சென்னை - திருச்சி நெடுஞ்சாலையில் விரைவாக அமையுமா மேம்பாலங்கள்?
சென்னை - திருச்சி நெடுஞ்சாலையில் விரைவாக அமையுமா மேம்பாலங்கள்?
ADDED : ஜன 30, 2024 02:44 AM

சென்னை: கட்டுமான பொருட்கள் விலை உயர்வு, தொழிலாளர்கள் பற்றாக்குறை உள்ளிட்ட காரணங்களால், சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் மேம்பாலங்கள் கட்டும் பணி இழுபறியாக உள்ளது.
சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலை, வட மாவட்டங்கள் மற்றும் தென் மாவட்டங்களை இணைக்கும் முக்கிய சாலையாக உள்ளது.
இச்சாலையில் பரனுார், ஆத்துார், விக்கிரவாண்டி, உளுந்துார்பேட்டை, செங்குறிச்சி, திருமந்துறை, சமயபுரம் உள்ளிட்ட இடங்களில் சுங்க கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
இதன் வாயிலாக தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திற்கு தினமும், 10 - 15 கோடி ரூபாய் வருமானம் வருகிறது. ஆனால், இந்த சாலையை இந்திய சாலை குழுமம் பரிந்துரைப்படி, தேசிய நெடுஞ்சாலை ஆணையம் பராமரிக்கவில்லை.
நான்கு வழியாக உள்ள சாலையில் பல இடங்களில் அணுகுசாலையில் தடுப்புகள் இல்லை. மாவட்ட, ஊரக, நகர்ப்புற சாலைகளில் இருந்து வரும் வாகனங்கள், நேரடியாக சாலையின் மற்றொரு புறத்திற்கு செல்லும் வகையில், பல இடங்களில் சந்திப்புகள் அமைந்துள்ளன.
இந்த சந்திப்புகளில், கிராமப்பகுதிகளில் இருந்து லோடு ஏற்றி வரும் டிராக்டர்கள், ஆட்டோக்கள் உள்ளிட்டவை அதிகளவில் விபத்தில் சிக்குகின்றன.
இதனால், நாட்டில் அதிக விபத்து மற்றும் உயிரிழப்புகள் நடக்கும் சாலைகளில் சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலை முக்கிய இடத்தில் உள்ளது என, தேசிய நெடுஞ்சாலை ஆணையம் கூறியுள்ளது. அதிக விபத்து நடக்கும் கரும்புள்ளி பகுதிகள் நிறைந்த சாலையாகவும் உள்ளது.
இந்த சாலையை இந்திய சாலை குழுமம் பரிந்துரைப்படி முழுமையாக விரிவாக்கம் செய்து, அதன்பிறகே சுங்க கட்டணம் வசூலிக்க வேண்டும் என்று வாகன உரிமையாளர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
எனவே, செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, பெரம்பலுார், திருச்சி மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் மேம்பாலம் கட்டும் பணி தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
விழுப்புரம் மாவட்டத்தில் வேப்பூரில் துவங்கிய மேம்பாலப்பணி பல ஆண்டுகளாக கிடப்பில் உள்ளது.
கட்டுமான தொழிலாளர் பற்றாக்குறை மற்றும் கம்பி, மணல், ஜல்லி, சிமென்ட், கான்கிரீட் கலவை உள்ளிட்ட கட்டுமான பொருட்கள் விலை உயர்வு காரணமாகவும் மேம்பாலம் கட்டும் பணி ஆமை வேகத்தில் நடந்து வருகிறது.
ஒப்பந்த காலம் முடிந்தும் பல இடங்களில் பணி இழுபறியாக உள்ளது. அங்கு அமைக்கப்பட்ட மாற்று சாலைகளும் மழையால் சேதமடைந்துள்ளன. மின்விளக்குகள், எச்சரிக்கை ஸ்டிக்கர்கள் இல்லை.
இரவு நேரங்களில் இந்த இடத்தை கடந்து செல்லும் வாகனங்கள் விபத்தில் சிக்கி வருகின்றன.