவற்றை கையாள வேண்டிய பதவி காலியாக இருப்பது, எவ்வளவு பெரிய நிர்வாகக் குறைபாடு? தமிழக அமைச்சர்கள் ஆனந்த், ஆதவ் அர்ஜுனா ஆகியோர், மத்திய நீர்வளத்துறை அமைச்சரை சந்தித்து, மேகதாது அணை தொடர்பாக, மனு அளிப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளன.
தமிழகத்தின், சொந்த நிர்வாக கட்டமைப்பை வலுப்படுத்தி, முக்கிய பொறுப்புகளுக்கான நியமனங்களை உரிய நேரத்தில் மேற்கொள்ளாமல், மத்திய அமைச்சரை சந்தித்து மனு அளிப்பது, பிரச்னைகளுக்கு தீர்வாகி விடும் என, த.வெ.க., அரசு நினைக்கிறதா? இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
