ரயில் திட்டங்களை விரைவுபடுத்த கர்நாடகாவை பின்பற்றுமா தமிழகம்?
ரயில் திட்டங்களை விரைவுபடுத்த கர்நாடகாவை பின்பற்றுமா தமிழகம்?
ADDED : ஆக 01, 2026 04:40 AM

சென்னை: தமிழகத்தில் நடக்கும் பல்வேறு ரயில் பாதை திட்டப் பணிகளை விரைவுபடுத்தும் விஷயத்தில், கர்நாடக அரசை தமிழகம் பின்பற்ற வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.
பெரும்பாலான ரயில் திட்டங்கள், பல ஆண்டுகளாக மெதுவாகவே நடக்கின்றன. குறிப்பாக, தமிழகத்தின் முக்கிய திட்டமான சென்னை -மாமல்லபுரம் - கடலுார் 179 கி.மீட்டர்; திண்டிவனம் -- செஞ்சி - திருவண்ணாமலை 70; திண்டிவனம் -- நகரி 179; அத்திப்பட்டு - புத்துார் 88; ஈரோடு - - பழனி 91 கி.மீ., உள்ளிட்ட திட்டங்கள் பல ஆண்டுகளாக நடந்து வருகின்றன.
போதிய நிதியின்மை, நிலம் கையகப்படுத்துவதில் சிக்கல் போன்ற காரணங்கள் முக்கியமானதாக இருக்கின்றன. எனவே, ரயில் திட்டங்களை விரைந்து நிறைவேற்ற, மாநில அரசுகள் ரயில்வேயுடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என, ரயில்வே அமைச்சகம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
அந்த வகையில், கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநில அரசுகள், ரயில்வேயுடன் ஒப்பந்தம் செய்து, ரயில்வே திட்டப் பணிகளை துரிதப்படுத்தி வருகின்றன.
இது குறித்து, தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது: தமிழக அரசுடன் இணைந்து, ரயில் திட்டப் பணிகளை மேற்கொள்ள தெற்கு ரயில்வே தயாராக இருக்கிறது. குறிப்பாக, கர்நாடக அரசு மேற்கொண்ட ஒப்பந்தத்தின்படி, கர்நாடகா மாநிலம் பெய்யப்பனஹள்ளி - ஓசூர் இரட்டை ரயில் பாதை 48 கி.மீ., திட்டம், 1,160 கோடி ரூபாய் மதிப்பில் செயல்படுத்தப்படுகிறது.
மத்திய அரசு மற்றும் கர்நாடக அரசு, தலா 50 சதவீதம் செலவு பங்கீட்டு முறையில் ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. கடந்த மார்ச் நிலவரப்படி, இந்த திட்டத்துக்கு 699 கோடி ரூபாய் செலவிடப்பட்டு உள்ளது.
நடப்பு நிதி ஆண்டில், 124 கோடி ரூபாய், ரயில்வே அமைச்சகம் ஒதுக்கி பணிகள் மேற்கொண்டு வருகிறோம்.
மொத்தமுள்ள 48 கி.மீ., பாதையில், ஹீலாலிகே மற்றும் பெல்லந்துார் இடையே, 14 கி.மீ., ஏற்கனவே பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள பகுதிகளில் பல்வேறு நிலைகளில் பணிகள் நடந்து வருகின்றன.
மாநில அரசின் பங்களிப்பு கிடைப்பதால், ரயில் பாதை திட்டப்பணிகளை விரைந்து முடிக்க முடியும். எனவே, தமிழக அரசும், ரயில்வேயுடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என, தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். தெற்கு ரயில்வே அதிகாரிகளும், தமிழக அரசிடம் விரைவில் பேச்சு நடத்த உள்ளனர். இவ்வாறு அவர்கள் கூறினர்.
