கோவையில் இன்று முதல்வர் சாட்டை... உடையுமா அ.தி.மு.க.,வின் கோட்டை?
கோவையில் இன்று முதல்வர் சாட்டை... உடையுமா அ.தி.மு.க.,வின் கோட்டை?
ADDED : நவ 05, 2024 04:42 AM

ரெயின்கோட் அணிந்து கொண்டு, நகர்வலத்துக்கு புறப்பட்டாள் சித்ரா.
ஸ்கூட்டரின் பின் இருக்கையில் அமர்ந்து கொண்ட மித்ரா, ''என்னக்கா, நம்மூருக்கு மறுபடியும் சி.எம்., ஸ்டாலின் வர்றாரே... ஏதாச்சும் ஸ்பெஷல் ஸ்கீம் அறிவிப்பாங்களா...'' என, விவாதத்தை அறிவித்தாள்.
''மித்து... ஏற்கனவே அறிவிச்ச திட்டங்கள் ஏகப்பட்டது இன்னும் செய்யாம இருக்காங்க. இருந்தாலும், 2021ல கோட்டை விட்ட மாதிரி, 2026ல விட்டுடக் கூடாதுன்னு நினைக்கிறாங்க. 10 தொகுதியையும் கைப்பத்தியாகணும்னு கட்சி மேலிடத்துல இருந்து கட்டளை வந்திருக்காம்...''
''அதெல்லாம் கட்சியில உள்குத்து வேலை செய்றவங்களை களையெடுத்தா தானே நடக்கும். சொந்தக்கட்சிக்காரங்களுக்கு சூனியம் வைக்கிறவங்கள முக்கியமான பதவில ஒக்கார வச்சு அழகு பார்த்தா எப்படி ஜெயிக்கிறதுன்னு உடன்பிறப்புகள் புலம்பிட்டு இருக்காங்க... போத்தனுார் மண்டபத்துல நடக்குற கட்சி நிர்வாகிகள் ஆய்வு கூட்டத்துல ஒரு பிடி பிடிச்சா புத்துணர்ச்சியா இருக்கும். அசால்ட்டா விட்டுட்டாங்கன்னா ஜெயிக்கிறது கஷ்டமாயிடும். 2021ல சொற்ப ஓட்டு வித்தியாசத்துல தொகுதி கைவிட்டுப் போனது மாதிரி, நழுவி போயிடும்னு அலாரம் அடிச்சிருக்காங்க,''
''சி.எம்., என்ன பேசுவாரு; என்னென்ன நடவடிக்கை எடுப்பாருன்னு பார்ப்போம். கட்சியில களையெடுப்பு உறுதியா இருக்கும்னு சொல்றதுனால, லோக்சபா எலக்சன்ல உள்ளடி வேலை பார்த்தவங்க கலக்கத்துல இருக்காங்க. பதவி நிலைக்குமா அல்லது பறிச்சிடுவாங்களோன்னு உள்ளூற நடுக்கத்துல இருக்காங்களாம். இதேநேரத்துல, போட்டியாளர்களை 'காலி' செய்யணும்னு நினைக்கிறவங்களும் மறைமுகமா காய் நகர்த்திட்டு இருக்காங்களாம்,''
நிகழ்ச்சி நிரல் மாற்றம்
''சி.எம்., நிகழ்ச்சி நிரல் அடிக்கடி மாறிட்டே இருக்குதாமே...''
''ஆமாக்கா... உண்மைதான்! ஆரம்பத்துல கலெக்டர் ஆபீசுக்கு வர்றாருன்னு சொல்லியிருந்தாங்க. அதனால, தடபுடலா மீட்டிங் ஹால் ரெடி பண்ண ஆரம்பிச்சாங்க. கலெக்டர் ஆபீஸ் பில்டிங்கிற்கு பெயிண்ட் பூச ஆரம்பிச்சாங்க. லோடு லோடா குப்பை அள்ளுனாங்க. இருந்தாலும், ஏடா கூடமா ஏதாச்சும் நடந்தா நல்லா இருக்காதுன்னு நினைச்சு, நிகழ்ச்சியை ரெண்டா பிரிச்சு, செல்வபுரத்துல இருக்கற மண்டபத்துக்கும், பீளமேட்டுல இருக்கற மண்டபத்துக்கும் மாத்திட்டாங்க...''
''ரெண்டு இடத்துக்கு 'சர்ப்ரைஸ் விசிட்' போவாருன்னு தகவல் வந்திருக்கு. அதனால, ரெண்டு இடத்துல 'பக்காவா' ரெடி பண்ணி வச்சிருக்காங்க. அந்த இடங்களுக்கு சி.எம்., போவாரா... அல்லது அவர் நினைக்கிற இடத்துக்கு ஆய்வுக்கு போவாரான்னு தெரியலை,''
மாவட்டத்துக்கு 2 நாள்
''அதெல்லாம் சரி... விஜய் கட்சிக்காரங்க என்ன சொல்றாங்க...''
