மழைநீரில் காக்கா ஆழி அழிந்துவிடுமா? அரசு பதிலால் தீர்ப்பாயம் அதிருப்தி
மழைநீரில் காக்கா ஆழி அழிந்துவிடுமா? அரசு பதிலால் தீர்ப்பாயம் அதிருப்தி
UPDATED : அக் 01, 2024 04:44 AM
ADDED : அக் 01, 2024 12:24 AM

சென்னை, மழைநீரில் காக்கா ஆழி அழிந்துவிடும் என தெரிவித்த தமிழக அரசு மீது, தென் மண்டல பசுமை தீர்ப்பாயம், கடும் அதிருப்தி தெரிவித்து உள்ளது.
'தென் அமெரிக்க மஸ்ஸல் எனும் காக்கா ஆழி வெளியிடும் துர்நாற்றம் உடைய கசடுகளால், இறால், மீன் உள்ளிட்ட கடல் உயிரினங்கள் வாழ முடியாத நிலை ஏற்படுகிறது.
'இதனால், பழவேற்காடு ஏரி போன்ற உப்பங்கழிகளை நம்பியிருக்கும் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது.
'எனவே, அவற்றை அழிக்க உத்தரவிட வேண்டும்' என, குமரேசன் சூளுரன் என்பவர், தீர்ப்பாயத்தில் மனு தாக்கல் செய்தார்.
இதை விசாரித்த தீர்ப்பாயம், 'தமிழக சுற்றுச்சூழல், நீர்வளம், மீன்வளம் ஆகிய துறைகளின் செயலர்கள், தமிழக சதுப்பு நில ஆணைய உறுப்பினர் - செயலர், எண்ணுார், சென்னை, காட்டுப்பள்ளி துறைமுகங்களின் தலைவர்கள் கூட்டத்தை, தமிழக அரசின் தலைமை் செயலர் கூட்டி, காக்கா ஆழியை அழிப்பது குறித்து, ஆலோசித்து முடிவெடுக்க வேண்டும். அதன் விபரங்களை தாக்கல் செய்ய வேண்டும்' என உத்தரவிட்டது.
இந்நிலையில் இந்த வழக்கு, தீர்ப்பாயத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது ஆஜரான தமிழக அரசு வழக்கறிஞர், 'மழைநீரில் காக்கா ஆழி பெருமளவில் அழிந்து விடும்.
எனவே, பருவமழை முடிந்த பின், வரும் ஜனவரியில் காக்கா ஆழியை அழிக்கும் பணிகளை துவங்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது' என்றார்.
தொடர்ந்து தீர்ப்பாய நீதிபதி புஷ்பா சத்யநாராயணா, நிபுணர்குழு உறுப்பினர் சத்யகோபால் ஆகியோர் பிறப்பித்த உத்தரவு:
மழைநீரில் காக்கா ஆழி பெருமளவில் அழிந்துவிடும் என, தமிழக அரசு தெரவிக்கிறது. மழைநீரில் காக்கா ஆழி அழிந்து விடும் என்பதை உறுதிப்படுத்தும் அறிவியல் ஆய்வுகள் உள்ளதா என்பதை, தமிழக அரசு தாக்கல் செய்ய வேண்டும்.
கடல்வாழ் உயிரினங்கள், தாவரங்களை அழிக்கும் காக்கா ஆழியை அழிப்பது குறித்து, ஓராண்டுக்கு முன்பே தீர்ப்பாயம் அறிவுறுத்தியது.
காக்கா ஆழி அழிப்பது தொடர்பாக டாக்டர் எம்.ஜி.ஆர்., மீன்வள கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வள பல்கலை, மத்திய மீன்வள ஆராய்ச்சி நிறுவனம், தேசிய கடல் தொழில்நுட்ப நிறுவனம் ஆகியவை அறிக்கை அளித்துள்ளன. ஆனால், மழைநீர் காக்கா ஆழியை அழிக்கும் என, எந்த ஆய்வறிக்கையும் கூறவில்லை.
கடந்த ஆண்டு சென்னையில் மழை பெய்யவில்லையா? அப்போது காக்கா ஆழி அழியவில்லையா? அப்போது இதை ஏன் தெரிவிக்கவில்லை? காக்கா ஆழியை அழிப்பதற்காக அறிவியல் ஆய்வுகளை தமிழக அரசு தாக்கல் செய்ய வேண்டும். வழக்கின் அடுத்த விசாரணை அக்., 3ல் நடக்கும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.