தைப்பூச விழாவில் ஸ்டாலின் பங்கேற்பாரா: பா.ஜ., கேள்வி
தைப்பூச விழாவில் ஸ்டாலின் பங்கேற்பாரா: பா.ஜ., கேள்வி
UPDATED : டிச 22, 2025 07:35 AM
ADDED : டிச 22, 2025 04:42 AM

சென்னை: 'கிறிஸ்துமஸ் விழாவில், மத மோதலை ஏற்படுத்தும் வகையில், முதல்வர் ஸ்டாலின் பேசியிருப்பது, கடும் கண்டனத்திற்குரியது' என, பா.ஜ., தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.
அவர்களின் அறிக்கை:
பா.ஜ., மகளிர் அணி தேசிய தலைவர் வானதி:
திருநெல்வேலியில் நடந்த கிறிஸ்துமஸ் விழாவில் பங்கேற்ற முதல்வர் ஸ்டாலின், 'தமிழகத்தின் அமைதியை எப்படி சீர்குலைக்கலாம் என பலர் யோசிக்கின்றனர். மதத்தின் பெயரில் உணர்வுகளை துாண்டுவோரை சந்தேகப்படுங்கள். கவனமாக இருங்கள்' என, வசனம் பேசி உள்ளார்.
மத உணர்வுகளைத் துாண்டுவது தி.மு.க.,தான். கிறிஸ்துமஸ் விழாவில் பங்கேற்ற முதல்வர் ஸ்டாலின், தீபாவளி, விநாயகர் சதுர்த்தி, தைப்பூசம் போன்ற ஹிந்து பண்டிகைகளில் பங்கேற்பதில்லை.
இது மதங்களுக்கு இடையே நீங்கள் காட்டும் பாகுபாடு இல்லையா? வரும் பிப்., 1ல் தமிழ் கடவுள் முருகபெருமானின் தைப்பூசம் வருகிறது. அந்த விழாவில் பங்கேற்க முதல்வர் தயாரா?
ஹிந்து கோவில்களுக்கு திருப்பணி செய்வது, தி.மு.க.,வோ, தி.மு.க., அரசோ அல்ல. ஹிந்துக்களின் காணிக்கையில் தான், அந்த திருப்பணிகள் நடக்கின்றன.
திருப்பரங்குன்றம் தீபத்துாணில் தீபம் ஏற்ற, உயர் நீதிமன்றம் உத்தரவிட்டும், செயல்படுத்தாமல், அராஜகத்தில் ஈடுபட்டது தி.மு.க., அரசு. தமிழக அமைதியை சீர்குலைக்க நினைப்பது தி.மு.க., அரசுதான். அந்த விழாவில், 'சிறுபான்மையினரின் ஓட்டுகளை, தி.மு.க.,வினர் சேர்ப்பர்' என ஸ்டாலின் பேசி இருக்கிறார்.
போலி வாக்காளர்களை சேர்த்து வெற்றி பெறுவோம் என்பதைத்தான், பூடகமாக கூறியுள்ளார். இது, தேர்தல் கமிஷனுக்கு விடுக்கப்பட்ட சவால்.
தமிழக பா.ஜ., மூத்த தலைவர் தமிழிசை:
முதல்வராக இருக்கும் ஒருவர், இதை விட மத வேற்றுமையோடு பேச முடியாது. கிறிஸ்துமஸ் விழாவில், அவர்களுக்கு வாழ்த்து சொல்வதை விட, பா.ஜ.,வுக்கு எதிராக விஷத்தை தான் கக்கி இருக்கிறார்.
'அனைத்து மதத்தினரும் வாழ்த்துகளையும், உணவுகளையும் பரிமாறிக் கொள்வதுதான் தமிழகம்' என சொல்லும் முதல்வர், என்றாவது ஹிந்து மத விழாக்களுக்கு, ஹிந்து சகோதர, சகோதரியருக்கு வாழ்த்துகளை பரிமாறி இருக்கிறாரா?
ஹிந்து மதத்தின் மீது, வெறுப்பை உமிழ்ந்துவிட்டு; மத வேற்றுமையை, கிறிஸ்துமஸ் மேடையில் விதைத்து விட்டு; மற்றவர்கள் மீது குறை கூற, முதல்வருக்கு எந்த தார்மீக உரிமையும் இல்லை.
பைபிள் வாசகங்களை பெருமையாக குறிப்பிடும் முதல்வர், பகவத் கீதை வாசகங்களை, என்றாவது குறிப்பிட்டு இருக்கிறாரா? ஏன் ஹிந்துக்கள் மீது மட்டும் இவ்வளவு பகை?
எந்த ஹிந்துவும் மாற்று மதத்தினரை, பகைவராக பார்ப்பதில்லை. ஆனால், முதல்வராக இருக்கும் நீங்கள், ஹிந்து பகையை விதைத்துக் கொண்டிருக்கிறீர்கள். இது மன்னிக்க முடியாத குற்றம். இவ்வாறு, அவர்கள் தெரிவித்துள்ளனர்.