''அவுங்க எடுத்து வைக்கிற ஒவ்வொரு மூவ், ஆளுங்கட்சிக்கு அலர்ஜியாக இருக்குதாம். மாவட்ட நிர்வாகிகளோடு ஆலோசிச்ச விஜய், மாவட்டம் வாரியா சுற்றுப்பயணம் வர்றதுக்கு ரெடியாகிட்டாரு. ஒவ்வொரு மாவட்டத்துக்கும் ரெண்டு நாள் ஒதுக்கப் போறாராம். முதல் நாள் நலத்திட்ட உதவி வழங்குவாராம். மறுநாள் அந்த மாவட்டத்துக்கு உட்பட்ட அனைத்து தொகுதிக்கும் போயிட்டு வர்ற மாதிரி, சுற்றுப்பயண திட்டம் தயாரிச்சிட்டு வர்றாங்களாம்... கட்சியை மக்களிடம் நேரடியா கொண்டு போறதுக்கு ஒரு ரவுண்டு வரப்போறாராம்,''
''திராவிடக் கட்சிகளுக்கு சமமா களமிறங்கி, காய் நகர்த்துறதுனால, ரொம்பவும் ஜாக்கிரதையா இருக்காங்க. மாநாட்டுக்கு ஆங்காங்கே சுவர் விளம்பரம் செஞ்சிருந்தாங்க. இதுக்கெல்லாம் கட்சிக்காரங்களுக்கு எங்கிருந்து பணம் வந்துச்சுன்னு உளவுத்துறை மூலமா 'என்கொயரி' பண்ணியிருக்காங்க. உளவுத்துறை போலீஸ்காரங்களுக்கு முதல் வேலையே, விஜய் கட்சிக்காரங்களை கண்காணிக்கிறதுதானாம்...''
மணிக்கு நாற்பது ரூபாய்
''அப்படியா...'' என கேட்டபடி, பீளமேடு அருகே உள்ள ஷாப்பிங் மால் அருகே ஸ்கூட்டரை நிறுத்திய சித்ரா, ''கார்ப்பரேஷன் ஸ்டாண்ட்டுல அநியாயத்துக்கு கட்டணம் வசூலிக்கிறாங்களாமே...'' என, கேட்டாள்.
''ஆமாக்கா... உண்மைதான்! அதெல்லாம் கார்ப்பரேஷன் கமிஷனர் வரைக்கும் தகவல் போயிருச்சு; இருந்தாலும் நடவடிக்கை எடுக்கலை. ராஜவீதியில குமரன் மார்க்கெட் பக்கத்துல இருக்கற கார்ப்பரேஷன் ஸ்டாண்ட்டுல ஒரு மணி நேரம் வண்டி நிறுத்தினாலே, 40 ரூபாய் வசூலிக்கிறாங்க. பப்ளிக் கேள்வி கேட்டா... 'நீங்க எங்க வேணும்னாலும் போயி சொல்லிக்கோங்க'ன்னு ரொம்பவும் அசால்டா சொல்றதுனால, அதிருப்தியில போறாங்க. கார்ப்பரேஷன் ஆபீசர்ஸ் கல்லா கட்டுறதுல மட்டும் குறியா இருக்காராம்,''
செயலி செல்லாதாம்
சிக்னல் அருகே நின்று கொண்டிருந்த போலீஸ் ஜீப்பை பார்த்த சித்ரா, ''மித்து, போலீஸ்காரங்க வாகன தணிக்கை செஞ்சா, 'எம் பரிவாகன்' செயலி மூலமா டிஜிட்டல் ஆவணத்தை காட்டலாம்னு ஆர்டர் இருக்கு. இதையெல்லாம் ரேஸ்கோர்ஸ் போலீஸ்காரங்க ஏத்துக்கறதில்லை. 'எம் பரிவாகன்3 செயலி செல்லாது; அசல் ஆர்.சி., இன்சூரன்ஸ் ஜெராக்ஸ் காண்பிச்சாகணும்னு கறார் பண்றாங்க. இல்லேன்னா... கரன்சியை நீட்டணும்; கரன்சி கை மாறியதும் விட்டுடுறாங்க. குறிப்பா இளைஞர்களை டார்கெட் செஞ்சு கலெக்சன் பண்றாங்களாம்,''
''வாகன தணிக்கை செய்றப்போ, கடுமையா நடந்துக்க கூடாதுன்னு போலீஸ் கமிஷனர் ஏற்கனவே 'வார்ன்' பண்ணியிருக்காரு. ஆனா, தணிக்கையில ஈடுபடுற போலீஸ்காரங்க, வாகன ஓட்டிகளிடம் மரியாதை இல்லாம நடந்துக்கிறாங்க,''
கரன்சி கொட்டும் பதவி
''எஸ்.பி., இன்ஸ்., போஸ்ட்டிங் ரொம்ப நாளாவே காலியாக இருக்குதே.... என்ன சமாச்சாரம்னு விசாரிச்சீங்களா...''
