இலவசங்கள் அறிவிப்பு வெளியாகுமா? எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள பட்ஜெட்
இலவசங்கள் அறிவிப்பு வெளியாகுமா? எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள பட்ஜெட்
ADDED : ஜூலை 22, 2024 12:40 AM

ஒரு பக்கம் கூட்டணி கட்சிகள் நெருக்கடி, மறுபக்கம் எதிர்க்கட்சிகள் விமர்சனம்; ஒரு பக்கம் பொருளாதார சீர்திருத்தம், மறுபக்கம் மக்கள் நலத் திட்டங்கள் என, பலதரப்பட்ட பிரச்னைகளுக்கு இடையே தாக்கல் செய்யப்பட உள்ள மத்திய பட்ஜெட், பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திஉள்ளது.
மத்தியில் பா.ஜ., தலைமையில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமைந்துள்ள நிலையில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், தொடர்ந்து ஏழாவது முறையாக பட்ஜெட்டை நாளை தாக்கல் செய்ய உள்ளார். இந்த பட்ஜெட் பல வகைகளில் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது.
எதிர்கால திட்டம்
முதலில், இந்த பட்ஜெட் அரசியல் ரீதியில், பா.ஜ.,வுக்கு தெம்பை ஏற்படுத்துமா என்ற எதிர்பார்ப்பு உள்ளது. சமீபத்தில் நடந்த லோக்சபா தேர்தலில், தனிப்பெரும்பான்மை பெற முடியாத நிலையில், கூட்டணி ஆட்சியை பா.ஜ., அமைத்துள்ளது. ஒரு பக்கம் கட்சியின் அரசியல் வளர்ச்சியை உறுதி செய்வதுடன், கூட்டணி கட்சிகளை திருப்திபடுத்துமா என்ற எதிர்பார்ப்பு உள்ளது.
முந்தைய பட்ஜெட்களைப் போல, தொலைநோக்கு பார்வை, எதிர்கால திட்டம் என்றெல்லாம் பிரதமர் நரேந்திர மோடி அரசால் கூற முடியாது. கூட்டணியில் உள்ள கட்சிகளின் விருப்பங்களை நிறைவேற்ற வேண்டிய கட்டாயத்தில் மத்திய அரசு உள்ளது. அவர்களுடைய ஆதரவு வாபஸ் பெறப்பட்டால் ஆட்சி கவிழும் அபாயமும் உள்ளது.
கூட்டணியின் இரண்டு முக்கிய கட்சிகளான, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் மற்றும் பீஹார் முதல்வர் நிதீஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் ஆகியவை, அந்தந்த மாநிலங்களுக்கு சிறப்பு அந்தஸ்து கேட்டு வருகின்றன. இதற்கு சாத்தியமில்லை என்ற நிலையில், இரு கட்சிகளும் பல முக்கிய கோரிக்கைகளை வைத்து உள்ளன.
ஆந்திராவின் புதிய தலைநகர் அமராவதி நிர்மாணத்துக்கான நிதி, போலாவரம் பாசன திட்டம், பிற்படுத்தப்பட்ட மாவட்டங்கள் வளர்ச்சிக்கு நிதி என, மிகப் பெரும் கோரிக்கைகளை சந்திரபாபு நாயுடு முன் வைத்துள்ளார்.
ஐக்கிய ஜனதா தளம் சார்பில், பீஹாரில் ஒன்பது விமான நிலையங்iகள், நான்கு மெட்ரோ திட்டங்கள், ஏழு மருத்துவ கல்லுாரிகள், நீர்மின் நிலையம், 20,000 கி.மீ., துார சாலைகள் புனரமைப்பு என, பல திட்டங்கள் வலியுறுத்தப்பட்டுள்ளன.
முதற்கட்ட கணக்குகளின்படி, இந்த திட்டங்களை செயல்படுத்த, ஆந்திராவுக்கு, 1.5 லட்சம் கோடி ரூபாயும், பீஹாருக்கு, 30,000 கோடி ரூபாயும் தேவைப்படும். இந்த கோரிக்கைகள் மத்திய பட்ஜெட்டில் இடம்பெறுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
அவ்வாறு ஒதுக்கீடு செய்தால், மற்ற மாநிலங்களின் எதிர்ப்பை சந்திக்க நேரிடும். ஏற்கனவே, பா.ஜ., ஆட்சியில் இல்லாத மாநிலங்களுக்கான நிதி முறையாக ஒதுக்கப்படவில்லை என, எதிர்க்கட்சிகள் வரிந்து கட்டியுள்ளன.
சட்டசபை தேர்தல்
இது ஒருபக்கம் இருக்க, மக்களையும் திருப்திபடுத்த வேண்டிய கட்டாயத்தில் பா.ஜ., உள்ளது. குறிப்பாக அடுத்த சில மாதங்களில், பா.ஜ., ஆளும் ஹரியானா, மஹாராஷ்டிரா மற்றும் இண்டியா கூட்டணி ஆளும் ஜார்க்கண்டில் சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது.
எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் பலவற்றில், இலவச திட்டங்கள் அள்ளி வீசப்பட்டன. இலவசங்களுக்கு பா.ஜ.,வும் பிரதமர் மோடியும் எதிரானவர்கள். ஆனால், தற்போது பா.ஜ.,வின் நிலைப்பாட்டில் சிறிய மாற்றம் தெரிகிறது. பா.ஜ., ஆளும் ஹரியானா, மத்திய பிரதேசம், மஹாராஷ்டிராவில் இலவச திட்டங்கள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.
அதுபோல, மத்திய பட்ஜெட்டிலும் அறிவிப்புகள் வெளியாகலாம் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. குறிப்பாக, விவசாயிகளுக்கான உதவித் திட்டங்கள் அதிகரிக்கப்படும் அல்லது புதிய திட்டங்கள் வெளியிடப்படும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.
மேலும், பெண்களை கவரும் வகையில், தமிழகம், கர்நாடகா, மேற்கு வங்கம் உள்பட பல மாநிலங்களில், நிதியுதவி திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. இதுபோன்று, மாதந்தோறும் பெண்களுக்கு உதவித்தொகை கிடைக்கும் வகையிலான திட்டமும் இந்தப் பட்ஜெட்டில் நிர்மலா சீதாராமன் அறிவிப்பார் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.
இதைத் தவிர, வேலைவாய்ப்புகளை அதிகம் உருவாக்கும் திட்டங்கள், நடுத்தர மக்களின் முக்கிய பிரச்னையான வருமான வரி முறைகளில் மாற்றம், தொழில் துறையினரின் பெருத்த எதிர்பார்ப்புகள் போன்றவற்றை நிறைவேற்றும் வகையிலான அறிவிப்புகள், இந்த பட்ஜெட்டில் இடம்பெறலாம் என்ற எதிர்பார்ப்பும் உள்ளது.
-- நமது சிறப்பு நிருபர் -