ADDED : அக் 19, 2024 01:36 AM

தளவாய்சுந்தரம் பதவி பறிப்புக்கு பின், நாளை தென் மாவட்டங்களுக்கு செல்லும் அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமிக்கு உற்சாக வரவேற்பு அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கன்னியாகுமரியில் நடந்த ஆர்.எஸ்.எஸ்., அணிவகுப்பில் பங்கேற்றதால், அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் தளவாய் சுந்தரத்திடம் இருந்த அமைப்புச்செயலர், கன்னியாகுமரி கிழக்கு மாவட்டச்செயலர் பதவிகள் பறிக்கப்பட்டன.
அந்த நடவடிக்கைக்கு பின், பழனிசாமி நாளை திருநெல்வேலி செல்கிறார். கட்சி நிர்வாகியின் இல்ல திருமண விழாவில் பங்கேற்கிறார். மாநகர் மாவட்டச்செயலர் தச்சை கணேஷ்ராஜா ஏற்பாட்டில், பழனிசாமிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட உள்ளது.
பின், அம்பாசமுத்திரத்தில் நடக்க உள்ள அ.தி.மு.க.,வின் 53வது ஆண்டு விழா பொதுக்கூட்டத்தில் பேசுகிறார்.
அதற்கான ஏற்பாடுகளை, மாவட்டச்செயலர் இசக்கி சுப்பையா செய்து வருகிறார்.
இதற்காக அம்பை வரும் பழனிசாமியிடம், தளவாய் சுந்தரத்திற்கு மீண்டும் கட்சி பதவிகள் வழங்குவது தொடர்பாக, இசக்கி சுப்பையா பேச உள்ளதாக கூறப்படுகிறது.
இந்த கூட்டத்தில் பங்கேற்கும் பழனிசாமி, உட்கட்சி தேர்தல், பொதுக்குழு குறித்து, முக்கிய அறிவிப்புகளை வெளியிடுவார் என்ற எதிர்பார்ப்பும் அக்கட்சி வட்டாரங்களில் எழுந்துள்ளது.
- நமது நிருபர் -