''அதுவா... இதுக்கு முன்னாடி எஸ்.பி., இன்ஸ்., பொறுப்புல இருந்தவர் மேல எக்கச்சக்கமா கம்ப்ளைன்ட் வந்திருக்கு; அதனால, அவரை வேற ஊருக்கு மாத்திட்டாங்க; புதுசா வேறு யாரையும் நியமிக்கலை. அந்த போஸ்ட்டிங்கு அஞ்சு பேரை செலக்ட் பண்ணி, உயரதிகாரிகளுக்கு 'லிஸ்ட்' அனுப்பியிருக்காங்க; அதை நிராகரிச்சிட்டாங்களாம்,''
''பதவிக்கு ஆசைப்படுறவங்க 'சீட்'டுல ஒக்கார்ந்ததும் அதிகாரத்தை பயன்படுத்தி இஷ்டத்துக்கு முறைகேடு செய்ய ஆரம்பிச்சிடுறாங்களாம். அதனால, யாரை நியமிக்கறதுங்கிறதுல உயரதிகாரிகளே திணறிட்டு இருக்காங்களாம். பைனலா, லஞ்சம் வாங்குறதுல நியாயமா லஞ்சம் வாங்குற அதிகாரியை நியமிக்க ஆலோசனை நடந்துட்டு இருக்குதாம்...''
''அடக்கொடுமையே... அதென்ன... லஞ்சம் வாங்குறதே தப்பு. லஞ்சம் வாங்குறதிலும் நியாயமா லஞ்சம் வாங்குற அதிகாரி... போலீஸ் துறையில நேர்மையான அதிகாரியா இல்லைங்கிற நிலைமை வந்துரும் போலிருக்கே...''
ஒருத்தருக்கு பந்தோபஸ்து
''ஹிந்து அமைப்பை சேர்ந்த ஒருத்தருக்கு மட்டும் இன்னும் போலீஸ் பாதுகாப்பு போட்டிருக்காங்களாமே...''
''ஆமாப்பா... இதுக்கு முன்னாடி மொத்தம், 16 பேருக்கு பாதுகாப்பு கொடுத்திட்டு இருந்தாங்க. இப்போ, கொலை மிரட்டல் இருக்கற தலைவர்கள், முக்கிய நிர்வாகிகள் ஐந்து பேருக்கு மட்டும் பாதுகாப்பு கொடுக்கறாங்க; மத்தவங்களுக்கான பாதுகாப்பை எடுத்துட்டாங்க. இருந்தாலும், கார்ப்பரேஷன் எலக்சன்ல கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட்ட ஒருத்தருக்கு மட்டும் இன்னமும் பந்தோபஸ்து கொடுக்குறாங்களாம். இதுசம்பந்தமா விசாரிச்சப்போ, அவரது நெருங்கிய சொந்தக்காரர் டி.எஸ்.பி.,யா இருக்கறது வெளிச்சத்துக்கு வந்திருக்கு. இதை வச்சே... ரியல் எஸ்டேட் பிசினஸ் பண்ணிட்டு இருக்காராம். இவருக்கு மட்டும் பந்தோபஸ்து கொடுக்கறது சர்ச்சையை கெளப்பியிருக்குதாம்,'' என்றபடி, ஸ்கூட்டரை ஸ்டார்ட் செய்தாள் சித்ரா.
தப்பா புரிஞ்சுக்கிட்டாரு
பீளமேடு அருகே விளாங்குறிச்சி ரோட்டில் சென்றபோது, எதிரே கார்ப்பரேஷன் ஜீப் வந்தது. அதை கவனித்த மித்ரா, ''என்னக்கா... சி.எம்., வர்றாருன்னு கார்ப்பரேஷன் ஆபீசர்ஸ் தடபுடலா ரெடியாகுறாங்க போலிருக்கே...'' என கேட்டாள்.
''ஆமா, மித்து! கார்ப்பரேஷன் ஆபீசுக்கு திடீருன்னு வந்தா என்ன செய்றதுன்னு, புதுசா பெயிண்ட் அடிச்சாங்க; அலுவலக முகப்பு தெரியலைன்னு நுழைவாயில் பக்கத்துல இருந்த மரங்களின் கிளைகளை வெட்டி வீசியிருக்காங்க. இதையெல்லாம் கேள்விப்பட்டு கார்ப்பரேஷன் கமிஷனர் டென்சன் ஆகிட்டாராம். சம்பந்தப்பட்ட இன்ஜினியரை 'லெப்ட் ரைட்' வாங்கிட்டாராம். அதுக்கு அந்த இன்ஜினியர், மரம் வெட்டியவரிடம் இங்கிலீஷ்ல சொன்னேன்; தப்பா புரிஞ்சுக்கிட்டு கிளையை வெட்டிட்டா ருன்னு சப்பைக்கட்டு காரணம் சொல்லியிருக்காரு. அவரும், ஒரு லேடி இன்ஜினியருக்கும் முன்னிலையில் தான் மரக் கிளைகளை வெட்டி வீசியிருக்காங்க. 'சிசி டிவி' கேமரா பதிவுல பார்த்தா விஷயத்தை கமிஷனர் புரிஞ்சுக்கலாம்னு கார்ப்பரேஷன் ஊழியர்கள் சொல்றாங்க,'' என்றபடி, கணபதியை நோக்கி, ஸ்கூட்டரை முறுக்கினாள் சித்ரா.